Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'பா.ஜ.,வோட அடுத்த விக்கெட் நீங்க தான்... அந்த உதறல் உள்ளுக்குள்ள இருக்குறதால தான், இப்பவே, காங்கிரஸ் துணையை தேடுறீங்களோ' என கேட்க தோன்றும் வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி: என் தலைமையிலான திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தால், திரிபுராவின் தேர்தல் முடிவு மாறி இருக்கும். அங்கு, பா.ஜ.,விடம், மார்க்சிஸ்ட் சரணடைந்து விட்டது. மத்திய அரசின் அமைப்புகளை பயன்படுத்தி, 50 சதவீத ஓட்டுகளை பெற்று, பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. 45 சதவீத ஓட்டுகளை, திரிணமுல் காங்., பெற்றுள்ளது. 5 சதவீத ஓட்டுகள் வித்தியாசத்தில் தான், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இதை அக்கட்சி கொண்டாட ஏதும் இல்லை. பா.ஜ.,வின் இந்த வெற்றி, மற்ற மாநிலங்களில் கிடைக்காது.
--

'எங்க ஸ்கூல் காம்பஸ்ல, டமில்ல பேசினா, பைன் போடுவோம்' என, பெருமை பேசும் தமிழக தனியார் பள்ளிகளுக்கு சவுக்கடி தரும் வகையில், மொரீஷியஸ் துணை அதிபர் பரமசிவம் பேச்சு: மொரீஷியசில் வாழும் தமிழர்கள், பல தலைமுறைகளுக்கு முன்பே வந்து விட்டாலும், பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளையும், பள்ளிகளில், சரஸ்வதி பூஜை; பல்கலையில், கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த நாளையும் கொண்டாடி வருகின்றனர். பாரதியார் கவிதைகள், திருவருட்பா, திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட கருத்துக்கள் நிறைந்த தமிழ் நுால்களை படிக்கவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், தமிழை எழுதப்படிக்க சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு, மகாத்மா காந்தி பல்கலை வழியாக, தமிழ் கற்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
---

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: உச்ச நீதிமன்றம், தன் தீர்ப்பில், ஏற்கனவே இருந்த, தமிழகத்தின் பங்கான, 192 டி.எம்.சி.,யில் இருந்து, 14, டி.எம்.சி.,யை குறைத்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு, ஆவியாதல் போக, 159 டி.எம்.சி., மட்டுமே தமிழகத்துக்கு கிடைக்கும். நிலைமை இப்படி இருக்க, மத்திய அரசு, ஆறு வாரங்களுக்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அமைக்க முடியாது என, தெரிவித்துள்ளார். அதனால், நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது வழக்கு தொடர வேண்டும்.

---

'அவங்க, ரெண்டு பேரும் சந்திச்சு பேசினா, உங்களுக்கு ஏங்க வயிறு எரியுது...' என, விசாரிக்க தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை: காவிரி விவகாரம் தொடர்பாக, அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்பு தலைவர்கள் கூடி எடுத்த முடிவிற்குப் பின், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலினை மட்டும், முதல்வர் அழைத்து பேசுவது எந்த வகையில் நாகரிகம் என, தெரியவில்லை. அவர்களின் சந்திப்புக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள், மக்களை குழப்புகின்றன. சட்டசபை தீர்மானங்களை மத்திய அரசு மதிக்காது என்பதால், தமிழக, எம்.பி.,க்கள் ராஜினாமா செய்து, டில்லியில் போராடி, மத்திய அரசை பணிய வைக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement