Advertisement

சாதக சூழ்நிலையை பயன்படுத்தலாம்...

தமிழகத்தில், பிரதமர் மோடி வருகை, ஒரு முக்கியமான கால கட்டத்தில் அமைந்திருக்கிறது.சென்னை, கலைவாணர் அரங்கில், 'அம்மா ஸ்கூட்டர்' திட்டத்தில், அவர் பங்கேற்றுப் பேசியதில், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் பெருமை தெரிவித்த அவர், 'பாரதியார் வாழ்ந்த மண்' என்றும் எடுத்துக் கூறினார். ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டிய விழா என்ற பின்னணியில் பேசிய பிரதமர், பெண்கள் நலவாழ்வுத் திட்டங்களுக்கு, மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குவதை, பல்வேறு தகவல்களால் அடுக்கினார். தமிழகத்திற்கு, 14வது நிதிக்கமிஷனில் ஒதுக்கப் பட்ட தொகை, காங்கிரஸ் ஆட்சியை விட, 120 சதவீதம் அதிகம் என்பதை அவர் தெரிவித்த விதம், பலரது அர்த்தமற்ற புகார்களைக் குறைக்கும். பெண்களின் முன்னேற்றத்திற்கான சமையல் எரிவாயு தரும் திட்டம் உட்பட, சில வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்திற்கு வளம் சேர்ப்பனஎன்பதை, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெண்கள், தனிநபர் வருமானம் அதிகரிக்கும் வகையில் பொதுத் திட்டங்கள் அமலாகும் பட்சத்தில், குடும்பத்தில் கல்வி, மருத்துவ நலன் குறித்த செலவு, ஆரோக்கியமான உணவு ஆகியவற்றை அதிகரிக்கும் முக்கிய காரணியாக அமையும். 'டாஸ்மாக்' கடைகளுக்கு அப்பணம் அதிகமாக செல்ல வாய்ப்பு இல்லை. எப்போது தனிநபர் மொத்த வருமானம் அதிகரிக்கிறதோ, அப்போது, கிரிமினல் செயல்கள் சமுதாயத்தில் குறையும் என்பதும், இலவச மோகம் குறைவதற்கும் வாய்ப்பாக அமையும். 'ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பிரதமர் பங்கேற்கவில்லை' என்ற புகார், ஒரு பக்கம் எழுந்த நிலையில், ஜெயலலிதா விரும்பிய, இருசக்கர வாகனம் வழங்கும், பெண்கள் நலத்திட்டத்தில் பங்கேற்றதன் மூலம், ஜெயலலிதா வுடன் தொடர்ந்து தனக்கு இருந்த அரசியல் நெருக்கத்தை நிரூபித்திருக்கிறார்.அதுமட்டும் இன்றி, தமிழகத்திற்கு இன்றைய அத்தியாவசிய தேவையான, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, தமிழகக் கட்சிகள் ஒரே குரலாக எழுப்பியது, முற்றிலும் வித்தியாசமானது. அதை பிரதமர் வந்து பங்கேற்ற விழாவில், முதல்வர் பழனிசாமி சுட்டிக்காட்டிய போதும், அதற்கு அந்த விழாவில், பிரதமர் பதிலாக கூற வேண்டியதில்லை.உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் இவ்விஷயம் எளிதாக தெளிவாக்கப்பட்டிருப்பதால், இதற்கு பிரதமர் உடனடியாக பதிலாக தர முடியாது. முந்தைய மத்திய அரசில், மிகவும் பலமாக, அமைச்சர் ராஜா போன்றவர்களை, அவரவர் துறையில், தங்கள் இஷ்டப்படி முடிவு எடுக்க வைத்த, தி.மு.க., இதை ஏன் முன்னுரிமையாக வலியுறுத்திப் பெறவில்லை? மாறாக, முதல்வர் பழனிசாமி, பிரதமரை விமான நிலையத்தில் சந்தித்து, தமிழகத்திற்கு தேவைப்படும் புதிய திட்டங்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மேற்கொள்ள வலியுறுத்தி, மனு அளித்தது நல்லது.ஆனால், சட்ட அமைச்சகம் உட்பட, பல்வேறு ஆலோசனைகளின் முடிவைப் பெற்று, நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இதன் முடிவை அறிவிக்க வேண்டியதால், மத்திய அரசுக்கு, சிறிது காலம் பிடிக்கும். அதற்குள் அடுத்த வழக்கு ஏதேனும் தொடரப்பட்டால் தாமதமாகலாம். ஆனால், தமிழகம், கர்நாடகத்தில் சாதக அரசியல் சூழ்நிலை இருப்பதும், தொடர் அரசியல் வெற்றி பெறும் பிரதமராக மோடி இருப்பதும், 'பிளஸ் பாயின்ட்'கள். மேலும் தமிழகத்தில், இதுவரை காணப்படாத அளவுக்கு, மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் கட்கரி, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் ஆகியோர், புதிய தொழில் வளம் காண மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரலாம். திருப்பூர் பின்னலாடைத் தொழிலை வளர்க்க, சில முயற்சிகளும் காணப்படுகின்றன.ஆனால், இவை எல்லாம், 2019 லோக்சபா தேர்தலை கருதி, மோடி மேற்கொள்ளும் முயற்சி எனக் கூறப்படும் கருத்து, இன்று அரசியல் விவாதத்திற்கு பயனுள்ளதாக அமையும். ஆனால், தேர்தல் வரும் காலத்தில் தமிழக, பா.ஜ.,வில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை அக்கட்சித் தலைவர், அமித் ஷா முடிவு செய்யலாம். அதேபோல, இன்று ஆட்சிபீடத்தில் இருக்கும், அ.தி.மு.க.,வில் உள்ள சிலர், பா.ஜ., கூட்டணியை விரும்பாமல், அன்றைய சூழ்நிலையில், வண்ணமயமான புதிய அணியுடன் கைகோர்க்கலாம். ஏனெனில் இன்று, அ.தி.மு.க.,வை வழிநடத்த, ஜெயலலிதா போன்ற வலுவான தலைவர் கிடையாது. அடுத்த சில மாதங்களில், தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ஓரளவு குறையும் வகையில், வேலைவாய்ப்புகள் வளரும் வகையில், மத்திய அரசுடன் இணைந்து, சாதகமான வாய்ப்புகளை அரசு பெறுவது நல்லது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement