Advertisement

எடை போட இது சரியான நேரம்...

மிகப்பெரிய நிறுவனமாக ஏற்கப்பட்ட, வைர வியாபாரத்தின், 'கீதாஞ்சலி' பிராண்ட் புகழும், பெயரும் குறையாதா என்ற கேள்வி, நாட்டை விட்டு தப்பி ஓடிய, நிரவ் மோடி சார்பில் கேட்கப்ப டுகிறது.வர்த்தகத்தில் மேம்பாடு என்ற பெயரில், மிகச் சாமர்த்தியமான தணிக்கையாளர் துணை மற்றும் வங்கி அதிகாரிகளிடம் இருந்து துவங்கி, கடைநிலை வரை லஞ்சம் தந்து பெறப்பட்ட பிராண்டு நீடித்தால் என்ன, நீடிக்காவிட்டால் என்ன? பஞ்சாப் நேஷனல் வங்கியின் பெயர், இந்த ஊழலால் மிகவும் கெட்டது உண்மை. அகில இந்திய வங்கித் தொழிலாளர் அமைப்பு தங்களை, இம்மாதிரி ஊழல் புகாருடன் சிறிதும் தொடர்புபடுத்திக் கொள்ள விரும்பாது. அதற்கு அடையாளமாக அவர்கள், அமலாக்கத்துறை கெடுபிடி, தங்களை அதிகம் பாதிக்காமல் இருக்க பல விஷயங்களை வெளிப்படுத்தலாம். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் பாதிக்கக் கூடாது என்ற கோணத்தில் செயல்படலாம். ஏனெனில், இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட வைர வியாபாரி சோக்சியும், அவர் கூட்டாளி நிரவ்வும், வர்த்தகத்தை பெருக்குவதை விட, தங்கள் தனி ஆஸ்திகளை வளர்ப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியுள்ளனர். தவிரவும், 'கீதாஞ்சலி' என்ற பிராண்டை பிரபலமாக்க நடிக - நடிகையர் விளம்பர உத்தியுடன், 'பிரான்சைஸ்' என்ற, கிளைக் கடைகளையும் அதிகம் திறந்தனர். அக்கடைகளை நடத்த முன்வந்தவர்களுக்கு, உரிய ஒப்பந்தப்படி பணம் தரவில்லை. மொத்தத்தில், சூரத்தில் பட்டை தீட்டும் வைர வியாபாரம் ஸ்தம்பிக்க, காரணமாய் இருந்துள்ளனர். வங்கிகளில், வெளிநாட்டு வங்கிகள் பணம் தரும் வகையில், கடன் ஒப்புகை பெற மோசடி செய்த வங்கி அதிகாரிகள் பிடிபட்டாலும், இவர்களுக்கு அடுத்த வட்டத்தில் யார் முக்கியம் என்பதை, இனி, சி.பி.ஐ., கண்டறியலாம். எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ், வைர வியாபாரி பெயரில், பின்னொட்டு, 'மோடி' என்றிருப்பதால், அவரை பிரதமர் மோடியின் சொந்தக்காரர் போல கிண்டல் செய்கிறது. பல ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகள், கடன் தரும் விஷயங்களில், ஒவ்வொரு தவறாக கண்டறியப்பட்டு வெளிச்சத்திற்கு வருகிறது. வாஜ்பாய் கூட்டணி ஆட்சி போல, மோடியும் தன் கட்சி, எம்.பி., அல்லது அமைச்சரை, வங்கிக்கடன் விஷயத்தில் சிபாரிசு செய்ய அனுமதிப்பது கிடையாது. தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால், வங்கிகளில் பெரிய லாக்கர் வாங்கக் கூட சிபாரிசு செய்வதில்லை. இன்று, மிகப்பெரும் காங்கிரஸ் தலைவரான சிங்வி, வரி ஏய்ப்பவர் அல்ல என்று அனைவருக்கும் தெரியும். மனைவிக்காக, இந்த வைர வியாபாரியிடம் ஏன் சலுகையைப் பெற வேண்டும்... காங்கிரசில் நேருவைப் போன்ற தலைவரான கிருபளானி, தன் மனைவி சுசேதா, உ.பி., முதல்வரான போது, அவரது அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லத்திற்கு சென்று தங்கியது கிடையாது. அவர் மகாத்மா காந்தியிடம் கற்ற பாடம் அது. வைர வியாபாரி நிரவ் மோடி போல, 'பான்பராக்' பிராண்ட் மூலம் கொடிகட்டி பறந்த கோத்தாரி மகனும், 'ரோட்டோமாக்' பால்பாயின்ட் பேனா வியாபாரியுமான விக்ரம் கோத்தாரி, வங்கியில் வாங்கிய கடன் வாயிலாக, ஆஸ்தியைப் பெருக்கி உள்ளார். நல்ல வேளையாக, 'கூட்டுப் பார்லிமென்ட் குழு - ஜெ.பி.சி., விசாரணை தேவையில்லை' என்ற கருத்தை, மம்தா கட்சியான திரிணமுல் தெரிவித்து, இத்திட்டத்தில், இதுவரை நடந்த விசாரணைகள் பலன் தரவில்லை என்று கூறியதை, காங்கிரஸ் புரிந்து கொள்ளலாம். உச்ச நீதிமன்றம் தலைமையிலான விசாரணை வந்தால், அரசு விசாரணைக்கு கால்கட்டு போன்றது. மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்புவதைத் தடுக்க வலுவான சட்ட நடைமுறைகள், கணக்குத் தணிக்கையாளர்கள் செய்யும் மோசடிகளை கையாள வழிமுறைகள் உருவாக்க வேண்டும். மேலும், பொதுத்துறை வங்கிகள், வாராக்கடனை ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் எளிதாகக் குறைக்க, அரசு நிதி தருவதையும் தடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், ரிசர்வ் வங்கியின் அணுகுமுறை கடுமையாகாத பட்சத்தில், பொதுத்துறை வங்கிகள் பெயர் மங்கும். காங்கிரஸ் இதுவரை, நாட்டை ஆண்ட கட்சி என்ற முறையில், அதில் உள்ள ஊழலுக்கு தொடர்பில்லாத, நிதித் துறையின் குளறுபடிகளை எளிதாகக் கண்டறியும் நிபுணர்களை மட்டும், விவாத மேடைகளுக்கு அனுப்புவதுடன், அங்குள்ள நெறியாளர்களுக்கும் எது சரி என்பதை விளக்க வேண்டும். அரசு இதுவரை எடுத்த, அதிரடி நடவடிக்கைகள் பலன் எப்படி என்பது, அடுத்த சில நாட்களில் வரும் பட்ஜெட் தொடரில் பேசப்படும். அப்போது, நடக்கும் விவாதங்களின் ஆழம், நம் கட்சிப் பிரதிநிதிகளைப் பற்றி, மக்கள் எடை போட உதவும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement