Advertisement

இளைஞர்கள் அழிவதை அனுமதிக்க கூடாது!

ஆந்திர மாநிலம், கடப்பா அருகே உள்ள ஏரியில், சடலமாக மீட்கப்பட்ட ஐந்து தமிழக கூலித் தொழிலாளர்கள் பின்புலத்தை நோக்கும் போது, நம் வளர்ச்சி என்ன என்ற கேள்வி எழுகிறது.மூன்றாண்டுகளுக்கு முன், திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், 20 தமிழர்கள், அம்மாநிலப் போலீசாரின், 'என்கவுன்டரில்' பரிதாபமாக இறந்தனர்.அதில் இருந்து தொடர்ச்சியாக, செம்மரக்கடத்தலில் தமிழக கூலித் தொழிலாளர்களை ஆட்டுவிக்கும் சக்தி எது, அதன் பின்னணி என்ன என்பது கண்டறியப்படவில்லை.பொதுவாக, தமிழக கட்டட தொழிலில், மேற்கு வங்கத்தில் இருந்து பலரும் இங்கு, புரோக்கர்களின் கீழ் பணியாற்றுவதும், பெரிய நகரங்களில் உள்ள ஓட்டல்களில் பல வட கிழக்கு மாநில இளைஞர்கள் வேலை பார்ப்பதும் புதிதல்ல. அவர்களில், சில சிறிய திருட்டு அல்லது மொபைல்போன் பறிப்பு போன்ற சிறு குற்றங்களில் ஈடுபடுவது உண்டு.ஆனால், செம்மரக்கடத்தல், மிக மோசமான பொருளாதாரக் குற்றம். சந்தனக்கடத்தல் குற்றத்தை விட, இதை அதிகம் கண்காணிப்பது வழக்கம். சீனாவில் செம்மரத்திற்கு உள்ள கிராக்கி அபாரம். ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதி, கடப்பா பகுதிகள் இந்த வளத்திற்கு ஆதாரமாக உள்ளவை.தினசரிக் கூலியாக, 500 மற்றும் அன்றாடம் இலவச சாப்பாடு என்பதற்காக, இவர்கள் அழைத்துச் செல்லப்படுவதாக, இப்போது தகவல் வருகிறது. சமீபத்தில், 75 பேருடன் பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு, இம்மரக் கடத்தலில் ஈடுபடுவதாகவும் போலீசாரிடம் கூறிஇருந்தான். அவன் இன்று தன்னை, 'பெரிய ரவுடி இல்லை' என்று நாத்தழுதழுக்க கூறுவது வேறு விஷயம்.போலீஸ் என்கவுன்டர் நடக்குமோ என்ற அச்சம், இப்போது பரவலாக காணப்படுகிறது. அவனை மடக்க முற்பட்ட போலீசார், அங்கு கடத்தப்பட வைக்கப்பட்டிருந்த செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.ஆந்திராவுக்கு எளிதாக செல்லும் இவர்கள், அவ்வப்போது பிடிபட்டாலும், அங்குள்ள போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு, புரோக்கர்கள் கப்பம் கட்டுவது வழக்கமாக உள்ளது. அவர்கள் சாமர்த்தியமாக இவற்றை கடத்தி, ஏற்றுமதி செய்யும் அளவிற்கு, 'லாபி' இருக்கிறது.ஆனால், இம்மரத்தை வெட்டி அதற்கேற்ற சைசில் உருவாக்க, மிகவும் உடல் வலுவான இளையவர்கள் தேவை. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நுாற்றுக்கணக்கில் ஆந்திர சிறைகளில் அடைப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.கடப்பா அருகே ஏரியில் கிடந்த, ஐந்து தமிழர்கள் சடலத்தின் உடல் பாகங்களில், காயங்கள் இருந்திருக்கின்றன. அங்கு அவர்கள் மரத்தை வெட்டிய போது, சுடப்பட்டவர்கள் என்றால், அவர்கள் சடலம் ஏரியில் கிடந்தது ஏன் என்பதும், எப்படிக் ரத்தக்காயங்கள் உடலில் ஏற்பட்டது என்பதும், அடுத்த கேள்வி.பரிதாபமாக இறந்த இவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம், மற்ற உதவிகளைச் செய்த போதும், இந்த விவகாரத்தை ஆந்திர அரசும், தமிழக அரசும் உயர்மட்ட அளவில் சந்தித்து முடிவு செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக, இரு மாநில உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் செம்மரக்கடத்தல் பரிமாணத்தில் உள்ள, 'தாதா'க்கள் கண்டறியப்பட வேண்டும். அரசியல், காவலர், அதிகாரிகள் மற்றும் இம்மரத்தை வெட்ட முடிவு செய்யும் புரமோட்டர்கள் என்ற பல விஷயங்கள், இதில் அடங்கி உள்ளன. இப்பிரச்னையை, சி.பி.ஐ.,யிடம் தந்து விட அரசு முயற்சிக்காமல், முதலில் இரு மாநில அரசு களும் பேசுவது அத்தியாவசியம். திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதியில் உள்ள படிக்காத இளைஞர்கள், தங்களுக்கு கிடைக்கும் வருமானம் மட்டுமே குறிக்கோளாக கருதி, இத்தொழிலில் ஈடுபடலாம். ஒரு சிலர் ெவளியூரில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, பின்பு சடலமாக வர நேரிடலாம் அல்லது ஆந்திர சிறையில் வாடலாம். அவர்கள் எதிர்காலம் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினர் முற்றிலும் அழிவதை அனுமதிப்பது, வளர்ந்த தமிழகத்திற்கு அழகல்ல. இது குறித்து தனியான அணுகுமுறையை உருவாக்க, நிபுணர் குழு அமைத்து, அப்பகுதி மக்கள் தொகையுடன் பல்வேறு களஆய்வு செய்து, புதிய வேலைவாய்ப்புத் தளம் அமைக்க, காலக்கெடுவுடன் கூடிய திட்டமும் தேவை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement