Advertisement

இயற்கையை ஆர்வலர்களின் இனிய தேர்வு முதுமலை


இயற்கையை ஆர்வலர்களின் இனிய தேர்வு முதுமலை

அன்பு பாசம் பிரியம் இவற்றின் மொத்த அடையாளமாக திரு.சிவகுருநாதன் தலைமையிலான கோவை தினமலர் புகைப்பட கலைஞர்களைச் சொல்லலாம்.

நீலகிரி மாவட்ட நிருபர்களுக்கு கேமிரா வழங்கி அவர்களுக்கு பயிற்சி வழங்க சென்றிருந்த என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று குழந்தையைப் போல குதுாகலிக்க வைத்தனர்.

அவர்கள் அழைத்துச் சென்ற இடங்களில் முக்கியமான இடம் முதுமலை வனவிலங்கு சரணாலயமாகும்.இது வனவிலங்குகளையும் பறவைகளையும் பாதுகாக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழகத்தின் முதல் மற்றும் முக்கிய சரணாலயமாகும்.நீலகிரி மாவட்டம் வடமேற்கில் கர்நாடகா,கேரளா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது.

இங்கே போனபிறகுதான் தெரிந்தது முதுமலை மற்றும் பந்திப்பூர் சரணாலயம் எல்லாம் அடுத்தடுத்து உள்ளது என்பது.நடுவில் ஒரு ஆறு ஓடுகிறது அதுதான் இவ்விரு சரணாலயங்களுக்குமான எல்லைக்கோடு ஆனால் இங்குள்ள விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும் மனிதர்கள் வகுத்த இந்த எல்லைக்கோடெல்லாம் ஒரு பொருட்டல்ல, எங்கே தண்ணீரும் உணவும் கிடைக்கிறதோ அங்கே நடமாடும்.

பொதுவாக எந்த சரணாலயமாக இருந்தாலும் சுற்றுலா பயணிகள் பார்க்க விரும்புவது புலிகளைத்தான்.முதல் முறையாக போனவர்களுக்கு புலிகள் தரிசனம் கிடைத்தது உண்டு ,பத்து முறை படையெடுத்தும் புலிகளை பார்க்கமுடியாமல் இருப்பவர்களும் உண்டு.

எனக்கு புலிகளின் கால் தடங்கள்தான் காணக்கிடைத்தது, அதானல் கவலைப்படவில்லை, காரணம் கானகத்தில் இருந்ததே பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. யானை மற்றும் மான்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது.அதிலும் தாயிடம் ஒரு குட்டி மான் பால்குடித்த அந்த ஒரு காட்சி போதும் ,மற்றபடி மோயாறு நீர் வீழ்ச்சி, மயில், சிங்கவால் குரங்கு இதெல்லாம் போனஸ்தான்.

சரணாலயத்தை மிக நன்கு வைத்துள்ளனர் அங்குள்ள பழங்குடியினர் நடத்தும் ஒட்டலில் நல்ல சாப்பாடு கிடைக்கிறது, இயற்கை நேசிப்பவர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் பார்க்கவேண்டிய இடம் முதுமலை வனவிலங்கு சரணாலயம்.

--எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in



Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement