Advertisement

டீ கடை பெஞ்ச்

கஞ்சா விற்று தப்பிய எம்.எல்.ஏ.,வின் அண்ணன்!
''தி.மு.க., பிரமுகரை, பிரதமர் அலுவலக அதிகாரிகள் பார்த்துட்டு போயிருக்காங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''ஏதாவது கூட்டணி சமாச்சாரமா வே...'' என, ஆர்வமானார் அண்ணாச்சி.

''கூட்டணி பேச, அதிகாரிகளை அனுப்புவாங்களா...'' என முறைத்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''கங்கை துவங்கி, கன்னியாகுமரி நெய்யாறு வரை நதிகளை இணைக்கணும்னு, தி.மு.க., செய்தி தொடர்பாளரான வக்கீல் ராதாகிருஷ்ணன், 1983ல, உச்ச நீதிமன்றத்துல வழக்கு போட்டாருங்க...

''இதுல, 'நாட்டின் நலன் கருதி, நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுங்க'ன்னு, 2012ல, உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டது... இப்ப, இந்த திட்டத்தை பிரதமர் மோடி கையில எடுத்திருக்காருங்க...

''சமீபத்துல, மோடி ஆபீஸ்ல இருந்து வந்த சிறப்பு அதிகாரிகள் குழு, ராதாகிருஷ்ணனை பார்த்து, வழக்கு சம்பந்தமான, 200 பக்க ஆவணங்களை வாங்கிட்டு போயிருக்காங்க...

''வர்ற, 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்துல, நதிகள் இணைப்பு விஷயத்தை முன்னிலைப்படுத்த, மோடி முடிவு பண்ணியிருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''தனியார்ட்ட கமிஷன் வாங்கிடறா ஓய்...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.

''யாரைச் சொல்றீங்க பா...'' என கேட்டார் அன்வர்பாய்.

''பெரம்பலுார் அரசு போக்குவரத்து கழக டிப்போவுல, ஆர்.ஓ., சிஸ்டம் பழுதாகி, ஆறு மாசத்துக்கு மேலாயிடுத்து... இதை அதிகாரிகள் சரி செய்யாததால, ஊழியர்கள் குடிக்க தண்ணியில்லாம தவிக்கறா ஓய்...

''கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டல பஸ்கள், எங்க, 'பிரேக் டவுன்' ஆனாலும், பெரம்பலுார் டிப்போவுல தான் பழுது பார்க்கணும்...

''அதனால, இங்க இருக்கற டெக்னீஷியன்களை, வேலை நேரம் முடிஞ்சாலும், கூடுதல் நேரம் வேலை பாருங்கோன்னு அதிகாரிகள் கட்டாயப்படுத்தறா ஓய்...

''அது மட்டும் இல்லை... கிராமங்கள் வழியா போக வேண்டிய மினி பஸ்களை, தேசிய நெடுஞ்சாலை வழியா ஓட்டறா... இதுக்கு, அந்த மினி பஸ் நிர்வாகிகள், டிப்போ அதிகாரிகளுக்கு கமிஷன் குடுத்துடறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''கஞ்சா வித்தவரை, கமுக்கமா விட்டுட்டாவ வே...'' என, கடைசி தகவலுக்கு தாவினார் அண்ணாச்சி.

''எந்த ஊர்ல ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''மதுரை, பேரையூர் பக்கம், கஞ்சா வித்ததா, ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,வின் அண்ணன் ஒருத்தரை சமீபத்துல போலீசார் பிடிச்சாவ... அவர்ட்ட இருந்து, 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செஞ்சாவ வே...

''எம்.எல்.ஏ.,வின் சகோதரர் கைதுன்னு சமூக வலைதளங்கள்ல தகவல்கள் பரவிட்டு... அப்புறம், மேலிட பிரஷரால, சகோதரர் பெயரை, எப்.ஐ.ஆர்.,ல சேர்க்காம விட்டுட்டாவ... அவருக்கு பதிலா வேற ஒருத்தரை கணக்குல காட்டிட்டாவ வே...

''எம்.எல்.ஏ., சகோதரர், ஏற்கனவே இதே மாதிரி கஞ்சா வித்து, சிக்கி, தப்புனவர் தான்... 'நீதிபதி' முன்னிலையில தான் நிறுத்தணும் போலிருக்கு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி. அரட்டை வேறு பக்கம் திரும்பியது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement