Advertisement

சொல்கிறார்கள்

கிலோ, ரூ.90க்கு விற்பனையாகிறது!
மருத்துவ குணம் கொண்ட மணிப்பூர் நெல் சாகுபடி செய்து வரும், விவசாயி ஏகாம்பரம்: அப்பா, தாத்தா என, பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம்; 'போர்வேல்' பாசனம் தான். இயற்கை விவசாய பயிற்சி கொடுக்க, மணிப்பூர் மாநிலத்திற்கு சென்ற போது, நம் பாரம்பரிய ரகங்களை கூறினேன்.

அப்போது, அந்த மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி, 'எங்கள் ஊரிலும் பாரம்பரிய நெல் ரகம் நிறைய இருக்கு; அதில் ஒரு ரகம், புற்றுநோய்க்கு நல்ல மருந்து' எனக் கூறினார். உடனே, அந்த நெல்லை பயிர் செய்து பார்க்க தோன்றியது.

அதன் விதை நெல், 200 கிராம் மட்டுமே கிடைக்க, 10 சென்ட் நிலத்தில் விதைத்தேன்; அதில், 150 கிலோ நெல் கிடைத்தது. அதை, 30 சென்ட் நிலத்தில் விதைத்தேன். அது, அறுவடைக்கு தயாராகி உள்ளது. நம் சீதோஷ்ண நிலையில், இந்த ரகம் நன்றாக விளைகிறது.

மணிப்பூர் ரக நெல்லை சாகுபடி செய்யும் போது, 1 ஏக்கர் நிலத்தில், 1,500 கிலோ வரை மகசூல் எடுக்க முடியும். 30 சென்ட் நிலத்தில் விதைத்துள்ள நிலையில், 500 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.

முழுவதையும் விதை நெல்லாக மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன். மணிப்பூரில் இந்த ரக அரிசி, கிலோ, 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.மணிப்பூர் கறுப்பு ரகத்தின் வயது, 110 நாட்கள். இது, உவர் நிலங்கள் தவிர, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளரும். தேர்வு செய்த, 1 ஏக்கர் நிலத்தில், தண்ணீர் கட்டி, சேற்றுழவு செய்ய வேண்டும்.

பின், 650 கிலோ ஊட்டமேற்றப்பட்ட தொழு உரத்தை பரப்பி, உழவு செய்ய வேண்டும். தொடர்ந்து வயல் முழுவதும் இலை தழைகளை கொட்டி மிதித்து விட வேண்டும். பின், வயலை சமப்படுத்தி, விதை நேர்த்தி செய்த, மணிப்பூர் கறுப்பு ரக விதை நெல்லை, நேரடியாக விதைக்க வேண்டும். 1 ஏக்கருக்கு, 30 கிலோ விதை நெல் தேவை. விதைத்த, 7ம் நாள் முளைப்பு எடுக்கும்.விதைத்த, 20ம் நாள், கைகளால் களைகளை அகற்றி, 200 கிலோ ஊட்டம் ஏற்றப்பட்ட தொழுஉரத்தை பரவலாக துாவ வேண்டும். 40ம் நாள், இரண்டாவது முறை களை எடுத்து, 150 கிலோ ஊட்டம் ஏற்றப்பட்ட தொழு உரத்தை பரவலாக துாவ வேண்டும்.

அடுத்து, 50ம் நாள், 200 லிட்டர் அமுதக் கரைசலை, பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 60ம் நாள், 100 லிட்டர் தண்ணீரில், 10 லிட்டர் கலவை கரைசலை கலந்து, வயல் முழுவதும் தெளிக்க வேண்டும்; இதனால், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. விதைத்த, 80ம் நாளுக்கு மேல் பால் பிடித்து, 100ம் நாளுக்கு மேல், கதிர் முற்றத் துவங்கும். 110ம் நாளுக்குள் அறுவடைக்கு வந்து விடும். தொடர்புக்கு: 72007 73224.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement