Advertisement

சொல்கிறார்கள்

சூடான உணவை சாப்பிடுவது நல்லது!

சைனஸ் பாதிப்புள்ளவர், குளிர்கால அவஸ்தைகளில் இருந்து விடுபட வழி கூறும், அலர்ஜி, ஆஸ்துமா சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்: மூக்கின் இரண்டு பகுதிகளிலும், பக்கத்துக்கு நான்கு என, எட்டு காற்றறைகள் உள்ளன. இவை, சைனஸ் காற்றறைகள் என, அழைக்கப்படும்.

சுவாசிக்கும் காற்றில் உள்ள அசுத்தங்களை இவை வடிகட்டி, தொண்டை, மூச்சுக்குழல் உதவியோடு, சுத்தமான காற்றை நுரையீரலுக்கு அனுப்பும். மூக்கில் உள்ள காற்றறைகள், தொண்டை, மூச்சுக்குழல் ஆகியவற்றில் ஏற்படும் ஒவ்வாமையே, 'சைனஸ்' எனப்படுகிறது.

இறால், நண்டு, கருவாடு போன்ற கடல் உணவுகளும், பால், நட்ஸ் போன்றவையும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். பாலுக்கு பதிலாக தயிர், மோர், சோயா பால் சாப்பிடலாம்.காய்கறி, பழங்கள், தானியங்களை பொறுத்தவரை, ஒருவருக்கு எது சேர்கிறதோ, அதை உணவாக உட்கொள்ளலாம்.

மாசு ஒவ்வாமையில், இரண்டு விதம் உண்டு. கரப்பான் பூச்சி, கொசு போன்ற பூச்சிகளாலும், தாவரங்கள், செல்லப் பிராணிகளாலும் ஒவ்வாமை ஏற்படலாம்.நாம் பயன்படுத்தும் தலையணை உறை, போர்வைகளில் கண்ணுக்கு தெரியாத பூஞ்சை வளர்ந்து தொல்லை தரும்.

சிலருக்கு சிமென்ட் தொழிற்சாலை, பீடி சுற்றும் தொழில், பஞ்சு ஆலைகள், மிளகாய் மண்டி போன்ற தொழில் செய்யும் இடங்களிலும் ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. 'ஏசி' அறைகளில் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்களுக்கும் பிரச்னைகள் வரும்.

புகை, காற்றில் பரவும் துாசுகளாலும் ஒவ்வாமை ஏற்படும். பயணத்தின் போது, துணியால் மூக்கை மறைத்துக் கொள்வது நல்லது. சில பூக்களின் மகரந்தங்கள், ஒரு சில சென்ட் வாசனை கூட, ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

குளிர்ந்த காற்று, மன அழுத்தம், சொத்தைப் பல், குடற்புழுக்கள், சிறுநீர் பாதை தொற்றாலும் கூட சைனஸ் பாதிப்பு ஏற்படலாம். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், மூக்கில் அரிப்பு, அடிக்கடி சளி பிடிப்பது ஆகியவை, சைனசின் அறிகுறிகளாகும்.
சைனஸ் வந்தவர்களுக்கு தலைவலி, மயக்கம், இருமல், உணவின் வாசம், சுவை அறியாமல் போவது, தொடர்ச்சியான காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். சிகிச்சை எடுக்காவிட்டால், ஆஸ்துமாவாக மாறக்கூடும்.

படுக்கை விரிப்பு, தலையணை உறைகளை, வாரம் ஒரு முறை வெந்நீரில் அலசி, சுத்தம் செய்து பயன்படுத்தலாம். செல்லப் பிராணி, பஞ்சு, சணலால் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை தவிர்ப்பது நல்லது. கொசுவர்த்தி சுருளில் இருக்கும், 'பைரித்தான்' என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தானது என்பதால், பயன்படுத்த வேண்டாம்.

இளஞ்சூடான நீரில் குளிப்பதும், கொதித்து ஆற வைத்த நீரை பருகுவதும், ஒவ்வொரு வேளைக்கும் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளை, சூடாக சாப்பிடுவதும் நல்லது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement