Advertisement

டீ கடை பெஞ்ச்

தி.மு.க.,வினரை பயமுறுத்தும் அறிவாலய புள்ளிகள்!
''சம்பளமே, 5,000 ரூபாய் தான்... அதுக்கு, அஞ்சு லட்சம் ரூபாய் வசூல் பண்றா ஓய்...'' என, காபி டம்ளருடன் பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

''எங்க வே இந்த அநியாயம்...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''கூட்டுறவு துறை வசம் இருக்குற ரேஷன் கடைகள்ல, விற்பனையாளர், உதவியாளர்னு, 5,000 பணியிடங்கள் காலியா இருக்கு... இதை நிரப்பறதுக்கான நேர்முகத் தேர்வுக்கு, அஞ்சு லட்சம் பேருக்கு மேல விண்ணப்பிச்சிருக்கா ஓய்...

''விற்பனையாளர் பணிக்கு, பிளஸ் 2, உதவியாளர் பணிக்கு, 10 படிச்சிருந்தா போதும்... ஆனா, இன்ஜினியரிங் பட்டதாரிகள் கூட விண்ணப்பிச்சிருக்கா ஓய்...

''ஏன்னா, இந்த வேலைக்கு, மாச சம்பளம், 5,000 ரூபாய் தான்... ஆனா, 'எக்ஸ்ட்ரா வருமானம்' பார்க்க முடியும்கறதால, இந்த வேலைக்கு இளைஞர்கள் முட்டி மோதிண்டு இருக்கா...

''அதனால, இந்த வேலைக்கு, ஆளுங்கட்சியினர் தரப்புல, அஞ்சு லட்சம் ரூபாய், 'ரேட் பிக்ஸ்' பண்ணி, வசூல் பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

உடனே, ''சீப் பிளானர்கள் அதிருப்தியால புகைச்சலாம் பா...'' என, அடுத்த விஷயத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''எங்கன்னு விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''நகரமைப்பு வல்லுனர்களுக்கான பொது பணி விதிகள் உருவாக்கப்படும்னு, முதல்வர் அறிவிச்சாருங்க... இதுக்கான, 'டிராப்ட் ரூல்' தயாரிச்சு இருக்காங்க பா...

''இதுக்கு, நகர், ஊரமைப்பு துறை கமிஷனர் தலைமையில குழு அமைச்சாங்க... இந்த குழு மேல, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கடும் அதிருப்தியில இருக்காங்க பா...

''சி.எம்.டி.ஏ.,வுல, 'ரிடையர்' ஆன ஒரு அதிகாரி, ரியல் எஸ்டேட் ஆணையம் சார்புல, இந்த குழுவுல சேர்க்கப்பட்டு இருக்காருங்க... இவர், சி.எம்.டி.ஏ.,வுல இருந்தப்ப, நகரமைப்பு வல்லுனர்களுக்கு எதிரா செயல்பட்டதா சொல்றாங்க பா...

''அதனால, 'இவரை எப்படி குழுவுல சேர்க்கலாம்'னு, 'சீப் பிளானர்'கள் கடும் அதிருப்தியில இருக்காங்க... இது பத்தி, துறை செயலர்கிட்ட முறையிடவும் தயாராகிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''உள்ள நுழையும் போதே, பயம் காட்டி அனுப்பிடுதாவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னை அறிவாலயத்துல நடந்துட்டு இருக்குற மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு வர்றவங்களிடம், அறிவாலயத்தையே தினமும் சுத்தி வர்ற சில, தி.மு.க., பிரமுகர்கள் பேசுதாவ வே...

''அப்ப, 'ஸ்டாலின் மூட் அவுட் ஆகுற மாதிரி புகார் சொல்லிடாதீய... அதுவும், மாவட்ட செயலர்களுக்கு எதிரா, ஆதாரம் இல்லாம எதுவும் பேசவே வேண்டாம்...

''உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது புகார் சொல்லி, ஸ்டாலின் கோபத்தை சம்பாதிக்காதீய அண்ணாச்சி'ன்னு சொல்லிடுதாவ வே... அதனால, பல நிர்வாகிகள் வாயே திறக்காம வந்துடுதாவ...

''போன புண்ணியத்துக்கு அங்க தர்ற மதிய விருந்தை மட்டும், மூக்கு பிடிக்க சாப்பிட்டுட்டு, 'இவ்வளவு துாரம் வந்ததுக்கு இது தான் மிச்சம்'னு புலம்பிட்டே போறாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

அரட்டை வேறு திசைக்கு திரும்பியது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement