Load Image
Advertisement

டீ கடை பெஞ்ச்

சர்க்கரை நோயை குணப்படுத்தும் கள்ளச்சாராயம்?
''கவர்னரை சந்திக்க நேரம் கேட்டிருக்காரு வே...'' என, பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''யாரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல நடந்த தீ விபத்து, இந்து இயக்கங்களை கொதிப்புல தள்ளிட்டுல்லா... விபத்து நடந்த இடத்தை நேர்ல பார்த்த, பா.ஜ., தேசிய செயலர் ராஜா, 'கோவில் நிர்வாகத்துல இருந்து அரசாங்கம் வெளியேறணும்'னு ஆவேசப்பட்டாரு வே...

''தீ விபத்துக்கான காரணங்கள் சம்பந்தமா, அவர்ட்ட, சில ஆவணங்களையும், படங்களையும் கட்சிக்காரங்க குடுத்திருக்காவ... எல்லாத்தையும் வாங்குனவரு, கவர்னர் புரோஹித்தை பார்த்து பேச நேரம் கேட்டிருக்காரு... அப்ப, ஆவணங்களை அவர்ட்ட குடுத்து, நியாயமான விசாரணை நடத்தணும்னு கேட்க இருக்காராம் வே...'' என்றார் அண்ணாச்சி.

''மிரட்டல் வசூல் கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்காங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினார் அன்வர்பாய்.

''யாருக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''தி.மு.க., சார்புல, அடுத்த மாசம், ஈரோட்டுல, மண்டல மாநாடு நடத்த போறாங்களே... சீக்கிரமே, உள்கட்சி தேர்தலும் நடக்க இருக்குது பா...

''அதனால, பகுதி, வட்டச் செயலர் பதவிகளை தக்க வச்சுக்க, ஒவ்வொரு நிர்வாகியும், நிறைய தொண்டர்களை மாநாட்டுக்கு அழைச்சிட்டு போக முடிவு பண்ணியிருக்காங்க...

''இதுக்கான செலவுகளுக்காக, உள்ளூர் வியாபாரிகள், தொழிலதிபர்களிடம் நன்கொடை கேட்டு நச்சரிச்சிட்டு இருக்காங்க... தராத சிலரிடம், மிரட்டியும் கேட்டிருக்காங்க... இது பத்தி, அறிவாலயத்துக்கு புகார் போயிருக்கு பா...

''அதனால, 'யார்ட்டயும் மிரட்டி வசூல் பண்ண கூடாது... அப்படி செஞ்சா, கடும் நடவடிக்கை எடுப்போம்'னு தலைமை எச்சரிக்கை குடுத்திருக்கு பா...'' என்றார் அன்வர்பாய்.

''சாராயம் குடிச்சா, சர்க்கரை நோய் குறையுமாங்க...'' என, திடீரென சந்தேகம் கேட்டார் அந்தோணிசாமி.

''உம்ம கேள்வியே வில்லங்கமா இருக்கே... என்ன சங்கதின்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' என, ஆர்வமானார் குப்பண்ணா.

''திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியில இருக்குற கடலாடி, அதை சுத்தி இருக்குற பகுதிகள்ல, கள்ளச்சாராய பாக்கெட் விற்பனை அமோகமா நடக்குதுங்க...

''இங்க, 150 மில்லி சாராய பாக்கெட், 15ல இருந்து, 20 ரூபாய் வரைக்கும் விற்குறாங்க... அதுலயும்,

10 பாக்கெட் மொத்தமா வாங்குனா, ஒரு பாக்கெட் இனாம் வேற உண்டுங்க...

''அட, அதாவது பரவாயில்லை... வனப் பகுதிகள்ல இருக்குற அரிய வகை மூலிகைகளால, இந்த சாராயத்தை தயாரிக்குறதாகவும், இதை குடிச்சா சர்க்கரை நோய் குறையும்னும் வதந்தி பரப்பியிருக்காங்க...

''இதனால, சர்க்கரை நோயாளிகள் கூட்டம் இங்க கும்மியடிக்குது... இதெல்லாம், கடலாடி போலீசுக்கு தெரியுமான்னு கேட்காதீங்க... 'அவங்களுக்கு, 'மாமூல்' வேலைகளை பார்க்கவே நேரம் இல்லை'ன்னு அந்த ஊர்க்காரங்களே அலுத்துக்குறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

அனைவரும் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.



அரசு மருத்துவமனையில் அட்டகாச வசூல்!
''போன இடமும் சரியில்லைன்னு புலம்பிட்டு இருக்காங்க...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''யாரு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''அ.தி.மு.க., - ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா, தினகரன் அணியில சேர்ந்தாங்கல்ல... சமீபத்துல நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்துல, சசிகலா புஷ்பாவுக்கு பேச வாய்ப்பு குடுக்கலைங்க...

''அது மட்டும் இல்லை... தினகரன் அணி சார்புல நடக்குற எந்த நிகழ்ச்சிக்கும், இவங்களுக்கு தகவலே தர மாட்டேங்குறாங்க...

''சசிகலா புஷ்பா மாதிரியே, தினகரனுக்கு ஆதரவு தந்த, 'மாஜி' பெண் அமைச்சர், வளர்மதி ஜெபராஜை, அ.தி.மு.க.,வுல இருந்து நீக்கிட்டாங்க...

''இதனால, அவங்களுக்கு தினகரன் அணியில செல்வாக்கு அதிகமாயிடுச்சு... அவங்களும் நாடார் சமுதாயம்ங்கிறதால, சசிகலா புஷ்பாவை ஓரம் கட்டுறாங்கன்னு, அவங்க ஆதரவாளர்கள் புலம்புறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''ரொம்ப நாளா இருந்த மொபைல் நம்பரை மாத்தினதால, நிறைய பேர் அவஸ்தைப் படுறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''மதுரை ரயில்வே கோட்டத்துல, முதுநிலை, பி.ஆர்.ஓ., பணியிடம் இருக்கு... கோட்ட மேலாளர், கூடுதல் மேலாளருக்கு அடுத்து, மூத்த அதிகாரி பணியிடமா இருக்குறதால, இவருக்கு, தனி மொபைல் நம்பர் குடுத்திருந்தாங்க பா...

''இப்ப, மேலும் ஒரு கூடுதல் மேலாளர் போட்டுட்டதால, பி.ஆர்.ஓ., நம்பரை அவருக்கு குடுத்துட்டு, பி.ஆர்.ஓ.,வுக்கு வேற நம்பரை குடுத்துட்டாங்க...

''ரொம்ப வருஷமா இருந்த நம்பரை மாத்திட்டதால, பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள்னு, பலரும், பி.ஆர்.ஓ.,வை தொடர்பு கொள்ள முடியாம சிரமப்படுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''பார்க்க வேண்டிய வேலையை விட்டுட்டு, பணம் பறிக்கற வேலையை மட்டும் பார்க்கறா ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.

''யாரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''பெரம்பலுார் அரசு மருத்துவமனையில, 'ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி' பணிகளை, 'சுமிட்' அப்படிங்கற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைச்சிருக்கா ஓய்...

''ஆனா, இந்த நிறுவன பணியாளர்கள், இந்த வேலைகளை பார்க்காம, ஓ.பி., சீட் குடுக்கறது, குளூக்கோஸ் போடறது, ஸ்டிரெச்சர் தள்ளறது மாதிரியான வேலைகளை தான் செய்றா...

''இதுக்கும், நோயாளிகள்ட்ட, வேலைக்கு ஏத்த மாதிரி, 50ல இருந்து, 100 ரூபாய் வரைக்கும் கறாரா கறந்துடறா... பிரசவ வார்டுல, சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு போறவாளிடம், 200 ரூபாய் வசூலிக்கறா... பணம் தராதவளை, நாயை விரட்டற மாதிரி விரட்டறா ஓய்...

''இவாளோட அட்டகாசங்களை, ஆர்.எம்.ஓ., உட்பட எந்த அதிகாரிகளும் கண்டுக்க மாட்டேங்கறா... நோயாளிகள் தான் நொந்து, நுாடுல்ஸா போயிடறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.பெரியவர்கள் அரட்டை, வேறு பக்கம் திரும்பியது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement