Load Image
Advertisement

டீ கடை பெஞ்ச்

முன்கூட்டியே எச்சரிக்கப்பட்ட கணபதி!



''போராட்டங்களை எல்லாம், இனி, சின்ன தலைவரை வச்சி நடத்திக்கலாம்ன்னு முடிவு செஞ்சிருக்காவ வே...'' என, முதல் தகவலுடன் பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.

''சின்ன தலைவரா... யாரு பா அது...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''தி.மு.க.,வுல, செயல் தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியைச் சொல்லுதேன்...'' என அண்ணாச்சி கூறியதும், அவசரமாய் இடைமறித்த அன்வர்பாய், ''இரு... என்னது... விட்டா நீயே பட்டம் சூட்டி விடுவே போலிருக்கே... வாரிசு அரசியல்ல உனக்கு உடன்பாடு உண்டா... அப்ப, கட்சிக்காக உழைக்கிற மத்தவங்கல்லாம் யாரு...'' என, பொரிந்து தள்ளினார் அன்வர்பாய்.

''சரிண்ணே... விடுங்க... விஷயத்தைச் சொல்லுதேன்... தமிழகத்துல பஸ் கட்டணத்தை உயர்த்தியதை வச்சு, தி.மு.க., சார்புல ஆர்ப்பாட்டம் நடந்துச்சுல்லா... சென்னையில, உதயநிதி கலந்துக்கிட்டாரு... அவருக்கு நிறைய கூட்டம் கூடிடிச்சாம்...

''இதைப் பார்த்து, தந்தை புளகாங்கிதம் அடைஞ்சு, இனி ஆர்ப்பாட்டம் எல்லாத்தையும், மகன் தலைமையில நடத்திரலாம்ன்னு முடிவு செஞ்சிட்டாரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''மீண்டும் சர்வ சாதாரணமா வலம் வராங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.

''யாருன்னு, விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''சென்னையில், மின் வாரிய தலைமை அலுவலகம் இருக்கு... அங்கு தான், மின் உபகரணம் கொள்முதல், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளோட, 'டெண்டர்'கள் வெளியிடுறாங்க... ''அந்த பணிகளை எடுக்கும், ஒப்பந்த நிறுவனங்களோட ஊழியர்கள், வாரிய அலுவலகத்திற்கு வந்து, சில அதிகாரிகள் அறையில், சர்வசாதாரணமா உட்கார்ந்து, அரட்டை அடிச்சுட்டு இருந்தாங்க...

''தங்களுக்கு வர வேண்டிய பணம் தொடர்பான கோப்புகளையும், அவங்களே தயாரிச்சு, அதிகாரிங்க கிட்ட கையெழுத்து வாங்குவாங்க... ''அப்படியே, டெண்டர் தொடர்பான முடிவுகளையும் முன்கூட்டியே தெரிஞ்சுக்கிட்டாங்க... வாரிசு வேலை, இடமாறுதல்ங்கற விவகாரங்கள்ல, இடைத்தரகர்களும், அங்கேயே சுத்திட்டிருந்தாங்க...

''இதையெல்லாம் தடுக்கணும்ன்னு, கொஞ்ச நாளுக்கு முன்ன, ஆபீஸ்ல நிறைய இடத்துல, கண்காணிப்பு கேமரா பொருத்தி, ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், இடைத்தரகர்கள் வர்றதைத் தடுத்தாங்க... ''ஆனா இப்ப, கட்டுமான வேலைகள் நடக்குது... அதனால, கேமராக்கள் எல்லாம் சரியா வேலை செய்யுதான்னு தெரியலே... பார்த்தா, பழைய தலைகள் மறுபடி தென்பட ஆரம்பிச்சிடிச்சுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''முன்னமேயே எச்சரிச்சிட்டாராமே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அன்வர்பாய்.

''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, ஊழல் புகார்ல, 'அரெஸ்ட்' ஆகி இருக்காரு இல்லியா... அது சம்பந்தமான, சிண்டிகேட் கூட்டம் சமீபத்துல நடந்துச்சு பா...

''உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் கலந்துக்கிட்டாரு... 'ஒன்றரை வருஷத்துக்கு முன்னயே, துணைவேந்தர் கணபதியை எச்சரிச்சேன்... உங்க மேலே நிறைய புகார்கள் வருது... மிச்சமிருக்குற காலத்திலாவது, ஒழுங்கா, நல்லபடியா வேலை செய்யிங்கன்னு சொன்னேன்... கேக்கலே'ன்னு சொன்னாராம் பா...'' என்றார் அன்வர்பாய்.

நண்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி, நடையைக் கட்டினர்; பெஞ்ச் அமைதியானது!



வாசகர் கருத்து (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement