Advertisement

டீ கடை பெஞ்ச்

கவர்னரின் வேகம்; அதிகாரிகள் கலக்கம்!

''மெது வடையை சாப்பிட்டு, மெதுவா, 'கமென்ட்' அடிச்சாரு பா...'' என, முதல் தகவலைத் துவக்கினார் அன்வர்பாய்.

''யாரு ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''சென்னை அறிவாலயத்துல, தி.மு.க., தலைமையில நடந்த, அனைத்து கட்சிக் கூட்டத்துல கலந்துக்கிட்ட தலைவர்களை, பத்திரிகை போட்டோகிராபர்களும், 'டிவி' கேமராமேன்களும் படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க...

''காவேரி டிவி சேனலை சேர்ந்த பெண் நிருபர், படம் பிடித்துக் கொண்டிருந்த போது, வடை சாப்பிட்டுக் கொண்டிருந்த, தி.மு.க., முதன்மை செயலர்
துரைமுருகன், 'எந்த 'டிவி'ம்மா?'ன்னு கேட்டாரு... அந்த நிருபர், 'காவேரி டிவி'ன்னதும், 'காவிரி தான் வரமாட்டேங்குதே'ன்னு, ரெண்டு அர்த்தத்தில், 'கமென்ட்' அடிக்க, எல்லாரும் சிரிச்சிட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''நானும், அதே கூட்டத்துல நடந்த இன்னொரு தகவலை சொல்றேன் கேளுங்க...'' என, அடுத்த மேட்டரை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''சொல்லு பா...'' என்றார் அன்வர்பாய்.

''பஸ் கட்டண உயர்வை கண்டிச்சு, கோட்டையில மறியல் நடத்தணும்னு, சில தலைவர்கள் கோரிக்கை வைச்சாங்க... உடனே, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குறுக்கிட்டு, 'விரைவில், இன்னொரு பெரிய ஊழல் விவகாரம் வெளி வர இருக்குது...

''அதை கண்டிச்சு, கோட்டையில மறியல் போராட்டம் நடத்தலாம்'னு சொல்லியிருக்காரு... எல்லாருக்கும் ஆச்சரியமா போச்சு... காத்துகிட்டிருக்காங்க, என்ன ஊழல் விவகாரம்ன்னு தெரிஞ்சுக்க...'' என்றார் அந்தோணிசாமி.

''அதான் வந்திடிச்சே... பாரதியார் பல்கலை ஊழல் விவகாரம்...'' என, நினைவூட்டினார் அன்வர்பாய்.

''எவ்ளோ வேகம்ங்குறீங்க...'' என, கண்ணை அகல விரித்து, கடைசி மேட்டருக்கு வந்தார் அண்ணாச்சி.

''யாரு ஓய் வேகம்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''நம்ம மாநில கவர்னரைச் சொல்லுதேன்... மதுரையில் ஆய்வுக்கு வந்தப்ப, நட்சத்திர ஓட்டலில் தங்காமல், சுற்றுலா விருந்தினர் மாளிகையில தங்கினாரு... அங்கே கொசுத் தொல்லை அதிகம்...

''ஆனா அதை அவர், சட்டை செய்யலே... கூடவே, மற்ற, வி.ஐ.பி.,க்களைப் போல, 'சாப்பிட அதைக் கொண்டா, இதைக் கொண்டா'ன்னு கேட்காம, திரவ உணவுகளைச் சாப்பிட்டாரு...

''மதியம் கொஞ்ச நேரம், 'ரெஸ்ட்' எடுப்பாருன்னு பார்த்தா, அதுவும் இல்லே... அதிகாரிகளுக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிடிச்சு...

அங்கே கூடியிருந்த பொதுமக்கள்கிட்டே மனுக்களை வேகமாக வாங்கின கவர்னர், உடனுக்குடன் கலெக்டரைக் கூப்பிட்டு நடவடிக்கை எடுக்கச் சொல்லி, 'பாலோ அப் வேணும்' என்றும் கேட்டார்... எல்லாருமே பிரமிச்சுப் போயிட்டாவன்னா பார்த்துக்குமே...'' என்றார் அண்ணாச்சி.

''நல்லா தான் நடக்குது எல்லாம்...'' எனக் கூறியபடியே, அந்தோணிசாமி கிளம்பினார்; மற்றவர்களும் பின்தொடர்ந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement