Advertisement

டீ கடை பெஞ்ச்

மகனை முன்னிலைப்படுத்த விஜயகாந்த் தீவிரம்!
''அதிர்ந்துட்டாங்க பா...'' என, டீக்கடை விவாதத்தின் முதல் தகவலைத் துவக்கினார் அன்வர்பாய்.

''என்ன விபரம் ஓய்... யாருக்கு அதிர்ச்சி...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல தீ விபத்து நடந்துச்சு இல்லையா... கேள்விப்பட்டதும், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிர்ந்துட்டாங்க... இவங்களுக்கு பூர்வீகம் மதுரை... மேல மாசி வீதி, சத்தியமூர்த்தி தெருவுல வீடு இருக்கு...

''சம்பவம் நடந்த அன்னைக்கு, ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைப் பகுதி சுற்றுப் பயணத்துல இருந்திருக்காங்க... விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனே, கலெக்டர் வீரராகவ ராவைத் தொடர்பு கொண்டு விசாரிச்சிருக்காங்க...

''பா.ஜ., மாநில செயலர், சீனிவாசன்கிட்டேயும் பேசியிருக்காங்க... விரைவில் மதுரை வருவாங்கன்னு தெரியுது...'' என்றார் அன்வர்பாய்.

''மறைந்த முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கிற விவகாரத்துல, தி.மு.க., மாவட்ட செயலருக்கும், எம்.எல்.ஏ.,வுக்கும், வாக்குவாதம் ஏற்பட்டுச்சு வே...'' என, அடுத்த மேட்டரை துவக்கினார் அண்ணாச்சி.

''எந்த ஊர் விவகாரம்ங்க இது...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''திருவள்ளூர்ல, தெற்கு மாவட்ட செயலர் நாசர் தலைமையில, அண்ணாதுரை நினைவு நாள், 3ம் தேதி அனுசரிச்சாங்க... சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில, எம்.எல்.ஏ., ராஜேந்திரனும், கட்சி நிர்வாகிகளும் கலந்துக்கிட்டாவ... ஆனா, பேனர்ல, எம்.எல்.ஏ., பேர் போடல... இது சம்பந்தமா நாசர்கிட்டே கேள்வி கேட்டப்ப, அவர் சரியா பதில் சொல்லலே...

''உடனே, வாக்குவாதம் ஆகிப் போச்சு... பின்ன, தனித் தனியா மாலையைப் போட்டுட்டு கிளம்பிப் போயிட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அடிச்சிக்கிறதை, இவங்கல்லாம் எப்ப தான் நிறுத்தப் போறாங்களோ தெரியலீங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''கட்சியில் மகனை முன்னிலைப்படுத்த ஏற்பாடுகளை துவங்கிட்டார் ஓய்...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் குப்பண்ணா.

''யாருவே... ஸ்டாலினா...'' என குத்து மதிப்பாக கேட்டார் அண்ணாச்சி.

''அவர் தான், 'என்ட்ரி' ஆயாச்சே... 'போஸ்டிங்' போட வேண்டியது தான் பாக்கி... இப்ப, விஜயகாந்த் மகனோட முறை... தே.மு.தி.க., இளைஞரணி செயலரா, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் இருந்தார்... அவர் மேல ஏகப்பட்ட வசூல் புகார் இருக்கு...

''அவரை கட்சியின் துணைச் செயலரா, விஜயகாந்த் நியமிச்சுட்டார்... இப்ப இளைஞர் அணி செயலர் பதவி காலியா இருக்கு... அந்த பதவிக்கு, தன் மூத்த மகன் விஜய் பிரபாகரனை கொண்டு வர, விஜயகாந்த் விரும்பறார்...

''பிரபாகரனுக்கு அரசியல் கத்து தரதுக்காக, ஒரு மாநில நிர்வாகியையும், மாவட்ட செயலரையும் நியமிச்சு இருக்கார்... அவாளோட தான், விஜயகாந்த் மகன் சுத்திண்டு இருக்கார்... அவா ரெண்டு பேரும், விஜயகாந்த் மகனை, சுதீஷுக்கு எதிரா கொம்பு சீவி விட்டுண்டு இருக்கா ஓய்...'' எனக்கூறி முடித்தார் குப்பண்ணா.

நண்பர்கள் நடையைக் கட்டினர்; நாயர் வேறு வேலைகளைப் பார்க்கத் துவங்கினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement