Advertisement

மாமல்லபுரம் மீது அக்கறை காட்டுங்கய்யா...

மாமல்லபுரம் மீது அக்கறை காட்டுங்கய்யா...

புகைப்படக் கலைஞர்களுக்கான புத்தாக்க பயிற்சியின் ஒரு கட்டமாக மாமல்லபுரம் வரை கடந்த வாரம் போய்வந்தேன்.
அவ்வப்போது மாமல்லபுரத்தை அரையும் குறையுமாகவும் அவசர அவசரமாகவும் பார்த்திருக்கிறேன், இந்த முறைதான் நண்பர் சங்கர் உதவியுடன் ஆழமாகவும் நிதானமாகவும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.என்ன ஒரு அழகு என்ன ஒரு ரசனை.


ஏழாம் நுாற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட பல்வேறு வகையான

குடைவரைக்கோவில்கள் சிற்பங்கள் ரதங்கள்தான் மாமல்லபுரத்தின் சிறப்பு.இதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் வண்டி வண்டியாக செய்தி கொட்டிக்கிடக்கிறது.

மாமல்லபுரம் நமக்கு கிடைத்துள்ள பொக்கிஷம் அதை நன்கு பாதுகாத்து பராமரிக்க வேண்டாமா? என்பதுதான் எனக்குள் எழுந்த கேள்வி..அத்தனை வாகனபுகையையும் அர்சுனன் தபசு வாங்கிக்கொண்டு இருக்கிறது அந்த கரும்புகையை இன்னும் எத்தனை காலம்தான் தாங்கப்போகிறதோ?
பல இடங்களில் குடிமகன்கள் 'சரக்கு' அடித்துவிட்டு உடைத்துப்போட்ட பாட்டில்கள் சிதறிக்கிடக்கிறது சுற்றுலா பயணியர் காலில் குத்தியதோ இல்லையோ பார்த்த நமக்கு நெஞ்சில் குத்தி ஊமை ரத்தத்தை வரவழைத்தது.வெளிநாட்டினர் ரசித்து ரசித்து படமெடுக்கின்றனர் உள்நாட்டு காதல் ஜோடிகள் தங்களது காதலை ஆனி கொண்டு கிறுக்கு கிறுக்கு என்று கிறுக்குகின்றனர்,வரலாற்றில் இடம் பிடிக்க இதுவா வழி?


சுற்றுலா பயணிகளை காசு கொட்டும் எந்திரமாக பாவிப்பதை நிறுத்தினால் பராவாயில்லை எங்கே போனாலும் ஏதாவது ஒரு பேப்பரை கிழித்து கொடுத்துவிட்டு காசு கொடு என்கிறார்கள் ஒரே இடம் ஒரே கட்டணம் ஒரே வசூல் என்று கொண்டுவந்தால் நல்லது, வசூல் தொல்லை தாளமுடியவில்லை.
முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் புண்ணியத்தில் கலங்கரை விளக்கத்தின் மீதேறி ஊரை சுற்றி பருந்து பார்வையில் பார்க்கமுடிகிறது.கலங்கரை விளக்கத்தின் பக்கத்திலேயே லைட் ஹவுஸ் மியூசியம் இருக்கிறது பல அபூர்வ பொருட்களுடன் கூடிய அந்த மியூசியத்தை சீந்துவார் யாருமில்லை.

மாமல்லபுரத்தை வெளிநாட்டினரும்,வெளியூர்க்காரர்களும் மதிக்கும் அளவு உள்ளூர்காரர்கள் மதிக்கவிட்டாலும் பராவாயில்லை மிதிக்காமலாவது இருக்கலாம் இயற்கை கொடையாக கொடுத்த அழகிய கடற்கரையை நிம்மதியாக பயன்படுத்த முடியாத அளவிற்கு சந்தைக்கடையாக்கி வைத்துள்ளனர்.
இது நம்ம ஊர் இது நம்ம பொக்கிஷம் என்ற உணர்வு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஏற்பட வேண்டும் ஏனேனில் மாமல்லபுரத்தின் ஒரு துாணைக்கூட இனி யாரும் செய்யமுடியாது...

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    இவையெல்லாம் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இதை நம் வருங்கால சந்ததியினரும் கண்டுகளிக்கும் வகையில் பாது காக்கப்பட வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement