Advertisement

ராகுல் தலைமைவெற்றிகளை தருமா?

அடுத்த லோக்சபா தேர்தலில், காங்., பெறும் வெற்றியை முடிவு செய்யும் தலைவராக, ராகுல் இருப்பார். காங்கிரசில், நீண்ட வாரிசு தலைமையில், நேருவில் இருந்து துவங்கி கணக்கு பார்த்தால், இவர் ஆறாவது தலைவர். நேரு - காந்தி வாரிசு கையில், கட்சி இருப்பது தொடர்கதையாகிறது. ஏற்கனவே ராகுல், பேட்டி ஒன்றில், 'அகிலேஷ், ஸ்டாலின் போன்ற தலைவர்கள், வாரிசு அரசியல் நடத்துகின்றனர்' என்பதை சுட்டிக்காட்டி, தன் துணைத் தலைவர் பதவியை, எளிதாக விளக்கினார்.
கோல்கட்டாவில், 1998ல் நடந்த, காங்., மாநாட்டில், அன்றைய தலைவர், சீத்தாராம் கேசரியை பதவியில் இருந்து அகற்றி, கட்சி தலைமையை ஏற்றார், சோனியா. துணைத் தலைவராக இருக்கும் ராகுல் தலைவராக வர, தன், 70வது வயதில், காய் நகர்த்தி இருக்கிறார்.
காங்கிரசின் தேர்தல் நடைமுறைகளின்படி, இவருக்கு போட்டியாக தலைவர் பதவிக்கு, யாரும் நிற்கவில்லை. அத்துடன், இவரை தலைவராக்க, 80க்கும் அதிகமான ஆதரவு மனுக்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து குவிந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி, பிரணாப், இப்பதவியை குறிவைத்து, கடைசியில் தனக்கு கிடைத்த ஜனாதிபதி பதவியால், மனநிறைவு பெற்றவர். அவர் முதலில் ராகுலுக்கு திலகமிட்டு, அவர் தலைமை பதவிக்கு வர, ஆதரவு காட்டி இருக்கிறார்.
அதே போல, சோனியா, ஷீலா தீட்சித், அகமது படேல், குலாம்நபி ஆசாத் உட்பட பல தலைவர்கள், அவர் தலைமை பதவி ஏற்க, ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இளைஞர்களுக்கு ஆக்கம் தரும் வகையில், பல்வேறு பொறுப்புகளில் பலரை நியமித்த ராகுல், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தேர்வுக்கான கட்டமைப்பு சிறக்க, ஏற்பாடு செய்யவில்லை. பா.ஜ.,வில், கட்சி தலைமை முடிவில், ஆர்.எஸ்.எஸ்., கருத்து உள்ளது என்ற கருத்தை சுட்டிக்காட்டி, காங்கிரசில், சோனியா கூட, மன்மோகன் சிங்கை தாண்டி, 'அதிகார கேந்திரமாக' இருந்தார் என, ஒப்புமையாக கூறப்படுகிறது.
ஆனால், பா.ஜ.,வில் வசுந்தரா, சிவ்ராஜ் சிங் சவுகான், ரமண் சிங், பரீக்கர் என, பல மாநிலங்களில் வலுவான தலைவர்கள் உள்ளனர்.
இது, அன்றைய காலங்களில், காமராஜர், ஒய்.பி.சவான், நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டீல், பிஜு பட்நாயக் என்ற அசைக்க முடியாத ஜனநாயகவாதிகள் இருந்ததை, காங்கிரசின், 132 ஆண்டு வரலாற்றின் பக்கங்களில் காணலாம்.
காங்., கட்சி, நேருவின் சோஷலிசம், இந்திராவின் மதச்சார்பின்மை மற்றும் இடதுசாரி சிந்தனை கலந்த திட்டங்கள், ராஜிவின் பரபரப்பு அரசியல் என்ற காலங்களில், சிறிது சிறிதாக காலுான்றி, பா.ஜ., வளர்ந்தது. அது இன்று, ஆர்.எஸ்.எஸ்., பின்புல ஆதரவுடன் நிலைத்து இருக்கிறது.
மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியில் வைத்து இருந்து, தனியாக, 'பவர் சென்டர்' நடத்திய சோனியா அணுகுமுறையானது, பல தடவை நடந்த சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டு உள்ளன. அது குறித்த விவாதங்களும், தனியாகத் தொடர்ந்தன.
இன்று மாபெரும் கட்சியான காங்கிரஸ், வெறும், 44 எம்.பி.,க்களைக் கொண்டிருக்கிறது. இது, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாத நிலையாகும். இனி ராகுல் தலைமை, பல்வேறு மாநிலங்களில் உள்ள சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்ற இளம் தலைவர்களை வளர்த்து, மீண்டும் செல்வாக்கு பெறுமா என்பதை, இன்று யாரும் கூற முடியாது.
பத்து ஆண்டுகளாக, எம்.பி.,யாக இருந்த ராகுல், அதற்கேற்ற அரசியல் திண்மை பெறவில்லை. முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் கருத்துப்படியும், இப்போது அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்துகளின் எதிர்பார்ப்பிலும், மிகப்பெரிய பொறுப்புடன், கட்சியை வளர்க்க வேண்டிய சுமை வந்திருக்கிறது. இந்திராவின் பரிதாப மரணம், ராஜிவின் துயரச் சாவு ஆகியவற்றுக்கு பின், காங்., தலைமை யார் கையில் என்ற மாதிரி, இப்போது குழப்பமும் இல்லை. சரியான நேரத்தில், இயல்பாக ராகுல் தலைவராகிறார். அவரும் கோவிலுக்கு சென்று வழிபடுவது, மெஜாரிட்டி மக்களுக்கு ஆதரவாக பேசுவது போன்ற செயல்களுக்கு மாறி வருகிறார்.
அடுத்ததாக, ஷீலா தீட்சித், திக்விஜய் சிங், ப.சிதம்பரம், அகமது படேல், ஆனந்த சர்மா போன்ற தலைவர்களை, 'வழிகாட்டும் தலைவர்கள்' என்ற, பா.ஜ., பாணியில் செயல்பட வைத்து, அக்கட்சியின் நெடிய வரலாறுகளை புதுப்பிப்பாரா என்பது, இனி வரும் காலங்களில் தெரியும்.
அதை விட, தேர்தல் வெற்றிகளை எந்தளவு ராகுல், அக்கட்சியின் தலைவராக இருந்து தரப் போகிறார் என்பதை, நாடு உன்னிப்பாக கவனிக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • skv - Bangalore,இந்தியா

    மோடியின் நேர்மையை விரும்பாதவாலே அதிகம் இருக்காங்க ஊழல்கள் பழகி பழகி நேர்மை என்றால் என்ன என்று தெரியாத மக்களும் லஞ்சமேதான் வாழ்க்கை என்றும் முந்தைய ஆட்சிகள் அமைந்ததால் மக்கள் லஞ்சம் தான் பெஸ்ட் என்று மனநிலைக்கு பழகிட்டாங்க அதையே ஊக்குவிக்கும் முந்தையா ஆட்ச்சியாளர்கள் எல்லோரும் திருந்த வேண்டும் நேர்மை சத்தியம் தான் பெஸ்ட் என்றால் பிஜேபி க்கு கிட்டும் ஜெயம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement