Advertisement

'டவுட்' தனபாலு

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உமாபாரதி: என்னிடம் இருந்த, நீர்வளத்துறை இலாகா, நிதின் கட்கரியிடம் கொடுக்கப்பட்டது சரியான முடிவு தான். 2018ம் ஆண்டிற்குள், கங்கை நதியை துாய்மைப்படுத்துவதற்கான பணிகளை துவக்கவில்லை எனில், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்குவேன்.

டவுட் தனபாலு: நிதின் கட்கரி வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, மூணு மாசம் தான் ஆகுது... ஆனா, நீங்க மூணு வருஷமா இருந்தீங்க... இப்போ கெடு விதிக்குறீங்களே... ஆமா, யாரை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவீங்க என்ற, 'டவுட்'டை விளக்கினாத் தேவலை...!

****

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு: எங்களை தேர்தல் களத்தில் எதிர்க்கக் கூடிய சக்தி, தி.மு.க.,வுக்கு மட்டுமே உண்டு. நாங்கள், தி.மு.க.,வை மட்டுமே எதிரியாக பார்க்கிறோம். எதிரியாக இருப்பதற்கும், ஒரு தகுதி வேண்டும்.

டவுட் தனபாலு: வசனம் எல்லாம், வக்கணையாத்தான் இருக்கு... நீங்க குறிப்பிடும் இந்த எதிரி, எப்போ உருவானாங்க... 'கண்ணுக்கு எட்டிய வரையில், எதிரிகள் யாருமில்லை'ன்னு, ஜெ., சொல்லி இருந்தாங்க... 'தி.மு.க., அவ்வளவு தான்... இன்னும் நுாறாண்டுக்கு, அ.தி.மு.க., ஆட்சி தான்'னு, முதல்வர் துவங்கி, அ.தி.மு.க.,வினர் அனைவரும் சொல்லி வர்றீங்களே... அதனால தான் இந்த, 'டவுட்!'

****

ஜெ., அண்ணன் மகள் தீபா: என் அத்தையின் முகபாவனையில் இருப்பதாலும், அவரது ரத்த வாரிசு என்பதாலும், ஆர்.கே.நகரில் மக்களிடம் எனக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. நான் போட்டியிட்டடால், அ.தி.மு.க., தோல்வி அடைந்துவிடும் என்ற பயத்தில், என் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

டவுட் தனபாலு: 'கடந்த முறையும், அதே சாயலிலும், ரத்த வாரிசாகவும் தானே இருந்தீங்க... அப்போது உங்க வேட்பு மனு ஏற்கப்பட்டதே... அது என்ன கணக்கு... இடைப்பட்ட இந்த காலத்தில், அப்படி என்ன செஞ்சு, உங்க செல்வாக்கு கூடிடுச்சு... மனுவை தள்ளுபடி செய்ததற்கும், அ.தி.மு.க.,வுக்கும் என்ன சம்பந்தம்'னு, அடுக்கடுக்கா, 'டவுட்' எழுப்பினால், 'அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்'னு, வழக்கம் போல நழுவுவீங்களோ...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement