Advertisement

டீ கடை பெஞ்ச்

தோட்டக்கலை துறை இயக்குனர் பதவிக்கு போட்டா போட்டி!



''புகார் பண்ணியும், நடவடிக்கை எடுக்கலை ஓய்...'' என, முதல் விஷயத்தை கையில் எடுத்தார் குப்பண்ணா.

''என்ன விஷயம் பா...'' என, விசாரித்தார் அன்வர்பாய்.

''மதுரையில நிறைய பேர், லோக்கல் சேனல்கள் நடத்திண்டு இருக்கா... இதுல, அமைச்சரின் நெருங்கிய சொந்தக்காரரும் ஒருத்தர்...

''இந்த சேனல்கள்ல, அனுமதியில்லாம, புது படங்களை போடறதா, தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார் போயிருக்கு... சங்கத்துல இருந்து வந்த ஒருத்தர், மதுரையில், 'ரூம்' போட்டு, உள்ளூர் சேனல்களை பார்த்திருக்கார் ஓய்...

''அப்ப, அமைச்சர் உறவினரின் சேனல்ல, சந்திரமுகி படத்தை போட்டிருக்கா... அதை வீடியோ ஆதாரமா பதிவு பண்ணி, திருட்டு வீடியோ தடுப்பு பிரிவுல, சங்கம் தரப்புல புகார் குடுத்தா ஓய்...

''ஆனா, கேபிள் ஆப்பரேட்டரை மட்டும் தான் போலீசார் கைது பண்ணினா... அமைச்சரின் சொந்தக்காரர் மேலே, கையே வைக்கலை ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''ராஜு வீட்டுக்கு போன செந்திலை இன்னும் காணோமே...'' என, தெருவை பார்த்து முணுமுணுத்த அன்வர் பாயே தொடர்ந்தார்...

''தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம், கோவை அரசு போக்குவரத்து கழக, எம்.டி., பதவிகள், எட்டு மாசத்துக்கு மேல காலியா இருக்கு...

''அடுத்த வருஷம், இன்னும் சில, எம்.டி.,க்கள், 'ரிடையர்' ஆகுறாங்க... பதவி உயர்வுல கூட, இந்த, எம்.டி., பதவிக்கு வர, எந்த அதிகாரியும் தயாரா இல்லை பா...

''ஏன்னா, போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமை படுபாதாளத்துல இருக்கு... மாசா மாசம், ஊழியர்களுக்கு சம்பளம் போடவே, நாக்கு தள்ளி போயிடுது பா...

''கோர்ட், கேஸ், இழப்பீடு, ஜப்தின்னு எக்கச்சக்க பிரச்னைகள்ல, போக்குவரத்து கழகங்கள் சிக்கி தவிக்குது... எல்லாத்தையும், 'டீல்' பண்ண முடியாதுங்கிறதால, எம்.டி., பதவிகளை யாருமே விரும்ப மாட்டேங்குறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''என்கிட்ட பதவிக்கு முட்டி மோதுத கதை ஒண்ணு இருக்கு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''வேளாண் துறையில, முக்கிய பிரிவா தோட்டக்கலை துறை இருக்கு... காய்கறி, பழங்கள், பூக்கள், மூலிகை, மலை பயிர்கள் சாகுபடியை மேம்படுத்த, இந்த துறைக்கு, மத்திய - மாநில அரசுகள் கோடிக்கணக்குல நிதி ஒதுக்குது வே...

''இதன் இயக்குனரா இருந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அவங்க சொந்த மாநிலத்துக்கு, 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு போயிட்டாங்க...

''காலியான இயக்குனர் பதவியை கைப்பத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கடுமையா போட்டி போடுதாவ வே...

''அதே துறையில இருக்கிற ஒரு அதிகாரி, ஏற்கனவே இந்த பிரிவுல இருந்த ரெண்டு அதிகாரிகள், பதவி உயர்வு மூலம், ஐ.ஏ.எஸ்., ஆன ரெண்டு அதிகாரிகள்னு, நிறைய பேர், அமைச்சர்கள், மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மூலமா முட்டி மோதுதாவ...'' என, முடித்தார் அண்ணாச்சி. பெரியவர்கள் அரட்டை, வேறு திசைக்கு திரும்பியது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement