Load Image
Advertisement

டீ கடை பெஞ்ச்

டி.எஸ்.பி., வீட்டு நாயை பராமரிக்கும் போலீசார்!
''அணை மதகு உடைஞ்ச விவகாரத்துல, நிறைய பேர் சிக்குவாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை விவகாரமா வே... '' என, விசாரித்தார் அண்ணாச்சி.

''ஆமாம்... இந்த அணையில, போன வருஷம் தான், 1.10 கோடி ரூபாய் செலவுல, சீரமைப்பு பணிகள் நடந்திருக்கு... இதுல, 80 சதவீதம் உலக வங்கி நிதி, மீதம் மாநில அரசின் நிதி...

''இந்த பணத்துல, மதகுகளை சரி செய்றது, நீர் கசிவுகளை அடைக்குறது உள்ளிட்ட வேலைகளை செஞ்சாங்க... 'கனமான பொருள் மதகுல மோதுனதால தான், உடைஞ்சிடுச்சு'ன்னு அதிகாரிகள் சமாளிக்குறாங்க...

''மத்திய அணைகள் பாதுகாப்பு இயக்கம், மத்திய அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள், இது சம்பந்தமா விசாரணையை ஆரம்பிச்சிருக்காங்க...

''ஏற்கனவே, அணையின் செயற்பொறியாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருக்கார்... முறைகேடுகள் அம்பலமானா, இன்னும் நிறைய அதிகாரிகள் சிக்குவாங்கன்னு சொல்றாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

''பிரசாரத்துலயும், தனி ஆவர்த்தனம் நடத்த போறாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.

''ஆர்.கே.நகர் தகவலா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ஆமா... தி.மு.க., வேட்பாளருக்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு குடுத்துட்டுல்லா... தி.மு.க., வேட்பாளரை ஆதரிச்சு, பிரசாரம் செய்ய, காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் தயாராயிட்டு இருக்காவ வே...

''திருநாவுக்கரசர், சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன்,பீட்டர் அல்போன்சுன்னு அஞ்சு கோஷ்டி தலைவர்களும், தனித்தனியா மேடை போட்டு, வேற வேற நாட்கள்ல, தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட போறாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

''டி.எஸ்.பி., வீட்டு நாயை பராமரிக்க, தினமும் ஒரு போலீஸ்காரர் போறாரு பா...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அன்வர்பாய்.

''விளக்கமா எடுத்து விடும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''புதுக்கோட்டை மாவட்டத்துல இருக்குற ஒரு, டி.எஸ்.பி., 40 நாள் மருத்துவ விடுப்புல, வெளியூர் போயிருக்கார்... இவர் கட்டுப்பாட்டுல, அஞ்சு போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கு பா...

''டி.எஸ்.பி., வீட்டுல இருக்குற நாய்க்குட்டிக்கு, தினமும் ஒரு போலீஸ்காரர் போய், பால், சாப்பாடு போட்டு பராமரிக்கணும்னு உத்தரவு போட்டுட்டு போயிருக்கார்...

''ஏற்கனவே ஸ்டேஷன்கள்ல குவிஞ்சு கிடக்குற வேலைகளை பார்க்கவே திணறினாலும், அதிகாரி உத்தரவை மீற முடியுமா...டி.எஸ்.பி., வீட்டு நாயை பராமரிக்க, தினமும் ஒரு போலீஸ்காரர் போயிட்டு இருக்காரு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''இன்னைக்கு வியாழக் கிழமை... தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு போவணும்...'' என்றபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்கள் அரட்டை தொடர்ந்தது.



வாசகர் கருத்து (3)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement