Advertisement

சொல்கிறார்கள்

விவசாய வேலைகள் அனைத்தும் அத்துப்படி!


பல்கலையில், எம்.பில்., படித்தபடி, விடுமுறை நாட்களில், விவசாய வேலை செய்து வரும் பொன்னுமணி: தஞ்சாவூர் மாவட்டம், வீரமுண்டார்குடி காடு கிராமத்தை சேர்ந்தவள் நான். என் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா எல்லாருமே, விவசாய கூலி தான். அப்பா, விவசாய கூலி; அம்மா, நாலைந்து ஆடுகளை சொந்தமாக வைத்து, மேய்த்து வருகிறார். சிறு வயது முதலே, வயல் வேலை, என் ரத்தத்தில் ஊறிப் போனது. ஏழாம் வகுப்பு படிக்கும்போதே, வயல், தோட்டத்தில், கூலி வேலைக்கு போவேன். விவசாய வேலை அனைத்தும் அத்துப்படி. அப்போதிருந்தே, என் செலவுக்காக, அம்மா, அப்பாவிடம் பணம் கேட்டது இல்லை. சனி, ஞாயிறு விடுமுறை, 10, 15 நாள் மொத்தமாக விடுமுறை வந்தால், வயல், தோட்ட வேலைக்கு போய் வருவேன். நாற்று நட, ஒரு நாளைக்கு, 300 ரூபாய் கூலி கிடைக்கும். களை பறித்தால், நேரத்துக்கு ஏற்ப கூலி தருவர். நெற்கதிர் அறுக்க, கதிர் கட்டு துாக்க, கரும்பு வெட்ட, கரும்பு கட்டு துாக்க என, தனித்தனி கூலி.
விடுமுறையில் பகலில் வயல் வேலையும், மாலை, இரவில் உட்கார்ந்து அன்றைய பாடத்தையும் படித்து விடுவதால், கஷ்டம் எதுவும் தெரியவில்லை.


இவ்வாறு வேலை செய்து, காலேஜ் பீஸ், புத்தகம் நோட்டுக்கு செலவு செய்து, மீதி பணத்தில், 4 கிராமில் இரண்டு, 'செட்' கம்மல், அரை சவரனில் செயினும் வாங்கியுள்ளேன்.
காலேஜ் பீஸ் கட்ட, வேறு ஏதும் திடீர் செலவிற்கு, அதெல்லாம் அடகு கடைக்கு போனாலும், கஷ்டப்பட மாட்டேன். அப்போதும், அப்பா, அம்மாவை கஷ்டப்படுத்த மாட்டேன். கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தை சேர்த்து, மீட்டு விடுவேன்.


ஏழு முதல் பிளஸ் 2 வரை, உள்ளூர் அரசு பள்ளியில் படித்தேன். தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கல்லுாரியில், பி.ஏ., படித்து, அதிக மார்க்கில் தேர்ச்சி பெற்றேன். திருச்சி பாரதிதாசன் பல்கலையில், எம்.ஏ., படிக்க சேர்ந்தேன்.


திருச்சி பெரிய மிளகுப் பாறையில், 1,000 ரூபாய் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, படித்து வருகிறேன். அறையில், நானும், என் தோழியும் சமைத்து சாப்பிட்டு கொள்வோம்.
எம்.பில்., படிப்பில், 'ஆரம்ப கல்வி ஆசிரியைகளின் சவால்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து வருகிறேன். தற்போதும், விடுமுறை நாட்களில், வயல் வேலைக்கு போய் வருகிறேன்.
படிப்பில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த வேண்டுமோ, அந்தளவு கவனம் செலுத்தி படிக்கிறேன். என்னிடம் சோம்பேறித்தனம் கொஞ்சம் கூட கிடையாது. சோம்பல் இருந்தால் படிக்கவும் முடியாது; ஏதாவது வேலைக்குப் போய் வரவும் முடியாது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement