Advertisement

மீனவர் சந்தித்த துயரம்...

வட கிழக்கு பருவ மழை, இத்தடவை இயல்புக்கு அதிகமாக பெய்த போதும், அதன் பாதிப்பை நினைவில் கொள்ளும் வகையில், 'ஒக்கி' புயல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக, புயல் என்பது, மழையுடன் காற்று சேரும் போது, அதன் பாதிப்பு அதிகம் இருக்கும். மீனவர்கள் அடைந்த துன்பம் அளவிடற்கரியது என்பது உண்மை. தமிழகம் மட்டுமல்ல; கிழக்கு கடற்கரை, மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள மாநிலங்கள், மீனவர்கள் வாழ்வாதாரம் அதிகம் உள்ள இடங்கள். குமரி மாவட்டம், இதில் முன்னதாக நிற்கிறது. அதனருகே, கேரள மாநிலம், கொல்லம் வரை, கடற்பரப்பில் மீன் வளம் தேடி, இத்தொழில் இப்போது ஊக்கம் அடைந்திருக்கிறது. ஒரு காலத்தில், மீனவர் பிடித்த மீன்களை, குறைந்த விலைக்கு வாங்கும் தரகர் அமைப்புகள், இப்போது, சிறிது சிறிதாக குறைந்துள்ளன. அதே போல, ஏற்றுமதி நோக்கிலும், சந்தையில் மீன் எந்த விலைக்கு விற்கப்படுகிறதோ, அதை உணரும் அளவுக்கு, அதிக விழிப்புணர்வு வந்திருக்கிறது. தமிழகத்தில், குமரி முதல் சென்னை வரை, பல லட்சம் மீனவர் குடும்பங்கள் உள்ளன. அதுவும், குமரியில் இயந்திர படகுகள், 1,200க்கும் அதிகமாக இத்தொழிலில் முன்னிற்கின்றன. இயல்பாக, இத்தொழிலில் இப்போது, ஜி.பி.எஸ்., என்ற வசதி மூலம், அவர்கள் எந்த அளவு கடலில் பயணிக்கின்றனர் என்பதை அறியவும், மொபைல் வசதிகள் அதிகமாகவும், அவற்றை பயன்படுத்தும் அளவில் அத்தொழில் வளர்ந்து இருக்கிறது.
ஆனால், 'ஒக்கி' புயல், இவர்கள் கணிப்பை முறியடித்திருக்கிறது. பொதுவாக, கடலின் சீற்றமிக்க அலைகள் அல்லது கடல் பகுதியில் பெய்யும் அதிக மழை ஆகியவற்றை, இவர்கள் தாண்டி, பத்திரமாக திரும்பும் வகையில், இவர்கள் தொழிலில் தேர்ந்துள்ளனர்.
ஆனாலும், சில ஆண்டுகளாக, மீன் பிடிக்கச் சென்ற சில, 100 பேர், திரும்பி வராத கணக்கும் உள்ளது. இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்கச் செல்லும் போது, அந்த அரசின் கெடுபிடிகளால், சிலர் சிரமப்பட்டதும், அவ்வப்போது அரசின் உதவியுடன், அங்கு சிறைவாசம் என்ற துயரம் மாறியதும் உண்டு. இப்புயல், கேரள மீனவர்களையும் பாதித்திருக்கிறது. லட்சத் தீவை அழித்த இப்புயல், வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் பயணித்து, மீன்களை அள்ளிய பலரை, இத்தடவை அதிகம் பாதித்திருக்கிறது. இதற்கு அடையாளமாக, மஹாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரி, கோவா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநில கடலோரங்களில், படகுகளுடன் தப்பிய தகவல் வந்திருப்பது, ஆறுதல் தரும் விஷயம்.

இது குறித்து, தப்பிய மீனவர் ஒருவர் அளித்த பேட்டியில், 'கடலில் லேசான சீற்றம் கண்டு, நாங்கள் பயப்பட மாட்டோம்; ஆனால், இத்தடவை பல ஆண்டுகளுக்கு பின், அதிக அளவில், எங்களால் ஏதும் செய்ய முடியாத வகையில், படகுகளுடன், எங்களை புயல் புரட்டி விட்டது. அதிகமான குளிர் இருந்தது' என்றிருக்கிறார். குமரி கிராமங்களில், மீனவ குடும்பத்தைச் சந்தித்த, மத்திய ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமனிடம், சர்வதேச மீனவ வளர்ச்சி அறக்கட்டளை தலைவர், ஜஸ்டின் ஆன்டனி, நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் குறித்த தகவல்களை, முழு விபரங்களுடன் தந்துஇருக்கிறார். இது இத்தொழில் அடைந்த, நவீன வளர்ச்சியின் அடையாளம். துாத்துக்குடி பகுதியில், 'இம்மாதிரி பிரச்னைகளை களைய, பேரழிவு துயர் துடைப்பு மையம்' அமைக்க தெரிவித்த யோசனையையும், அமைச்சர் ஏற்றிருக்கிறார்.
மத்திய ராணுவ அமைச்சகம், உள்துறை அமைச்சகம், கடலோர காவல் படை, கப்பற்படை ஆகிய அனைத்தும், ஒருங்கிணைந்து தேடல் நடத்தியதால், பலர் மீட்கப்பட்ட தகவல், சற்று ஆறுதல் தருகிறது. இப்பிரச்னையில், மத்திய அரசுடன், முழு வேகத்துடன் இணைந்து, தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது என்பதும், அதனால், அடுத்தகட்ட தீர்வுகள், சிரமமின்றி தொடர வாய்ப்புகள் அதிகரிக்கலாம். எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் நேரடியாக இங்கு சென்றது, அங்குள்ள மீனவ குடும்பங்களைச் சந்தித்தது, பா.ஜ., தலைவர்கள் காட்டிய அக்கறை ஆகியவை, இனி மீனவர் பிரச்னைகளில் எவை முன்னுரிமைக்கானது, கையாள வேண்டிய விதம் எப்படி என்பதற்கான தெளிவை கொடுக்கும். இயந்திர படகுகள் பெருக்கம், பல கடல் மைல்கள் கடந்து மீன் பிடிக்க வேண்டிய கட்டாயம், மாற்றுத் தொழிலில் பரிச்சயம் இல்லாத சூழ்நிலை ஆகியவற்றை, மீனவர்கள் கையாள வேண்டிய கட்டாயத்தை, இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement