Advertisement

இது உங்கள் இடம்


நடிகர்களே... சிந்தியுங்கள்!

என்.ராமகிருஷ்ணன், பழநியிலிருந்து எழுதுகிறார்: சினிமா தயாரிப்பாளர், அசோக்குமார், கந்து வட்டி கொடுமையால், தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, தமிழ் சினிமா உலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


கந்து வட்டிக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நடிகர் விஷால் மற்றும் இதர நடிகர்கள், அறிக்கை விடுகின்றனர். அதற்கு முன், சினிமா தயாரிக்க விரும்புவோர், சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். எவ்வித முதலீடும் இல்லாமல் சினிமா தயாரிக்க ஆசைப்படுவோரின் எண்ணிக்கை, அதிகரித்தபடி செல்கிறது.
இவர்கள் வட்டிக்கு வாங்கும் பணத்தின் பெரும் பகுதி, பிரபலமான நடிகர் - நடிகையரின் சம்பளத்துக்கே சென்று விடுகிறது. அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், சாப்பாடு, தங்கும் செலவு எல்லாம், தயாரிப்பாளரின் தலையில் விழுகிறது. ஆனால், சிறு சிறு வேடங்களில் நடிப்போருக்கு ஒழுங்காத சம்பளம் தருவதில்லை.ஆவேசமாக அறிக்கை விடும்,

விஷாலுக்கு சில கேள்விகள்:

* இந்தியாவின் பிரதமரும், ஜனாதிபதியும் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர்; உங்களைப் போன்ற நடிகர், நடிகையர் எத்தனை கோடிகள் வாங்குகிறீர்கள் என்பதை மக்களுக்கு தெரிவிக்கத் தயாரா?


* 'ஓசி'யில் வெளிநாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றால், காதல் காட்சிகளை ஒவ்வொரு நாட்டிலும் படமாக்க சொல்வீர்கள். ஏன், தமிழகத்தில் படமாக்கினால் ரசிகர்கள் பார்க்க மாட்டார்களா? தயாரிப்பாளர்கள் கடனாளி ஆவதற்கு மூலகாரணமே, உங்களைப் போன்றோர் தான். இன்று நீலிக் கண்ணீர் வடிப்பதால், பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது.


* அன்று, எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தயாரிப்பாளர்களின் சிரமம் கருதி, குறைந்த சம்பளத்திலும், ஏன் சம்பளமே வாங்காமலும் நடித்துக் கொடுத்திருக்கின்றனர். அந்த மனிதாபிமானம், இன்றைய நடிகர்களுக்கு இருக்கிறதா?

தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்...

நடிகர்களுக்காக படம் ஓடும் காலம் மலையேறி விட்டது. கதை மட்டும் நன்றாக இருந்தால், யார் நடித்தாலும் படம் ஓடும். பாலசந்தரும், பாரதிராஜாவும், குறைந்த செலவில் படம் எடுத்து வெற்றி பெறவில்லையா?

வட்டிக்குப் பணம் வாங்கி, படம் தயாரிப்பதற்கு முக்கிய காரணம், படம் வெற்றி பெற்று விட்டால், சீக்கிரமே கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்ற பேராசை தான். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்கள் எத்தனையோ உள்ளன; அவற்றைத் தேர்ந்தெடுங்கள். எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறாதீர்கள்.

அரசியல் மட்டுமல்ல; சில நேரங்களில், சினிமா உலகும் சாக்கடை தான் என்பதை, இவர்கள் புரிந்து கொண்டால் தான், தற்கொலை சம்பவங்களை தடுக்க முடியும்.அரசு பணிக்குபோட்டி தேர்வுதவறு இல்லை!

பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'புண்ணியவான்களே வழிவிடுங்களேன்' என்ற தலைப்பில், 'டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில் பட்டதாரிகளை புறக்கணிக்க வேண்டும்; 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தோருக்கு மட்டும், இத் தேர்வு நடத்த வேண்டும்' என, வாசகர் ஒருவர் கோரி இருந்தார்.

வேலையற்றோருக்கு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது அரசின் குற்றம். அரசு மீது கோபப்படுவதை விட்டு விட்டு பட்டதாரி, முதுகலை மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகளிடம் பாயக் கூடாது. டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்படும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு மட்டுமல்ல; கடைநிலை ஊழியர், பியூன், துப்புரவு பணியாளர் என, எந்த வேலையாக இருந்தாலும், படிப்பையும், கவுரவத்தையும் பாராமல் லட்சக்கணக்கான பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். அவர்களில் பலர் தேர்வு செய்யப்பட்டு, அப்பதவி களில் பணியாற்றியும் வருகின்றனர்.

கல்வித் தகுதிக்கேற்ப பணியிடங்கள், அரசால் இன்னும் உருவாக்கப்படவில்லை. அரசு வேலைக்கு போட்டி போடுவதில் தவறு இல்லை. அதிகமாக படித்தது பாவச் செயல் அல்ல; அதற்கான தண்டனையும் இதுவல்ல!

பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி பட்டம் பெற்றவர்களில், பெரும் பகுதியினர் பரம ஏழைகள் தான். கல்விக் கடனில் பட்டம் பெற்று, கடனை அடைக்க முடியாமல் அல்லல்படுவோரை, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு எழுத வேண்டாம் என, எப்படி கூற முடியும்?
பத்தாம் வகுப்பு மட்டும் படித்தோரை நினைத்தால், இன்னமும் பரிதாபமாக தான் இருக்கிறது.
இதற்கு என்ன தீர்வு என்றால், குரூப் - 4 பணியிடங்களில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு என, தனி இட ஒதுக்கீடு செய்யலாம். இதன் மூலம், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்!


புல்லுருவிகளைகளை எடுக்கபாருங்களேன்!

ம.அன்புச்செல்வன், வீரபாண்டி, தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பீஹார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ்குமாருக்கும், சரத்யாதவுக்கும் இடையிலான, 'தாவா' இருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெரும்பான்மை, எம்.எல்.ஏ., - எம்.பி., மற்றும் கட்சி நிர்வாகிகளை வைத்துள்ள, நிதிஷ்குமாரிடம், கட்சியையும், சின்னத்தையும் வழங்கி, தீர்ப்பு அளித்துள்ளது.அதே நிலைப்பாட்டில் தான், தமிழகத்தின் ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,வுக்கும், எதிர் அணியைச் சேர்ந்த, தினகரன் அணியினருக்கும் இடை யே நடந்த, தாவாவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; இதில், இந்திய தேர்தல் கமிஷனை குற்றம் சொல்வதற்கில்லை!
இவ்விரு வழக்குகளிலும், இந்திய தேர்தல் கமிஷன், பாரபட்சமின்றி, நடுநிலையுடன் தீர்ப்புகளை வழங்கிஇருக்கிறது.

கட்சியும், சின்னமும் கிடைத்திருக்கும் மகத்தான வெற்றியை, பன்னீர் செல்வம் - பழனிசாமி அணியினரும், தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் குதுாகலமாக கொண்டாடினர்.

தற்போது, பன்னீர் - பழனிசாமி இடையே பூசலை உருவாக்க, சில புல்லுருவிகள் திட்டமிட்டு வருகின்றனர். சசிகலா சிறைக்குச் செல்லும் முன், மதுரையில் தான், முதல் பூசலை அங்குள்ளோர் பரப்பினர்.அதே, 'புல்லுருவி' வேலையை தான், தற்போதும் செய்கின்றனர். காமராஜர் முதல்வராக இருந்தபோது, பல திட்டங்களை தமிழகத்துக்கு வழங்கினார், அப்போதைய பிரதமர் நேரு; அதே சூழ்நிலை இன்று நிலவுகிறது.பிரதமர் மோடியின் முழுமையான ஆதரவு, தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது. அதை, மாநில வளர்ச்சிக்கு, அ.தி.மு.க., ஆட்சியாளர்கள் பயன்படுத்தி, பிரதமருக்கு நற்பெயர் பெற்றுத் தர வேண்டும்.கட்சியில் இருக்கும் புல்லுருவிகளை துணிச்சலோடு, களை எடுக்க வேண்டும். இவர்களை களை எடுப்பதால், ஆட்சி போனாலும் பரவாயில்லை. கட்சி சசிகலா குடும்பத்தினருக்கு போகாது.மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, மகத்தான வெற்றியை பெற்று மானத்துடன் வாழலாம்!

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    சினிமா உலகில் பெருமளவில் புழங்கும் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த ,நிலவும் கந்து வட்டிக் கொடுமையைத் தடுக்க ,அதிகரிக்கும் தற்கொலைகளைத் தடுக்க தீவிர வருமான வரித்துறை சோதனை உடனடியாக தேவைப்படுகிறது .வருமான வரித்துறை அனைவரிடமும் பாயுமா ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை

  • g.s,rajan - chennai ,இந்தியா

    More Income Tax raids sought for Cine Industry and curtail black money circulation.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement