Advertisement

டீ கடை பெஞ்ச்

அதிகாரியின் வீட்டு வேலைக்கு அறநிலைய ஊழியர்கள்!


''புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரணும்னு பேசி, 'மாஜி' எம்.எல்.ஏ.,வை, 'நோஸ்கட்' பண்ணிட்டாரு பா...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த கட்சியில வே...'' என்றார்
அண்ணாச்சி.
''த.மா.கா., நான்காம் ஆண்டு துவக்க விழா, சமீபத்துல, திருச்சியில நடந்துச்சு... இதுல பேசிய, 'மாஜி' எம்.எல்.ஏ., விடியல் சேகர், தனக்கு மீண்டும், எம்.எல்.ஏ., 'சீட்' கிடைக்கும்கிற தொனியில பேசியிருக்காரு பா...
''மூத்த தலைவர் ஞானதேசிகன் பேசுறப்ப, 'எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிகளை வகித்தவர்கள், மீண்டும் போட்டியிடாம, புதுமுகங்களுக்கு வழி விடணும்... அப்ப தான் கட்சி வளரும்'னு
சொல்லிட்டாரு பா...
''இதுக்கு, கூட்டத்துல பலத்த கைதட்டல் எழுந்திருக்கு... ஆனா, விடியல் சேகர் முகம், இருண்டு போயிடுச்சு பா...'' என்றார் அன்வர்பாய்.
''த.மா.கா., சம்பந்தமா, என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''மறைந்த மூப்பனாரின் நெருங்கிய நண்பர் ரஜினி... அதனால, அவர் புது கட்சி துவங்கி,
த.மா.கா.,வோட கூட்டணி அமைக்கணும்னு, வாசன் தரப்புல விரும்புதாவ வே...
''சமீபத்துல,
த.மா.கா., மாநில நிர்வாகிகள் முனவர்பாட்ஷா, பட்டுக்கோட்டை பூபதி ரெண்டு பேரும், ரஜினியை, அவர் வீட்டுல சந்திச்சு பேசியிருக்காவ...
''அப்ப, 'வாசனும், நீங்களும், தமிழக அரசியல்ல இரட்டை குழல் துப்பாக்கியா செயல்
படணும்'னு கேட்டிருக்காவ... பிடி குடுக்காத ரஜினி, 'அதை எல்லாம், கட்சி துவங்குனதும் பார்த்துக்கலாம்'னு சொல்லி அனுப்பிட்டாரு வே...
''இந்த ரெண்டு பேரும், நடிகர் கமல் வீட்டுக்கும் போய் பேசியிருக்காவ... அவரும் மூப்பனாரை, ரொம்ப நேரம் புகழ்ந்து பேசிட்டு, வாசனுடன் இணைந்து செயல்படுறது பத்தி, எந்த முடிவும் சொல்லாம அனுப்பிட்டாரு வே...'' என்றார் அண்ணாச்சி.
''கோவில் ஊழியர்களை, வீட்டு வேலைகளுக்கு, 'யூஸ்' பண்ணிக்கறா ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.
''ரொம்ப தப்பாச்சே... யாருங்க அது...'' என, கேட்டார்
அந்தோணிசாமி.
''கோவை அறநிலைய துறை அதிகாரி ஒருத்தர், பொள்ளாச்சியில குடியிருக்கார்... இவரோட ஆத்துக்காரம்மாவும், அரசு அதிகாரி தான் ஓய்...
''அதிகாரியின் வீட்டு வேலைகளுக்கு, ஆள் போட்டா, அவாளுக்கு சம்பளம் கொடுக்கணு மோல்லியோ... அதனால, அறநிலைய துறை ஊழியர்களையே, வீட்டு வேலைகளுக்கு பயன்
படுத்திக்கறா ஓய்...
''வாரத்துக்கு ஒரு கோவில்ல இருந்து, ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்கறது, அதிகாரியின் கறார் உத்தரவு... வீட்டு வேலை பார்த்து, ஓய்ஞ்சு போன ரெண்டு ஊழியர்கள், வேலையை விட்டே போயிட்டா...
''ஆனாலும், அதிகாரி வீட்டு வேலைகளுக்கு அறநிலைய துறை ஊழியர்களை பயன்படுத்தறது இன்னும் நடந்துண்டு தான் இருக்கு ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''நம்ம ராஜமாணிக்கம், பைக்குல எங்க இவ்வளவு ஸ்பீடா போறாரு பா...'' என, தெருவை பார்த்து அன்வர்பாய் கேட்க, நண்பர்களும் எட்டி பார்த்து விட்டு, அரட்டையை தொடர்ந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement