Advertisement

சொல்கிறார்கள்

தாடை அசைவால் தாமாகவே வெளியேறிவிடும்!

காது, மூக்கு தொண்டை நிபுணர், எம்.என்.சங்கர்: காதில் அழுக்கு சேர்ந்தால், 'பட்ஸ்' வைத்து குடைவது, வாடிக்கையாக இருக்கிறது. இதனால், சில நேரம் காதில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுகின்றன.மேலும், 'அழுக்கை எடுப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட பட்ஸ் இது' என்று வரும் விளம்பரங்களை நம்பி, அவற்றால் காது அழுக்கை அகற்றுவது, குடைவதெல்லாம் சரியான செயல் அல்ல. காதில் சேரக் கூடிய அந்தப் பொருள், அழுக்கு கிடையாது. இது நம்மில் பலருக்கும் தெரியாத ஓர் உண்மை. பிசின் போன்ற அந்த பொருள், 'வேக்ஸ், குருமி அல்லது குடுமி' என்றழைக்கப்படுகிறது. இது, காதைப் பாதுகாக்கக் கூடியது; இந்தக் குருமி, காதில் இருப்பது நல்லது; இது, காதில் ஏற்படக் கூடிய இன்பெக் ஷனை போக்குகிறது. மேலும், பாக்டீரியாக்களை வளர விடாமல் செய்யும். இதே நேரத்தில், அந்த குருமி அதிகமாவதோடு, அதனுடன் அழுக்குகளும் சேரும்பட்சத்தில், நாளடைவில் நம் தாடை அசைவின்போது, காதுகள் தாமாகவே அவற்றை வெளியேற்றிவிடும். அதை தவிர்த்து, கண்ட பொருட்களையும் காதின் உள்ளே விட்டுக் குடைவது, தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தி விடும்.
பட்சால் அழுக்குகளை எடுக்கிறேன் என, குறைந்த அளவு குருமிகளை எடுத்து, அதிகப்படியான குருமிகளை காதின் உள்ளே தள்ளிவிடுவர். இது, காது மடலுக்கு உள்ளே இருக்கும் தோலை அழுத்துவதால், நாளடைவில் அது அழுகிப் போக நேரிடும்.

அது மட்டுமல்ல, காதின் உள்ளே இருக்கும் எலும்பையும் அரித்துவிடும். மேலும், இது துர்நாற்றம் வீசுவதோடு, பயங்கர வலியையும் உண்டாக்கும். காதில் எதையோ வைத்து அடைத்தது போல் இருக்கும். இதுபோன்ற சூழலில், மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
அதிகப்படியாகச் சேர்ந்த குருமிகளை அகற்ற, மூன்று சொட்டு தேங்காய் எண்ணெயை, தொடர்ந்து சில நாட்கள் காதின் உள்ளே விட்டால், அது தானாகவே வெளிவந்து விடும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை இதை செய்யலாம்.

ஆனால், காதில் குருமி அதிகமாக இருப்பது போன்று தெரியவந்தால் மட்டுமே, காதில் எண்ணெய் விட வேண்டும். தேவையில்லாமல் எண்ணெய் விட வேண்டாம். இதற்கு மாறாக பட்ஸ், குச்சி, இறகுகள் என எதையும் காதின் உள்ளே விட்டு, தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தவேண்டாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement