Advertisement

டீ கடை பெஞ்ச்

தலைவர் நாற்காலியில் உட்கார தயங்கும் பன்னீர்!


''கூட இருந்தவங்க, உசுப்பேத்தி விட்டதால, வேற வழியில்லாம, களத்துல குதிச்சிட்டாரு வே...'' என்றபடியே,
பெஞ்சுக்கு வந்தார் அண்ணாச்சி.
''யாரை சொல்றீங்க பா...'' என, விசாரித்தார் அன்வர்பாய்.
''ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல, இரட்டை இலை சின்னத்தை எதிர்த்தா, 'பப்பு' வேகாதுங்கிறதால, தினகரன் தயங்கியிருக்கார்...
''தன் அடிமைகள்ல, யாரையாவது ஒருத்தரை நிறுத்திட்டு, ஒதுங்கிடலாம்னு, அவங்களை கூப்பிட்டு, ஆலோசனை நடத்தியிருக்காரு வே...
''நாட்டுல, எத்தனுக்கு எத்தன், எத்தனை பேர் இருக்காங்க... அடிமை கூட்டத்துல இருந்தவங்க உஷாராகி, 'நீங்க தான் பாப்புலரான ஆள்... உங்க சிரிச்ச முகத்துக்கே ஓட்டுகள் விழும்'னு தினகரனை உசுப்பேத்தி, களத்துல தள்ளிட்டு, 'எஸ்' ஆயிட்டாவ வே...'' என, முடித்தார்
அண்ணாச்சி.
''இது சம்பந்தமா, என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''இரட்டை இலை, பழனிசாமி அணிக்கு போயிட்டதால, தினகரன் அணியில இருந்த தொண்டர்கள் பலம், குறைஞ்சிடுச்சு...
''இதனால, அவருக்கு தேர்தல் வேலை பார்க்க, வெளி மாவட்டங்கள்ல இருந்து, நிறைய குண்டர்களை வரவழைச்சிருக்காங்க...
''இவங்க, ஆர்.கே.நகர் தொகுதியில, அடாவடியா வலம் வர்றாங்க... தெருவுலயே நின்னு, 'சரக்கு' அடிக்குறது, பெண்களை முறைச்சு பார்க்குறதுன்னு ஒரு மார்க்கமாகவே திரியுறாங்க... பிரசார களத்துல, இவங்களால பிரச்னை வரும்னு, உளவுத் துறையினர் எச்சரிக்கை பண்ணியிருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''தலைவர் சீட்டுலயே உட்கார மாட்டேங்கறார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''நாற்காலியை விரும்பாதவங்களும், இந்த காலத்துல இருக்காங்களா பா...'' என, வியப்பாக கேட்டார் அன்வர்பாய்.
''முழுசா கேளும்... வீட்டுவசதி துறை அமைச்சரான துணை முதல்வர், பன்னீர்செல்வம் தான், சி.எம்.டி.ஏ.,வுக்கும் தலைவர்... இவருக்கு, அந்த அலுவலகத்துல தனி அறையே இருக்கு ஓய்...
''ரெண்டு வாரத்துக்கு முன்ன, எழும்பூர்ல இருக்கற, சி.எம்.டி.ஏ., ஆபீசுக்கு வந்த பன்னீர், தலைவர் அறைக்கு போயிருக்கார்... ஆனா, தலைவர் சீட்ல உட்காராம, எதிர்ல இருக்கற பார்வையாளர்கள் சீட்ல உட்கார்ந்து, அதிகாரிகளுடன் பேசிட்டு போயிட்டார் ஓய்...
''அப்பறமா ஒருமுறை ஆய்வுக்கு வந்தப்பவும், தலைவர் சீட்ல உட்காரலை... இது, சி.எம்.டி.ஏ.,
அதிகாரிகளுக்கு வியப்பை ஏற்படுத்திடுத்து... ஏதாவது ஜோதிட காரணங்கள் இருக்குமோன்னு விவாதம் பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அப்போது, சூடான மெதுவடைகள், கெட்டி சட்னியுடன் நாயர் வர, நண்பர்கள், ருசிக்க ஆரம்பித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement