Advertisement

மணல் தொழிலில் அதிக சிக்கல்கள்...

தமிழகத்தில் புதிய மணல் குவாரிகள் திறக்க, அரசுக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. தற்போது உள்ள மணல் குவாரிகளை, ஆறு மாதங்களில் மூடவும், வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதிக்கு அனுமதியும் தந்திருக்கிறது உயர் நீதிமன்றம்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த மணலை விற்க முடியாமல் தடுக்க, மாநில அரசின் கனிமவளச் சட்டத்திற்கு அதிகாரம் இல்லை
என்பதும், இத்தீர்ப்பில் உள்ள கருத்தாகும்.
பொதுநலன் கருதி, ஆறுகளைப் பாதுகாக்கும் முடிவாக இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி
ஆர்.மகாதேவன் அளித்த தீர்ப்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் என்ற கருத்தை முன்வைத்து, அரசுக்கு பல யோசனைகளையும் வழங்கியுள்ளார்.
கனிமவளம் குறித்த சட்டம், 1959 முதல் இருந்த போதும், அவ்வப்போது சில வரன்முறைகளை,
தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. கனிம வளங்களை முறைப்படுத்த, மத்திய அரசும் சில வரையறைகளை இப்போது கொண்டு வந்திருப்பது நல்லது.
முதலில், பொதுப்பணித் துறை கையில் இருந்த இத்துறை, இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் தனி அமைப்பில், அரசியல் தொடர்புகளுடன்
நடப்பதால், பல ஆறுகள் கட்டாந்தரையாகி விட்டன. மணல் என்பது இயற்கை வளம்.
ஆறுகளில் உள்ள மணல் வளம் நீர் ஆதாரத்தை காக்கிறது. ஆற்றில் துாய நீர் ஓரளவு தொடர்ந்தால், குடிநீர் ஆதாரம் அழியாமல் இருக்க உதவும்.
ஆனால், சட்டவிரோத மணல் குவாரிகள், பலரை பணக்காரர்களாக்கி விட்டது. அதில், ஆதிக்கம் செலுத்துபவர்களை, வருவாய் துறை அதிகாரிகள் தடுக்க முடியாமல், பார்வையாளர்களாக இருந்த
சம்பவங்களும் உண்டு.
புவிவளத் தகவல்படி, 2005ம் ஆண்டில்,
25 ஆயிரம் கோடி முதல், 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை மணல் முறைகேடாக அள்ளப்பட்டிருக்கிறது.
அதையும் தவிர, 2013ம் ஆண்டில்,
'இலிமைனட்' என்ற வளமான தாது, துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் முதல்
செப்டம்பருக்குள், ஏழு லட்சம் டன் ஏற்றுமதி
ஆகியிருக்கிறது.
அது மட்டும் அல்ல; துாத்துக்குடி,
திருநெல்வேலி, கன்னியாகுமரி, முசிறி, திருச்சியில் தொட்டியம் ஆகிய பகுதிகளில், 75 மணல் குவாரிகள் அமைய அரசு அனுமதியளித்தது,
இத்தொழிலில் எண்ணற்ற குற்றங்கள் தொடரக் காரணமாயின.
மணல் குவாரிகள் அமைவதில், அரசு சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தக் காரணமாகிறது.
ஆறுகளில் இருந்து இஷ்டப்படி மணல் அள்ளப்
படுவது, சமயங்களில் பெரு வெள்ள பாதிப்பு, அப்பகுதிகளில் உள்ள விவசாயம் அழியக் காரணமாகிறது. அதிக மணல் குவாரிகள் காரணமாக
தமிழகத்தில், குற்றச் செயல்களும், அதிகரிப்பது கண்கூடு. மணல் தேவை என்பது, அதிகரிக்கும் கட்டுமானத்திற்கு அவசியம்.
கல்குவாரிகளில் கிடைக்கும், 'எம்-சாண்ட்' இப்போது, மணலுக்கு மாற்றாக அதிகம்
புழங்கத் துவங்கியிருக்கிறது.
இதை எம்மாதிரி கட்டடங்களுக்கு, எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை, கட்டட வல்லுனர்கள் மூலம் அறிவுரை தர, தொழில் சார்ந்த அமைப்பு தேவை.
இல்லா விட்டால், இதில் அடுத்த அளவு கடந்த முறைகேடும், அதனால், கட்டடங்கள் எந்த அளவு நீடித்த தன்மையுடன் இருக்கும் என்ற தொழில்நுட்ப ஆதாரங்களற்ற சூழ்நிலையும் ஏற்படலாம்.
மணல் திருட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம், இப்பிரச்னை காரணமாக எழும் குற்றவியல் நடவடிக்கைகளை சிறப்பாக கையாள, விரைவான வழி முறைகளை அரசு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம்,
இத்தீர்ப்பால் எழுந்திருக்கிறது. திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள கூலித் தொழிலாளர்களில், 40 சதவீதம் பேர் மணல் அள்ளும் தொழிலை நம்பி உள்ளனர். இதேபோல, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பலர் உள்ளனர்.
இக்கட்டுப்பாடுகளால், இவர்களில் பலர் வேலை இழப்பர் என்பதால், அதையும் அரசு தனது வரன் முறைத் திட்டத்தில், உரிய முறையில் அணுகியாக வேண்டும்.
ஏற்கனவே இவர்களில் பலருக்கு ஆதார்
அடிப்படையில், வங்கிகளில் சம்பளம் தரும் நடைமுறை இருப்பதால், திறன் மிகுந்த, மற்றும் திறன் குறைந்த தொழிலாளர்கள் யார் என்ற தகவலை எளிதாக சேகரிக்கலாம். மணல் லாரிகள் அதிக லோடு ஏற்றுவது, அதில் சிலரது ஆதிக்கம் ஆகியவை,
இத்துறையில் உள்ள அடுத்த சிக்கலாகும்.
ஆகவே, உயர் நீதிமன்ற உத்தரவு முற்றிலும் அமல்படுத்தப்பட இன்னமும், ஆறு மாத காலம் இருப்பதால், அதற்குள் மணல் குவாரிகள், குறித்த ஒழுங்கீனங்களை மாற்ற, அரசு எவ்வித அணுகு முறையை மேற்கொள்ளப் போகிறது என்பது பெரிய சவாலாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement