Advertisement

இது உங்கள் இடம்

800 ஆண்டுக்கு முன் கிடைத்த நீதி இப்ப இல்ல!ச.கிருஷ்ணமூர்த்தி, தொல்லியல் அலுவலர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: கந்து வட்டி கொடுமையாலும், பிறர் அவமானப்படுத்தியதாலும், பாதிக்கப்பட்டோர், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள், தற்போதுஅதிகரித்து வருகின்றன.

அதை ஆய்வு செய்ய அமைக்கப்படும் விசாரணைக் குழுக்கள் மூலம், தீர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை.கி.பி., 1236ல், தற்கொலை செய்து கொண்டவரின் வாரிசுகளுக்கு, இழப்பீடும் வழங்க, விசாரணை குழு பரிந்துரை செய்ததாக, கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை வட்டம், குண்டலுார் அகஸ்தீஸ்வரமுடையார் கோவில் உள்ளது.

அங்குள்ள கல்வெட்டு தகவல்:அதிராஜேந்திர மண்டலத்து மேற்பாக்கை நாட்டு பொத்தப்பிநாட்டுக் குண்டலுாரில், திருவகஸ்தீரமுடையார் கோவிலுக்கு நந்தவனத்தை, ஈசான தேவர் என்பவர் ஏற்படுத்தி, நன்கு பாதுகாத்து வந்தார்.

பிறர் தந்த தொல்லையால், அவர் விஷச் செடியை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதை விசாரிக்க, குன்றப்பிள்ளையார் கண்ட கோபாலன் என்பவர், ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். குழுவில், மக்கள், அதிகாரிகள், அர்ச்சகர்கள் இருந்தனர்.
தற்கொலைக்கு துாண்டியவரை கண்டறிந்து, குழு தண்டித்தது.இவ்வாறு, கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.குற்றவாளியின் பெயரும், தண்டிக்கப்பட்ட விபரமும், கல்வெட்டில் இல்லை. தற்கொலை செய்தவரின் பிள்ளைகளுக்கு, நிலக்கொடை வழங்கப்பட்டது.

நிலக்கொடையில், மூன்றில் ஒரு பங்கு கோவிலில் ஈசானத் தேவர் பெயரில் விளக்கு எரிக்கவும், இரண்டு பங்கு வாரிசுகளுக்கும் வழங்கப்பட்டது. விளக்கு எரிக்க நெய் வழங்க, இடையருடன் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.

திருநந்தவன உரிமையும், நிலக்கொடையுடன் சேர்த்து ஈசான தேவரின் வாரிசுகளிடம் வழங்கப்பட்டது. கோவிலுக்குத் தொண்டாற்றியவரை, அக்காலச் சமூகம் நன்கு மதித்தது என கூறப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் நீதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கந்து வட்டி கொடுமைக்கும், பாலியல் உள்ளிட்ட பிறர் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டோருக்கும், சரியான நீதி கிடைக்கவில்லையே என்பது மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது!lll

செவிலியர்கள் கோரிக்கை நியாயமானது!
ஏ.பவுலின் சார்லஸ், நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கூவத்துார் விடுதி, பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கி கும்மாளமிட்ட, எம்.எல்.ஏ.,களுக்கு சம்பளம், ௧.௦௫ லட்சம் எகிறிவிட்டது.

அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சம்பளம் உயர்வு, பணி நிரந்தரம் என, எக்கச்சக்க சலுகைகள் தரப்பட்டுள்ளன.

ஆனால், எம்.ஆர்.பி., மூலம் தேர்ச்சி பெற்ற, எம்.எஸ்சி., நர்சிங், பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., படித்து பணிபுரியும் செவிலியர்களுக்கு மிக குறைந்த சம்பளம்; பணி நிரந்தரம் இல்லை.அவர்கள் சுழற்சி முறையில் இரவு - பகல் என, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பணிபுரிகின்றனர்.

மேலும், நர்ஸ் மற்றும் மருந்து ஆளுனரின் பற்றாக்குறையால் அந்த பணியையும் சேர்த்து பணிபுரிகின்றனர். அது, பெண்களுக்கு எவ்வளவு சிரமம் என்பது, அரசுக்கு தெரியவில்லை.பெண்களுக்கு, சொந்த மாவட்டத்தை விட்டு, வேறு மாவட்டத்திற்கு, பணி நியமன ஆணை தரப்படுகிறது. சொந்த மாவட்டத்திற்கு கேட்டால், பல லட்சம் ரூபாய், லஞ்சமாக கேட்கின்றனர்.டெங்கு, மர்ம காய்ச்சல் நோய் பரவினால், அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோர், செவிலியர்கள்.

சுகாதாரத் துறை அமைச்சர், செயலர் போன்றோருக்கு இது தெரிந்தும், அறிந்தும், அவர்கள் குறைகளை களைய செவி சாய்க்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.செவிலியர் என்ன சுகாதாரத் துறைக்கு தீண்டத்தகாதவர்களா அல்லது தகுதியற்றவர்களா... முதல்வரே, செவிலியர்களின் கோரிக்கை நியாயமானது! lll

போராட்டத்திற்கு வழிவகுக்காதீர்!ஆர்.சந்தானம், போஸ்ட் மாஸ்டர் (பணி நிறைவு), கடலுாரிலிருந்து எழுதுகிறார்: நாட்டில், ௧௦ம் வகுப்பு முதல், ஐ.டி., இன்ஜினியர் வரை வேலை வாய்ப்பு தேடி, 'எம்ப்ளாய்மென்ட்' அலுவலகங்களில் பதிந்துள்ளோர் எண்ணிக்கை, ௬.65 கோடி பேர்; அதில், தமிழகத்தில் மட்டும், 85 லட்சம் பேர்; அனைவரும், 40 வயதை கடந்தோர்!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து, 'நேர்முகத் தேர்விற்கான அழைப்பு தபால் வரும்' என, வழி மேல் விழி வைத்து காத்திருப்போர் ஏராளம்.உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்ட, 14 துப்புரவு தொழிலாளர் காலிப் பணியிடங்களுக்கு, ஆயிரக்கணக்கான பட்டதாரி, இன்ஜினியர்கள் விண்ணப்பித்திருந்ததாக, சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று, ஒட்டுமொத்த தமிழக பட்டதாரிகளுக்கும் சங்கு ஊதும் விதமாக, 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், பிற மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம்' என, தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.

இது அநியாயம் மட்டுமல்ல, தமிழர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி!தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்து விட்டது. மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல், தமிழ் மாணவர்கள் திணறுகின்றனர். தமிழகத்தில் படித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பெருகியபடி இருக்கின்றனர்.

அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மட்டும் தான். அதற்கும், 'ஆப்பு' வைத்து வேடிக்கைப் பார்க்கிறது, தமிழக அரசு. இது போன்ற ஒரு அநீதியை, மற்ற மாநில அரசுகள், மனதால் கூட நினைத்துப் பார்க்கவில்லை; தமிழகத்திற்கு மட்டும் ஏன் இந்நிலை?இந்த உத்தரவு வரக் காரணமானவர் யார் என்று, திரைமறைவில் இருப்பவரை கண்டறிய வேண்டும். அசாம் மாநிலத்தில் வெடித்த மாணவர் போராட்டம் போல், இங்கும் வந்தாலும் வரலாம்.
'மாணவர்களின் போராட்டத்திற்கு, விதை ஊன்றி விட்டது, தமிழக அரசு' என, மக்கள் எள்ளி நகைவர்!lll

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • C Selvaraj - Madurai,இந்தியா

    அன்புடையீர்.. மதுரை, அவனியாபுரம் ,திருப்பதி நகரில் தெரு நாய்கள் அதிகஅளவில் சுற்றி திரிகின்றன ..இதனால் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் அச்சப்படுகிறார்கள். இரவு நேரங்களில் ஒன்று கூடி அங்கும் இங்கும் ஓடி திரிவதால் ..பொது மக்களை தொரத்துகிறது ..குழந்தைகள் ஓடி விளையாடும் பொழுது அவர்களை தொரத்துகிறது. இதனால் குழந்தைகள் பயத்தில் ஓடும் பொது சாலையின் ஓரத்தில் உள்ள சாக்கடையில் தடுமாறி விழ கூடிய நிலை ஏற்படுகிறது ..பெரியவர்கள் ஏதேனும் பெரிய சணல் சாக்கு அல்லது பெரிய பைகளை கையில் கொண்டு செல்லும் பொழுது கூட அவர்களையும் விரட்டி கடிக்க முற்படிக்கிறது. அனைவரும் அச்சத்தில் உள்ளார்கள். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என தவித்து கொண்டு உள்ளார்கள். இதனை மாநகராட்சி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் .......

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    பிறரது தொல்லையால் தற்கொலை செய்ய நேர்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தவறு இல்லை. ஆனால் கந்து வட்டி என்பது தானாக தேடிக்கொள்ளும் அழிவு. அதிக வட்டி என்று தெரிந்ததுதானே வாங்குகிறார்கள். பிறகு கட்டமுடியவில்லை என்னும்போது அலறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. கடன் வாங்காமல் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே பெருநிதி ஈட்டுதற்கு சமம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement