Advertisement

இது உங்கள் இடம்

'அது வேற வாய்; இது நாற வாய்!'
என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜெயலலிதா வெற்றி வாகை சூடிய பெருமைக்குரிய, ஆர்.கே.நகர் தொகுதி, இன்று, அ.தி.மு.க., அமைச்சர்களின் தரம்கெட்ட அரசியல் பேச்சால் நாறப் போகிறது. அதை வைத்து, தமிழகம் எந்த அளவுக்கு சீரழிந்து சின்னாபின்னமாகி கிடக்கிறது என்பதை, மக்கள் புரிந்து கொள்வர்!அன்று, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தார், தினகரன்.ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. எதிரியாக இருந்த, ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை வாங்கினார். வேறு வழியின்றி தினகரன், தொப்பி சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, அ.தி.மு.க., அமைச்சர்கள், 'தொப்பி சின்னத்தை பார்த்து, போடுங்கம்மா ஓட்டு...' என, வீதிவீதியாக வாகனங்களிலும், நடந்தும் பிரசாரம் செய்தனர். அன்று, தினகரனே வெற்றி பெற செய்ய வேண்டி, வாக்காளர்களின் காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்டனர்.இன்று, அதே தினகரனுக்கு எதிராக, ஓட்டளிக்க சொல்லி, வாக்காளர்களிடம் கையேந்த போகின்றனர். 'ஏன், இப்படி அந்தர்பல்டி அடிக்கிறீர்கள்?' என மக்கள் கேட்டால், 'அது வேற வாய், இது நாற வாய்' என, 'காமெடி' நடிகர் வடிவேலு பாணியில், 'டயலாக்' பேசினாலும், ஆச்சரியம் இல்லடா சாமி!பத்தாயிரம் ரூபாய் பணமும், ஒரு குவார்ட்டர் சரக்கும் கிடைத்தால் போதும்... ஓட்டு போட மகாஜனங்கள் தயாராக இருக்கும்போது, அ.தி.மு.க., ஜெயிப்பதை தடுக்கும் சக்தி, அந்த பரமசிவனுக்கே கிடையாதே!அமைச்சர்கள், இப்போது அந்தர்பல்டிகள் அடிக்கும் வேகத்தைப் பார்க்கும் போது, இவர்கள், 'அம்மா'வின் உண்மையான விசுவாசிகளா அல்லது கருணாநிதியின் தீவிர விசுவாசிகளா என்ற பலத்த சந்தேகம் வருதுடா சாமி!'வாய்மையே வெல்லும்' என்பதெல்லாம், அந்த அரிச்சந்திரனுக்கு வேண்டுமானால் ஒத்துப் போகலாம்; உண்மையான ஜனநாயகவாதிகளுக்கு சத்தியமாக, அது சரிப்பட்டு வராது!

எஸ்.ஏ.எஸ்.,வீணாகஉளற வேண்டாம்!

ஆர்.சேஷாத்திரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: சாதாரண மசாலா படத்தை, பா.ஜ., தயவால் ஓட்டி காசு சம்பாதித்தவர், நடிகர் விஜய். அவரின் புரட்சி தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகர் வாயை வைத்து சும்மா இருக்க மாட்டார்போலும்.இவருக்கு, திருப்பதி உண்டியலை பார்த்தால் கோபம் வருகிறது. வாடிகன் நகரிலும், நாகை வேளாங்கண்ணி கோவிலிலும் உண்டியல் உண்டு. உண்டியல் வசூல் இல்லாமல், கோவிலை எப்படி பராமரிப்பது என்பது அவருக்கு தெரியாதா... ஒரு முறை திருப்பதி சென்று, அங்குள்ள நிலவரங்களை, எஸ்.ஏ.சந்திரசேகர் பார்க்க வேண்டும். இலவச உணவு, எவ்வளவு பெரிய நிர்வாகம் என்பது அவருக்கு புரியும். அப்படி என்ன திருப்பதி மேல் இவருக்கு கோபம்?எத்தனையோ கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து செல்கின்றனர். எல்லா மதத்தினருக்கும் ஒரு நம்பிக்கை உண்டு. குறுகிய கொள்கையை மக்கள் மத்தியில் திணிக்க வேண்டாம், சந்திரசேகர்... இந்துக்கள் எல்லாரும் படித்தவர்கள்! தமிழகத்துடன், அன்று திருப்பதி இணையாததால், இன்று வளர்ச்சி அடைந்துள்ளது. அன்று, சென்னை மாகாணத்தை பிரிக்கும் போது, சென்னையை ஆந்திராவுடனும், திருப்பதியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என, ஒரு தரப்பில் கோரினர். ஆனால், சென்னையை தவிர்த்து, திருப்பதி, ஆந்திர மாநிலத்திற்கு ஒதுக்கி தரப்பட்டது. இன்று வரை, திருப்பதிக்கு, தமிழகம் மட்டுமல்ல; அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர் கள் குவிகின்றனர்.அதற்கு காரணம், பக்தி மட்டுமல்ல; திறமையான நிர்வாகமும், கட்டுப்பாடுகளும் தான். இதை புரிந்து கொள்ளாத, எஸ்.ஏ.சந்திரசேகர், தேவையில்லாமல் உளறக் கூடாது!

இப்ப தான் உண்மையானஅம்மா ஆட்சி!
சிவ அண்ணாமலை தேசிகன், விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: 'ராஜிவ் படுகொலையால், 1991ல், தி.மு.க.,வை படுதோல்வி அடைய செய்த மக்கள், ஜெ.,வை ஆட்சியில் அமர வைத்தனர்.ஆனால், 1996 வரை, அவரின் ஆட்சியில் நடந்த அலங்கோலத்தைக் கண்ட மக்கள், அவரை துாக்கி எறிந்து, தி.மு.க., விடம் ஆட்சி பீடத்தை ஒப்படைத்தனர்.ஊழலில் திளைத்த, தி.மு.க.,விடம் இருந்து ஆட்சியை பறித்து, மீண்டும், 2001ல், ஜெ.,விடம் ஒப்படைத்தனர் மக்கள். ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், 2006ல், தி.மு.க.,விடம் ஆட்சி சென்றது.இப்படி மாறி மாறி திராவிட கட்சிகள் ஆட்சி செய்தாலும், தமிழகத்தின் நிதி நெருக்கடி தீரவில்லை. தி.மு.க., தலைவரின் குடும்பம் மிகப் பெரியது. 'தான் பட்ட கஷ்டத்தை, தன் வாரிசுகள் படக் கூடாது' என, கருணாநிதி நினைத்து, சொத்து குவித்திருக்கலாம்.ஆனால், எந்த சொந்தமோ, பந்தமோ இல்லாத, ஜெ.,வுக்கு எதற்குஇவ்வளவு சொத்து...'மக்களால் நான் - மக்களுக்காக நான்' என, அவரின் பேச்சைக் கேட்ட மக்களுக்கு, 'சசிகலாவின் குடும்பம் நான்' என, இப்போது தானே புரிகிறது.அமைச்சர் மீது புகார் வந்தால், உடனே நடவடிக்கை எடுத்து, அவரை பதவியில் இருந்து துாக்கி எறிந்தார், ஜெயலலிதா.அவ்வளவு துணிச்சலான அவர், சசிகலா செய்துள்ள ஊழலை அறியவில்லையா அல்லது அறிந்தும் அறியாமல் விட்டு விட்டாரா...ஊசி இடம் தராமல், நுால் தானாக நுழைந்து விடுமா என்ற பழமொழிக்கேற்ப, சசிகலாவின் அத்தனை அடாவடிகளுக்கும், ஜெயலலிதா ஒத்து ஊதாமலா இருந்திருப்பார்!போயஸ் கார்டனில் சசிகலாவின் ஆதிக்கம் இருந்ததால், ஜெயலலிதாவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்பது நிதர்சனம்!ஜெயலலிதா மறைவிற்கு பின், மூச்சுக்கு முன்னுாறு முறை, 'அம்மாவின்ஆட்சியை அமைப்போம்' என்கிறார், தினகரன்.உண்மையில், தற்போது நடப்பது தான், ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி. சசிகலா குடும்பம் தலையீடு இல்லாத ஆட்சியாக நடக்கிறது. இது தொடர நல்வாழ்த்துகள்!

அன்று, தி.மு.க., இன்று, அ.தி.மு.க.,
எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தனியார் நிறுவனங்களில், காவலாளி நியமன பணிகளில், 'அவுட் சோர்சிங்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு கட்டடத்தை பாதுகாக்க, 2௦ காவலாளிகள் தேவைப்படுகின்றனர் என்றால், அதை மொத்தமாக ஒரு ஏஜன்சி பொறுப்பேற்று, பணி அமர்த்தும்.ஒரு காவலாளிக்கு, 1௦ ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசி, நிறுவனத்திடம்இருந்து வாங்கும் ஏஜன்சி, அதில், 2,௦௦௦ ரூபாயை கமிஷனாக எடுத்து கொள்ளும். காவலாளிக்கு வார விடுமுறை இருக்காது; லீவு எடுத்தால் சம்பளம், 'கட்'டாகி விடும். 20 காவலாளிகளை நியமித்து, மாதத்திற்கு, 40 ஆயிரம் ரூபாயை சம்பாதித்து விடும், செக்யூரிட்டி ஏஜன்சி நிறுவனம்.அதே நிலை, ஒவ்வொரு தனியார் மற்றும் அரசு துறையிலும் ஊடுருவ துவங்கியுள்ளது. டாஸ்மாக் கடைகள், சத்துணவு பணியாளர்கள் போன்ற வற்றில், பெயரை சற்று மாற்றி, 'தொகுப்பூதியம்' என, நடைமுறையில் உள்ளது.ஒரு பணியாளரை அரசு நியமனம் செய்தால், அவருக்கு அடிப்படை சம்பளம், பஞ்சப் படி, வீட்டு வாடகை அலவன்ஸ், நகர ஈட்டுப் படி, போக்குவரத்துப் படி போன்றவை வழங்க வேண்டும்.ஓய்வு பெறும் போது, பணிக் கொடை உள்ளிட்ட பணப் பலன்களை அளிக்க வேண்டும். போதாக்குறைக்கு, மாத பென்ஷன் தொகையும் வழங்க வேண்டும். அதற்காகத் தான், 'அவுட்சோர்சிங்' முறையை அரசும் கையாள்கிறது! தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'அவுட்சோர்சிங்' முறை குறித்து, அறிக்கையில் ஆதங்கப் பட்டிருக்கிறார். 1970ல், சென்னை மாநகராட்சி, தி.மு.க., வசம் இருந்தது. அப்போது, 'அவுட்சோர்சிங்' முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு, 'மஸ்டர் ரோல்' என்று பெயர். துப்புரவுப் பணிக்கு, 100 பேரை அனுப்புவர். ஆனால், 150 பேரை அனுப்பியதாக கணக்கு காட்டி, மெகா சுருட்டலை நடத்தினர். ஊழலை கோடு போட்டு துவக்கி வைத்தது யார் என தெரிகிறதா... இன்று, அ.தி.மு.க., ரோடு போட்டு கொழித்துக் கொண்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, திராவிட கட்சிகளால், தமிழன் இன்று நடுத்தெருவில் நிற்கிறான்!

பத்திர ஆபீஸ் ஊழலின் சமுத்திரம்!
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: லஞ்சம் கொடுப்போருக்கும், பத்திரப் பதிவுத் துறைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. லஞ்சம் அனைத்துமே, பத்திர எழுத்தர் மூலமாக கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பதிவுக்கும், நில மதிப்பீட்டை வைத்து, லஞ்சம் நிர்ணயம் செய்து வாங்கப்படுகிறது. இத்தொகை எப்போது, எந்த பதிவாளரின் கைக்குச் செல்கிறது என்பது ஆண்டவனுக்கே தெரியும். பத்திரப் பதிவுத் துறையில் நடக்கும் லஞ்ச பரிவர்த்தனைகள் அனைத்துமே, விஞ்ஞானப்பூர்வமாக நடைபெறுகிறது. மத்திய புலனாய்வுத் துறையினரால் கூட, இவர்கள் லஞ்சம் வாங்குவதை கண்டுபிடிக்க முடியாது. லஞ்சம் கொடுப்பதில் ஏதாவது குளறுபடி செய்து, குறைவாக கொடுத்தால், களப்பணி என உண்டு. அதேசமயம், இட அளவு வித்தியாசம் உள்ளது எனக் கூறி,அசல் பத்திரம், சம்பந்தப்பட்டோர் கைக்கு வராது.பின், எழுத்தரிடம் பேசி,குறைத்து கொடுத்த லஞ்சம், அதற்குரிய அபராதம் சேர்த்து செலுத்திய பின் தான், அசல் பத்திரம் கையில் கிடைக்கும். 'பத்திரப் பதிவுத் துறை தான் லஞ்ச மழை பொழியும் துறையாக உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை, இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?' என, உயர் நீதிமன்ற நீதிபதி, கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.பதிவுத் துறையில் எவருமே, எதுவும் கேள்வி கேட்பதே கிடையாது. அதனால்தான் நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வுக்கு நிகராக, பத்திரப் பதிவாளர்கள் அமர்ந்து கோலோச்சுகின்றனர். பத்திரப் பதிவுத் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, லஞ்சத்தை பெற்றுத் தரும் பத்திர எழுத்தர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பல பதிவாளர்களின் வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை செய்து, அவர்கள் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.இதுகுறித்து, நீதிபதி சரியான நடவடிக்கை எடுத்து, லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்!

வசதியானவர்களுக்கு ரேஷன் வேண்டாமே!
எஸ்.கிருஷ்ணன், கோவையிலிருந்து எழுதுகிறார்: பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 13.50க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரையை,25 ரூபாய்க்கு, தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது, மக்களிடையே கசப்பை தான் ஏற்படுத்தும்.பத்து ஆண்டுகளாக, சர்க்கரையின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அன்று, ஒரு கப் டீ, மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்டது;இன்று, 12 ரூபாய். அன்று, ஒரு கப் காபியின் விலை, ஐந்து ரூபாய்; இன்று, 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம், 1.96 கோடி ரேஷன் கார்டுதாரர்களில், 1.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களான நடுத்தர வர்க்கம் மற்றும் மேல் தட்டு குடிமக்கள், சகல வசதியுடன் வாழ்கின்றனர்.இவர்கள் வீட்டில் குறைந்தது இரண்டு டூ - வீலர்கள், உயர் மதிப்புள்ள, 'கலர் டிவி, வாஷிங் மிஷின், பிரிஜ்' என, வசதி தரும் சாதனங்கள் அத்தனையும் இருக்கும்.இவர்களில் பலர், பலகட்டட உரிமையாளராகவும், வாகனங்கள் வைத்திருப்பவராகவும் உள்ளனர். இவர்களின் மாத வருவாய், 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும். அவர்கள் பொருளாதாரசெழிப்புடன் வாழ்கின்றனர்.சர்க்கரை விலை உயர்வால் இவர்களுக்குநஷ்டமோ, பாதிப்போ ஏற்படப் போவதில்லை.நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு, மக்கள் செலுத்தும் வரியே மூலதனம்; அதை அனைவரும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். இன்று ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கும் பொருட்களான, 20 கிலோ அரிசி, ஒரு பாக்கெட் பாமாயில், ஒரு கிலோ பருப்பு மற்றும் கோதுமை ஆகியவை, மானிய விலையில் விற்கப்படுகின்றன.இதனால், அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமாகிறது. நஷ்டத்தை ஈடுகட்ட, பல பொருட்களின் மீது வரிக்கு மேல் வரி போடப்படுகிறது. அரசுக்கு உண்டாகும் செலவை கட்டுப்படுத்த, இவர்களின் மானியத்தையும், இலவசத்தையும் ரத்து செய்தாலே போதும். பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி, ஸ்திரப்படுத்த வேண்டுமாயின், அனைவரும் அரசு தரும் மானியத்தையும்,இலவசங்களையும் உதாசீனப் படுத்த வேண்டும்!

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    R.K nagar Bi-Election.. Buy election..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement