Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ரேஷன் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியபோது, மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படிப்பட்டதாய் இருந்தது, இப்போது எப்படிப்பட்டதாய் இருக்கிறது... இதை கவனத்தில் வைத்து, ரேஷன் முறையில் மாற்றம் செய்யப்படுவது நல்லதில்லைன்னு சொல்ல வர்றீங்களா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், தமிழக அரசு கையெழுத்து இட்டதன் விளைவாக, புத்தாண்டு முதல் இலவச அரிசி திட்டம் கூட ரத்து செய்யப்படலாம். அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் வினியோகத்திலும் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இவ்வாறு செய்தால், மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என, எச்சரிக்கிறேன். இதுகுறித்து, தமிழக அரசு விளக்கம் அளித்து, மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.


மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேச்சு: மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிட்டு, அவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கக் கூறி, மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. இவ்வாறு செய்வதன் மூலம், மக்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாது என்பதை, மத்திய அரசு முதலில் உறுதி செய்யட்டும்.


'இதைத் தாண்டி, உங்களிடம், வேறு என்ன அறிக்கையை எதிர்பார்த்து விட முடியும்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் அறிக்கை:

'ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, மக்கள் நல்வாழ்வு துறையால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்கள் மூலம், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மருந்துகளும் போதுமான அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.


எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலர் தீபா பேட்டி: ஆர்.கே.நகரில் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இரட்டை இலை சின்னம், முதல்வர் அணிக்கு வழங்கப்பட்டது திட்டமிட்ட சதி; இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். மத்திய அரசு தான், தமிழகத்தை இயக்கி வருகிறது. ஜெயலலிதாவுக்கு யாரும் வாரிசு கிடையாது. ஜெயலலிதாவின் வாரிசு என தெரிவித்து, அவரது புகழுக்கு களங்கம் விளைவிப்போர் மீது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்.

*****

'ஜெ., கூட இருந்த, எல்லா உறவுகளையும் விரட்டி அடிச்சிட்டு, யாருமே இல்லைன்னு இப்படி
அபாண்டமா புளுகுறீங்களே...' என, குத்தலாக கேட்க தோன்றும் வகையில், கர்நாடக மாநில சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின், அக்கா மகன் தினகரன் பேட்டி:
1985ம் ஆண்டு முதல், நாங்கள் ஜெயலலிதாவுடன் இருந்து வருகிறோம். அப்போதில் இருந்து இப்போது வரை, அவருக்கு சகோதரர் தவிர, வேறு யாரும் இல்லை. அப்படி இருக்கையில்,
ஜெயலலிதாவுக்கு உறவினர்கள் இருக்கின்றனர் என்பது முற்றிலும் பொய்.

மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா பேச்சு: சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கூட, ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டு, நிலையான தன்மையை அடைய, நான்கு ஆண்டுகள்
பிடித்தன. ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் உள்ள பிரச்னைகளை தீர்க்க, மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில், ஜி.எஸ்.டி., எளிய வரியாக மாற்றம் பெறும். குழந்தைகள் கூட, புரிந்து கொள்ளும் அளவுக்கு, அது அவ்வளவு எளிதாக இருக்கும். மார்ச் மாதத்துக்குள் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

'நுாத்துல ஒரு வார்த்தை' என, பாராட்ட தோன்றும் வகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு: நம் அரசியல் தலைவர்களுக்கு, அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. நாம் இதுவரை யாருக்கும், முன் மாதிரியாக இல்லை. நேர்மையான அரசியல் மூலமாக மட்டுமே, மாணவர்களை ஈர்க்க முடியும். அந்த வழியில் நாம் பணியாற்ற வேண்டும். சட்டசபை என்பதை, கூச்சலிடும் இடமாகத் தான் மாணவர்கள் நினைக்கின்றனர். ஒரு மாணவர் கூட, 'நான், எம்.எல்.ஏ., ஆக வேண்டும்' எனக் கூறுவது கிடையாது. நாம் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தால், மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கலாம்.

தலைமை தேர்தல் கமிஷனர் ஜோதி பேட்டி: குஜராத்தில் அடுத்த மாதம் நடக்கும் சட்டசபை
தேர்தலிலும், இனி நடக்க உள்ள அனைத்து தேர்தல்களிலும், வாக்காளர் ஒப்புகை
சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும். இது, பேட்டரியில் இயங்கக் கூடியது;
யாரும் முறைகேடு செய்ய முடியாது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு
முன், புதிய எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களும், வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் வாங்கப்படும். 'கண்ணியமான தேர்தல் கூட்டமைப்பின்' ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தேவசகாயம் பேட்டி: கடந்த முறை, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக, தேர்தல் பார்வையாளர்கள் அறிக்கை கொடுத்தனர். அதனால் தான், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்போது, எந்த வேட்பாளர்கள் நின்றனரோ, அவர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். பணப்பட்டுவாடா புகாருக்கு உள்ளான வேட்பாளர்கள், தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், தேர்தலை ரத்து செய்ததே, அர்த்தமற்றதாகி விடும்.

***

'ஓ... விசுவாசம் என்ற சொல்லுக்கு, இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ... எல்லாரும் தெரிஞ்சுக்குங்க பா... மேடம் சொல்லிக் குடுக்குறாங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், அகில இந்திய, காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு பேட்டி: ஒரு அரசியல்வாதியாக விசுவாசமாக இருக்கிறேன். அதுவே மிகப் பெரிய சாதனை. தி.மு.க.,வில் இருந்து வெளியே வந்ததும், தி.மு.க.,வைப் பற்றி, தவறாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு இடத்தில் இருந்த போது, பேர், புகழ் அனைத்தையும் அனுபவித்து விட்டு, அங்கிருந்து வெளியேறியதும், தப்பாக பேசுவது சிலர் வழக்கம்; நான் அதை பண்ணவில்லை.
***

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement