Advertisement

'டவுட்' தனபாலு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால்,
வங்கிகளில் பண இருப்பு அதிகரித்துள்ளது.
டவுட் தனபாலு: 'கறுப்புப் பணத்தையும், கள்ளப்
பணத்தையும் ஒழிக்கத் தான்னு நினைச்சுட்டு இருந்தோம்... வங்கிகளின் இருப்பை
அதிகரிக்கத் தான், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு
நடவடிக்கை மேற்கொண்டாங்களா... வங்கிக்கு திரும்பியவற்றில், எவ்வளவு தொகை கறுப்புப் பணம் என்ற, 'டவுட்'டுக்கு, எப்போ பதிலைச் சொல்லப் போறாங்க' என்பது
தான், மக்களின் பெரும் கேள்வியா இருக்கு...!

***

மத்திய உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்: வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை உயர்வுக்கு காரணம், தேவைக்கும், சப்ளைக்கும் உள்ள இடைவெளி தான். வெங்காய விலையை
உடனடியாக குறைப்பது, என் கைகளில் இல்லை.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற காரணம், பள்ளிச் சிறுவனுக்கும் தெரியும்... விதைப்பு, விளைச்சல் குறித்து வேளாண் துறை அமைச்சரிடம் முன்கூட்டியே
பேசி, அதற்கேற்ப,
ஏற்றுமதியில் கட்டுப்பாடும், இறக்குமதியில் தீவிரமும் காட்டாதது ஏன்கறது தான், மக்களின், 'டவுட்!'

***


காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: குஜராத் தேர்தலில் காங்கிரஸ்
அலை வீசுவதால், என்ன பேசுகிறோம் என்று புரியாமல், பிரதமர் மோடி பேசி வருகிறார்.
டவுட் தனபாலு: உ..பி., உள்ளாட்சித் தேர்தலின்போதும், பா.ஜ.,வுக்கு எதிரான அலை வீசுவதாகச் சொன்னீங்க... நடந்து முடிந்த தேர்தலில், 16ல், 14 மாநகராட்சிகளை, பா.ஜ.,வும், மீதமுள்ள இரண்டை, மாயாவதியின் பகுஜன் சமாஜும் கைப்பற்றி இருக்கு... அப்புறமும் உங்களின் கணிப்பை எப்படி நம்புறது என்பது தான், என்னோட, 'டவுட்!'

***

முதல்வர் பழனிசாமி: இரண்டாவது, உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை, தமிழகத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
டவுட் தனபாலு:
முதல் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்ட அத்தனை நிறுவனங்களும், தொழிலை துவங்கிடுச்சா... எவ்வளவு முதலீடு வந்துச்சு... எத்தனை பேருக்கு வேலை கிடைச்சிருக்கு என்ற கேள்வியே இன்னும் ஓயலை... இரண்டாவது மாநாடு
துவங்குவதற்குள்ளாவது, இந்த, 'டவுட்'டை
தீர்ப்பீங்களா...!

***


தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: அ.தி.மு.க., ஓட்டு வங்கி, நான்காக பிரிந்து கிடக்கிறது. எனவே, ஆர்.கே.நகர், தி.மு.க.,
வேட்பாளர் மருதுகணேஷ், மகத்தான வெற்றி பெறுவார்.
டவுட் தனபாலு: 'ஜெ., இல்லை... அரசின் செயல்பாடு சரியில்லை... தி.மு.க.,வின் மீது மக்கள் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்காங்க' போன்ற காரணங்களைச் சொல்லாமல், ஆளாளுக்கு பிரிந்து கிடப்பதால், மருதுகணேஷ் வெற்றி பெறுவாருன்னு சொல்றீங்களே... இதுல, ஏதும் உள்குத்து இருக்கோ என்ற, 'டவுட்' வருதே...!

***

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கடந்த முறை பணம் பட்டுவாடா செய்ததற்காக, பல அமைச்சர்கள் சிக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்த தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம்.
டவுட் தனபாலு: 'குதிரைக்கு சறுக்கியது சாக்குங்கற மாதிரி இருக்குங்க, உங்க பேச்சு... நடவடிக்கை எடுத்திருந்தால் மட்டும், போட்டியிட்டிருப்பீங்களாக்கும்... அப்படீன்னா, கடந்த முறை ஏன் களத்தில் இறங்கலை'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement