Advertisement

பக்க வாத்தியம்

சர்ச்சையை சமாளித்த அமைச்சர்!
புதுக்கோட்டை, புத்தக கண்காட்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புத்தக அரங்குகளை பார்வையிட்ட அமைச்சர், ஒரு அரங்கில் இருந்த பகவத் கீதை புத்தகங்களை, பணம் கொடுத்து வாங்கி, கட்சியின் மகளிரணி உட்பட, அனைத்து நிர்வாகிகளுக்கும் கொடுத்தார். பகவத் கீதை புத்தகத்தை அமைச்சர் வாங்கி கொடுத்த தகவலும், படங்களும் சமூக வலைதளங்களில் பரவின. இதைப் பார்த்த, பா.ஜ., தொண்டர்கள் சிலர், 'சில நாட்களுக்கு முன், தனியார் பள்ளி விழாவில், கிறிஸ்தவ பள்ளிகள் தான், மாணவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத் தருவதாக அமைச்சர் கூறினார். 'அதற்கு, இந்து அமைப்புகள், அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தன. அதை சரிக்கட்ட, பகவத் கீதை புத்தகங்களை வாங்கி கொடுத்து, சமாளித்துள்ளார்' என்றனர்.

மலைக்கும், மடுவுக்கும் வித்தியாசம்!
திருச்சியில் நடக்க இருக்கும், த.மா.கா., மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட வந்த வாசனிடம், 'நீங்கள் கட்சி துவங்கிய போது, உடன் இருந்த பலரும், இப்போது உங்களுடன் இல்லையே...' என, நிருபர்கள் கேட்டனர்.அதற்கு வாசன், ''த.மா.கா.,வில் இருந்து வெளியே சென்றவர்கள், எவ்வளவு புகழோடு இருக்கின்றனர் என்பது எல்லாருக்கும் தெரியும். துரோகிகள் சென்று விட்டனர்; எங்கள் கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது,'' என்றார். அருகில் இருந்த கட்சி நிர்வாகி ஒருவர், 'நம்ம தலைவர், எவ்வளவு சிக்கலான கேள்வியையும், எப்படி சமாளிக்கிறார் பார்த்தியா...' என, பெருமை அடித்தார்.மூத்த நிருபர் ஒருவர், 'அது சரி... மூப்பனார் வச்சிருந்த, த.மா.கா., மலை; இப்ப இருக்கிறதுமடு... இந்த வித்தியாசம் இவங்களுக்குஎப்ப தான் புரியுமோ...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.

'தனித் தனியா திரியிறாங்களே...!'
மதுரை, டி.கல்லுப்பட்டியில், பா.ஜ., செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாநில செயலர் சீனிவாசன் பேசியதாவது: தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் தேய்ந்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஓடை உடைப்பு, கண்மாய், குளம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கொண்டனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில், பாஜ., வளர்ந்து வருகிறது.காங்., - தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட இதர கட்சிகள், இடம் காணாமல் போய்விட்டன. 18 மாநிலங்களில் ஆண்டாலும், தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு இன்னும் மீசை முளைக்கவில்லை. தனி கட்சியாக ஆட்சி அமைக்க வேண்டும்' என்றார்.'கேட்கிறதுக்கு நல்லா தான் இருக்கு. வேலை நடக்குணும்ல. இப்பவே, தலைவர்கள் எல்லாரும் தனித் தனி அணியாதிரியிறாங்க...' என, கட்சி தொண்டர் ஒருவர்,விரக்தியுடன், 'கமென்ட்' அடித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement