Advertisement

டீக்கடை பெஞ்ச்

ஆர்.கே.நகரில் தங்க காசுகளை இறைக்க திட்டம்?

''சாப்பாடு கொடுக்காமலேயே, குடுத்துட்டதா கையெழுத்து வாங்கிடுதாவ வே...'' என, துண்டை உதறியபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எங்க பா...'' என, கேட்டார் அன்வர்பாய்.
''மதுரை ரயில்வே மருத்துவமனையை தான் சொல்றேன்... ஒன்பது மாவட்ட ரயில்வே ஊழியர்கள், அவங்க குடும்பத்தினர், இங்க சிகிச்சைக்கு வர்றாவ வே...
''உள்நோயாளி களுக்கு, அங்கேயே, சாப்பாடு தர்றாவ... அப்ப, நோயாளிகிட்டே கையெழுத்து வாங்கணும் வே...
''ஆனா, உணவு சப்ளையை கண்காணிக்குற அதிகாரி, நோயாளிகளிடம் அப்பப்ப, கையெழுத்து வாங்காம, 'டிஸ்சார்ஜ்' ஆகுறப்ப, மொத்தமா வாங்கிடுதாரு... சில நோயாளிகள், சாப்பாடு வேண்டாம்னு
சொல்லிடுவாவ வே...
''அவங்ககிட்டயும், சாப்பாடு குடுத்ததா, கையெழுத்து வாங்கிடுதாரு... இந்த முறைகேட்டை, சமீபத்துல, தணிக்கை அதிகாரிகள் கண்டுபிடிச்சு, அதிகாரிக்கு எச்சரிக்கை மணி அடிச்சிட்டு போயிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''ஓகே சாகு... நாளைக்கு பேசறேன்...'' என, மொபைல் போனை, 'கட்' செய்தபடியே வந்த குப்பண்ணா, ''இரும்பை ஏலம் போட்டு, சில ஆயிரங்களை அள்ளிட்டார் ஓய்...'' என்றார்.
''எந்த ஊருல, யார்ன்னு வௌக்கமா சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.
''திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில, 10 வருஷங்களுக்கும் மேலா, பழைய இரும்பு கழிவுகளை சேகரிச்சு வச்சிருந்தா... மொத்தம், 3,000 கிலோவுக்கு மேல இருந்தது ஓய்...
''இதை சமீபத்துல, வெறும், 11 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்துல வித்துட்டா... ஏலம் எடுத்தவா, ராவோட ராவா இரும்பு கழிவுகளை அள்ளிண்டு போயிட்டா ஓய்...
''மார்க்கெட்ல பழைய இரும்பு, கிலோ,14 ரூபாய்க்கு விலை போறது...
எப்படி கணக்கு பார்த்தாலும், நகராட்சிக்கு, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல, 'லாஸ்' ஏற்பட்டிருக்கு...
''ஆனா, ஏலம் விட்ட அதிகாரிக்கு கணிசமா லாபம் கிடைச்சிடுத்து...'' என்ற குப்பண்ணா, ''விஜய காமராஜ் வீட்டுல, சாயந்தரம் பார்க்கலாம் ஓய்...'' எனக் கூறி, விடை பெற்றார்.
''தங்கக்காசு குடுக்க போறாங்க பா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அன்வர்பாய்.
''ஏதாவது நகைக்கடை, 'ஆபரை' பத்தி சொல்றீங்களா...''எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''இல்லை... அ.தி.மு.க.,வுலேர்ந்து வெளில போற நிலைமையில இருக்கறவரு, ஆர்.கே.நகர்ல போட்டி இடுறாருல்லியா... காசு கொடுத்தா தேர்தல் கமிஷன்கிட்டே மாட்டிக்குவோம்ன்னு முடிவு பண்ணி, தங்க
காசு குடுக்குற ஐடியாவை கையில எடுத்திருக்காரு...
''இது சம்பந்தமா, போலீஸ் அதிகாரிகள் காது வரைக்கும் போயிருக்கு... ஐடியாவை நிறைவேத்தினாங்கன்னா, அதை, தேர்தல் கமிஷனுக்கு, புகாரா குடுக்க எதிரணி திட்டமிட்டிருக்கு பா...'' என்றார் அன்வர்பாய். பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

பழனி - பன்னீரை தனித்தனியாக வரவேற்ற கட்சியினர்!

''தவிட்டு மூட்டையை, அரிசி மூட்டைன்னு சொல்லி மாட்டிக்கிட்டாரு பா...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருவே அது...'' என்றார் அண்ணாச்சி.
''பெரம்பலுார் மாவட்டத்துல, ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர் விடுதிக்கு வார்டனா இருக்குறவர், 'சோக்கு' பேர்வழி... சமீபத்துல இவர், பெண் சமையல்காரி கூட, விடுதியிலயே உல்லாசமா இருந்ததை, சில மாணவர்கள் பார்த்துட்டாங்க பா...
''அது மட்டும்இல்லாம, சமையல் பொருட்களை தரமில்லாம வாங்கி, பல லட்சம் ரூபாயை பாக்கெட்டுல போட்டுக்குறாரு...
''சமீபத்துல,விடுதியில அதிகாரிகள் சோதனைக்கு வந்தப்ப, தவிட்டு மூட்டைகளை அரிசி மூட்டைகள்னு கணக்கு காட்டி, மாட்டிக்கிட்டாரு...
''ஆனாலும், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., 'மாஜி' மத்திய மந்திரி ராஜாவின் உறவினர்னு, 'உதார்' விட்டுட்டு திரியுறதால, இவர் மேல நடவடிக்கை எடுக்காம இருக்காங்க...'' என்ற அன்வர்பாய், ''என்னை தேடி,
ஜீவானந்தம் வந்தா, வீட்டுக்கு வரசொல்லுங்க பா...'' என கூறி, கிளம்பினார்.
''சஸ்பெண்ட் ஆனவங்களை, 'டிஸ்மிஸ்' பண்ணிட்டாருங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு தாவினார் அந்தோணிசாமி.
''எந்த துறையில ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''மதுரை மாநகராட்சியில முறைகேடுகள்ல சிக்கி, 'சஸ்பெண்ட்' ஆகுறவங்க, அரசியல்வாதிகள், உயர்அதிகாரிகளை பிடிச்சு, மறுபடியும் வேலைக்கு வந்துடுவாங்க...
''சமீபத்துல, பணம் முறைகேடு சம்பந்தமா, மூணு மேஸ்திரிகள், ஒரு மயான ஊழியர் உட்பட, அஞ்சு பேரை, 'சஸ்பெண்ட்' செஞ்சாங்க... இந்த அஞ்சு பேரும், முறைகேடு செஞ்ச நிதியை, மாநகராட்சிக்கு கட்டிட்டாங்க...
''மறுபடியும் வேலையில சேர, சில அதிகாரிகள் பரிந்துரையோட,கமிஷனர் அனீஷ் சேகரிடம் மனு குடுத்தாங்க...
ஆனா அவங்களை, கமிஷனர் டிஸ்மிஸ் பண்ணிட்டாருங்க...
இதனால, மாநகராட்சி ஊழியர்கள் நடுக்கத்துல இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''தனித்தனியா வரவேற்பு குடுத்து, பனிப்போரை பட்டவர்த்தனமாக்கிட்டா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சமீபத்துல, தஞ்சையில, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாநடந்துதோல்லியோ... இதுக்காக, முதல்வர் பழனிசாமி, காலை, 11:15 மணிக்கு பிளைட்ல திருச்சி வந்தார் ஓய்... அவரை, அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர் எல்லாம் சால்வை, பூங்கொத்து கொடுத்து வரவேற்றா...
''மதியம், 12:00 மணிக்கு மேல, மணப்பாறையில இருந்து, திருச்சிக்கு வந்த துணை முதல்வர் பன்னீர்
செல்வத்தை, முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, பூனாட்சி உள்ளிட்ட நிர்வாகிகள், பட்டாசு வெடிச்சு வரவேற்றா ஓய்...
''பழனிசாமியை வரவேற்க போன யாரும், இதுல கலந்துக்கலை... பன்னீரை வரவேற்ற யாரும், முதல்வரை வரவேற்க போகலை... இப்படி தான் இருக்கு, இவங்க இணைப்பு லட்சணம்...'' என, முடித்தார் குப்பண்ணா.
பெரியவர்கள் பேச்சு, வேறு பக்கம் திரும்பியது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement