Advertisement

காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை அருந்துவது நல்லது!

குளிர்கால பிரச்னைகளுக்கு தீர்வு கூறும், நோய் கண்டறியும் சிறப்பு நிபுணர், டாக்டர் அஜிதா பொற்கொடி: குளிர்காலங்களில் சூரிய ஒளி குறைவாக இருப்பது, கிருமிகளுக்கு வசதியாகி விடுகிறது. குளிர்காலம் ஆரம்பிக்கும்போதே, மலேரியா, டைபாய்டு மற்றும், 'டெங்கு' தாக்கத் துவங்கிவிடும். எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும்.

சாதாரண வைரஸ் காய்ச்சல் என்றால், ஐந்து நாட்களில், மருத்துவரின் சிகிச்சையில் சரியாகிவிடும்; கவலைப்படத் தேவைஇல்லை. ஆனால், அதுவே, 103 - 104 டிகிரி பாரன்ஹீட் என அதிகரித்து, ஐந்து நாட்கள் தாண்டியும் சரியாகாமல் இருந்தால், நிச்சயமாக ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். டெங்கு, மலேரியா காய்ச்சல் தான், அதிகம் ஆபத்தானது. மூன்று நிலை டெங்கு காய்ச்சல் உள்ளது. முதல் நிலை பெரும்பாலும், ஒரு வாரத்திலேயே குணமாகிவிடும்.

'ஹெமோராஜிக்' எனப்படும் இரண்டாவது நிலை டெங்குவில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் எண்ணிக்கை குறைவதால், உடம்பு முழுவதும், 'ரேஷஸ்' எனப்படும் ரத்தக் கட்டுகள் எச்சரிக்கை மணி அடிக்கும். உடனே, டாக்டரிடம் சென்று விட வேண்டும். மூன்றாவது நிலை டெங்கு தான், 'ஷாக் சின்ட்ரோம்!' இது அபாயகரமானது. இந்த நிலைக்கு சென்று விட்டால், உயிருக்கு ஆபத்து. எனவே, குளிர்காலத்தில், காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை அருந்துவது நல்லது. வீட்டு உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

குளிர்காலம் துவங்கியதுமே ஐஸ்கிரீம், பிரிஜ் வாட்டர், குளிர்ச்சியை ஏற்படுத்தும் பூசணி, புடலை, வெள்ளரி, சவ்சவ் போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும். குளிர்காலத்தில் காய்ச்சலுக்கு அடுத்தபடியாக சளி, இருமல் தான், அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அடிக்கடி சுடுதண்ணீர் குடித்தபடி இருந்தால் இருமல், சளி பிரச்னை சரியாகும்.

பொதுவாக, குளிர்காலங்களில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். எனவே, 'வாக்கிங்' போன்ற உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும். சூடான சுக்கு பால், மிளகு மஞ்சள் பால், இஞ்சி பால் ஆகியவற்றை அடிக்கடி குடிக்கலாம். மிளகு கலந்த சூப், மிளகு, பூண்டு ரசம் வைத்தும் குடிக்கலாம்.

டெங்கு வந்தோருக்கு தினமும், ஒரு கைப்பிடி வறுத்த வேர்க்கடலை கொடுக்கலாம். இது, உடம்பில் ரத்த தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்தும். சர்க்கரை நோய் இருப்போர், வயதானோர் மற்றும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவால், குளிர்கால பிரச்னைகள் அதிகம் தாக்கும் என்பதால், கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement