Advertisement

இது உங்கள் இடம்

எம்.பி.,க்களின் மக்கள் பற்றுக்கு சபாஷ் போடலாம்!
ரா.கீர்த்திப்ரியன், கோவையிலிருந்து எழுதுகிறார்: பா.ஜ., அரசு, 2014ல், 'கிராம நலன்கள் மேம்பட வேண்டும்' என்ற நோக்கில், கொண்டு வந்த, 'ஆதர்ஷ் கிராம திட்டம்' கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறி வருவது, வேதனை அளிக்கிறது.நாட்டில் உள்ள, லோக்சபா, எம்.பி.,க்கள், 543 பேரும், ராஜ்ய சபா, எம்.பி.,க்கள் 243 பேரும், ஆளுக்கொரு கிராமத்தை தத்து எடுத்து, அதை பராமரித்து, கிராமங்கள் மேன்மை அடைய உதவ வேண்டும் என்ற நோக்கில், திட்டம் கொண்டு வரப்பட்டது. 'ஆதர்ஷ் கிராமத் திட்டம்' மக்கள் நலனை பேண வேண்டிய, எம்.பி.,க்களின் அக்கறை இன்மை, ஆர்வமின்மை, பொறுப்பற்ற தன்மை காரணமாக, மூன்றாண்டு காலம் விரயமாகி விட்டது. 'மக்களுக்கு சேவை செய்வீர்கள், நாட்டை முன்னேற்றுவீர்' என்று நம்பித் தான், உங்களுக்கு ஓட்டளித்து டில்லிக்கு அனுப்பி உள்ளோம். எவ்வளவோ திட்டங்களையும், பணத்தையும் உங்களுக்கு கொடுத்து, செயல்படுத்த, மத்திய அரசு வாய்ப்பை தருகிறது. இதில் கூட நீங்கள் அக்கறை காட்டாமல் இருப்பது ஏன்?ஒரே ஒரு கிராமத்தை, ஒரு, எம்.பி., தேர்வு செய்து கொடுத்து விட்டால், அக்கிராமத்தின் சாலை, குடிநீர் வசதி, சுகாதார மேம்பாடு, தனி நபர் வீட்டில் கழிப்பறை, விவசாய மேம்பாடு, வேலைவாய்ப்பு என, அவற்றில் தனி கவனம் செலுத்தி, கிராமத்தை முன்னேற்றி விடலாம்.நாட்டிலுள்ள மொத்த, எம்.பி.,க்களில், 71 பேர் மட்டுமே தம் பொறுப்பில் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். மற்ற, 472 எம்.பி.,க்கள், கிராமத்தைக் கூட தேர்ந்தெடுக்க நேரமில்லாமல் சமுதாயப் பணி, மக்கள் பணி, கட்சிப் பணி செய்து வருவது, மிக மிக அவலமான நிலை! 'தொகுதி மக்களின் பிரச்னைகளில், சிலவற்றுக்காவது நீங்கள் தீர்வு காண்பீர்' என, உங்கள் மீது நம்பிக்கை வைத்து, ஓட்டளித்து இருக்கின்றனர், மக்கள். அவர்கள் நம்பிக்கைக்கு ஏற்ப துடிப்புடன் செயல்பட வாருங்கள், மற்ற, எம்.பி.,க்களே!
நீதி, நியாயம் பேசுவோர் ஞானசூன்யம்!என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'அரசியல், அயோக்கியர்களின் கடைசி புகலிடம்' என, மக்கள் அடித்துச் சொல்கின்றனர். மேலும், 'அரசியலும், சினிமாவும் சாக்கடைகள்' என்றும் கூட சிலர் விமர்சனம் செய்கின்றனர்.அரசியல்வாதிகளுக்கும், சினிமா நடிகர்களுக்கும் நாற்றமெடுக்கும் சாக்கடை, மணக்கும் சந்தனமாக தெரிகிறது போலும்! ஊழல் நதியில் உல்லாச குளியல் போடும் உத்தமர்கள், அரசியல்வாதிகள். மானம், வெட்கம், ரோஷம், சூடு, சொரணை பார்ப்பதை பஞ்சமா பாதகமாக நினைக்கின்றனர்.இறுதி வரை ஆணவத்துடனும், இறுமாப்புடனும், திகழ்பவர்கள், தமிழகத்தில் இதய தெய்வமாக போற்றப்படுகின்றனர். 'மக்களால் நான்... மக்களுக்காக நான்' என, தாரக மந்திரம் முழங்கியோர், இலவசம் வேண்டி யாசகம் செய்யும் பாவப்பட்ட பிச்சைக்காரர்களாக தான் மக்களை வைத்து அழகு பார்த்தனர்.'சிவன் சொத்தை கொள்ளையடிப்போரின் குலமே நாசமாகி விடும்' என்கின்றனர், சான்றோர். மக்கள் சொத்தை கொள்ளையடித்தோர், 'கொள்ளை அடிப்பதும் ஒரு கலை' என்றனர். இவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனையும் கிடைப்பதில்லை; இது மக்களாட்சியின் பூரண மகத்துவம் போலும். என்ன தான் கொள்ளையடிப்பவர்கள் மீது வழக்குகள் போட்டாலும், அவர்களுக்கு ஆதரவாக, முன் ஜாமின்கள், வாய்தாக்கள், மறு சீராய்வு மனு என, நிறைய சலுகைகளை அள்ளித் தந்து, நம் பெருமை மிகு நீதிமன்றங்கள் உதவிக்கரம் நீட்டத் தயாராக இருக்கின்றன.இது, நம் நாட்டில் நிலவும் நீதிகள் வழங்கும் மாண்பை காட்டுகிறது.எத்தனை வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டாலும், இவர்கள் அசர மாட்டார்கள். பனங்காட்டு நரியான இவர்கள், இந்த மாதிரி வெட்டி சலசலப்புகளுக்கு அஞ்சாமல் இருப்பதில் ஆச்சரியமில்லையே! அதிகமாக சொத்து சேர்த்ததில் சசிகலாவின் பங்கு வெறும், 5 சதவீதம் தான்! கோடிக்கணக்கில், அவருக்கு, 'கமிஷன்' வெட்டியவர்கள், அ.தி.மு.க., அமைச்சர்கள் என்பதை, யாரும் மறுக்க முடியாது. சசிகலா குற்றவாளி என்றால், ஊழல் பெருச்சாளிகளான, அ.தி.மு.க., அமைச்சர்களும் குற்றவாளிகள் தான். ஊழல் பெருச்சாளிகளின் சொர்க்க பூமியாக திகழும், தமிழகத்தில் நீதி, நேர்மை, நியாயம் பேசுவோர் ஞான சூன்யங்களாக தான் இருப்பர்.
லஞ்சம் தலைதெறிக்க ஓடி விடும்!எம்.ராஜா, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு ஊழியர்கள் வருமான வரி ஒழுங்காக செலுத்துகின்றனரா என, யாரும் கேட்கவில்லை. தகுதிக்கும், திறமைக்கும் மீறி, 'கொழுத்த' சம்பளம் வாங்குகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் பெரும்பகுதி, இவர்களுக்கே சென்று விடுகிறது. அதனால், வேறு எந்த நலத்திட்டங்களுக்கும், அரசு நிதி ஒதுக்க முடிவதில்லை. அரசு ஊழியர்களுக்கு, ஆண்டின் மொத்த வேலை நாட்கள் குறைவு. அதற்கேற்றவாறு தான் சம்பளம் கொடுக்க வேண்டும். இரண்டு நாட்கள் வேலை செய்வோருக்கு, 10 நாட்களுக்கான சம்பளம் கொடுப்பது எவ்விதத்தில் நியாயம்...'மக்கள், லஞ்சம் கொடுத்து தங்கள் வேலையை சீக்கிரம் முடித்துக் கொள்கின்றனர்; பழியை அரசு ஊழியர்கள் மீது துாக்கி போடுகின்றனர்' என, சிலர் வாதம் செய்கின்றனர். லஞ்சம் கொடுக்காவிட்டால், ஒரு நாளில் முடிய வேண்டிய வேலையை ஓராண்டு இழுத்தடிக்கும் தில்லாலங்கடிகள், அரசு ஊழியர்கள் என்பது, இந்த உலகிற்கே தெரியும்! 'எல்லா மக்கள் பிரச்னைகளையும், கவுன்சிலர், எம்.எல்.ஏ.,க்களிடம் கூற வேண்டும்' என, இதே பகுதியில், வாசகர் ஒருவர் கூறியிருந்தார். அய்யா... எனக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வேண்டும்; பட்டா, சிட்டா வேண்டும்; பத்திரம் பதிய வேண்டும் என்றால், அரசு ஊழியர்களை பார்க்க வேண்டியதில்லையா... கவுன்சிலர், எம்.எல்.ஏ.,வை பார்த்தால், காசு வாங்காமல் காரியத்தை முடித்து விடுவரா?சில துறைகளில், ஒரு சில நேர்மையான ஊழியர்கள் உள்ளனர். பெரும்பான்மையான ஊழியர்கள், வாங்கும் சம்பளத்திற்கு, 50 சதவீதம் அளவு கூட வேலை செய்வதில்லை. அரசு ஊழியர்களிடம் சரிவர வேலை வாங்க முடியாத அதிகாரிகளை, உடனே, 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். வேலையே செய்யாமல் தண்டச்சம்பளம் வாங்கும் சங்கத் தலைவர்களையும், அரசு ஊழியர்கள் புறக்கணிக்க வேண்டும். நேர்மையாகவும், உண்மையாகவும் அரசு ஊழியர்கள் பணியாற்றினால், லஞ்சம் தலைதெறிக்க ஓடி விடும்!ll

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement