Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: செனகல் நாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், கொத்தடிமைகளாக பணியாற்ற விரும்பவில்லை. எனவே, அங்கு சிக்கியுள்ள, ௨௩ தமிழர்களை மீட்க, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். செனகல் நிறுவனம் வழங்க வேண்டிய ஊதிய நிலுவையையும், பெற்று தர வேண்டும்.
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேட்டி: ஆறு மாதங்களுக்குள் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்பது, அதிக காலக்கெடு. நாளையே மணல் குவாரிகளை மூட வேண்டும். சில காலங்களுக்கு, எம் சாண்ட் இறக்குமதி மணல் மூலம், தேவைகளை சமாளிக்கலாம். மணல் அள்ளி விற்பனை செய்வதில் முறைகேடு நடக்கிறது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க, முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார்.
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: கர்நாடகாவில், நந்தி மலையில் உருவாகும் தென்பெண்ணையாற்று நீர், அங்குள்ள ஏராளமான ஏரி, குளங்களை நிரப்பிய பின், கிருஷ்ணகிரி வழியாக, தமிழகத்திற்குள் பாய்கிறது. அதில், கர்நாடகாவின், 99 கோடி லிட்டர் கழிவுநீர் கலந்து விடப்படுகிறது; இதனால், தமிழகத்தில் உள்ள தென்பெண்ணையாற்று பாசனம் பெறும் மாவட்டங்களில், நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறுகின்றன. இதை தடுத்து நிறுத்த, சட்ட, அரசியல்பூர்வ நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்க வேண்டும்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு: தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டோர், அரசியல் எதிரிகள் தானே தவிர, உண்மையான எதிரிகள் அல்ல. எனவே, தேர்தல் முடிந்த பின், போட்டியாளர்களை தன்னுடைய சக நண்பராக நடத்த வேண்டும். அந்த தொகுதி முன்னேற்றத்திற்கு, அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இதன் மூலம், மாநிலம் மற்றும் நாடு முன்னேறும். ஜனநாயகத்தை உண்மையாக மாற்றுவது, எம்.எல்.ஏ.,க்கள் தான். மிசோரமில், உண்மையான ஜனநாயகம் இருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது.
'ரெண்டு கிராம், 4,000ம்ன்னெல்லாம் பேசிக்கிறாங்களே... உண்மையா சார்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தினகரன் ஆதரவாளர் வழக்கறிஞர் புகழேந்தி பேட்டி: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர், மதுசூதனனை, அமைச்சர் ஜெயகுமாரே தோற்கடிப்பார். மதுசூதனனை ஆதரித்து, பா.ஜ., அறிக்கை விடும் என, எதிர்பார்க்கிறோம். அது வந்து விட்டால், எதிரி, தி.மு.க., தான். ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன், 50 ஆயிரம் ஓட்டுகளுக்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement