Advertisement

டீக்கடை பெஞ்ச்

பல்கலை முறைகேடுகளை கவனிப்பாரா கவர்னர்?

'குரூப் போட்டோ எடுக்குறேன்னு சொல்லி, 75 ஆயிரத்தை அமுக்கிட்டாருங்க...'' என, கச்சேரியை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''யாரு வே அது...'' என கேட்டார் அண்ணாச்சி.

''உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பதவிக்காலம், போன வருஷம், அக்., 24ம் தேதி முடிஞ்சது... ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சியில, கட்சி பேதமில்லாம, சேர்மன், கவுன்சிலர்கள் எல்லாம், 'பிக்னிக்' மாதிரி எங்காவது போய், குரூப் போட்டோ எடுக்க முடிவு செஞ்சாங்க...

''இதுக்காக, ஒவ்வொரு கவுன்சிலர்கிட்டயும், தலா,3,௦௦௦ ரூபாயை வாங்குனாங்க... ஒரு லட்சம் வசூலானதுல, அசைவ விருந்துக்கு, 24 ஆயிரம் ரூபாய் போயிடுச்சு...

''மீதம், 76 ஆயிரம் ரூபாயை, ஏழாவது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலரா இருந்த பெரியசாமி வாங்கி, குரூப் போட்டோ எடுக்க, ஏற்பாடு பண்றதா சொன்னாருங்க...

''அப்புறமா, ஜெ., உடல்நிலை பாதிப்பு, அரசியல் குளறுபடிகள்னு, குரூப் போட்டோவை எல்லாரும் மறந்துட்டாங்க... 76 ஆயிரம் ரூபாயை, பெரியசாமியும், யாருக்கும் திருப்பி கொடுக்காம வச்சுக்கிட்டாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

''கறாரான ஆபீசரா இருக்கறதால, காசு பார்க்க முடியலைன்னு வருத்தப்படறா ஓய்...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.

''எந்த துறையில பா...'' என்றார் அன்வர்பாய்.

''மதுரை ரயில்வே கோட்ட மேலாளரா, ஆறு மாசத்துக்கு முன்னாடி, கேரளாவைச் சேர்ந்த, ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான, நீனு இட்டியரா பொறுப்புக்கு வந்தார்...

''இவர் விடுமுறை நாட்கள்ல கூட, ரயில்கள்ல, பயணி மாதிரி போய், ரயில்வே ஸ்டேஷன்கள்ல இறங்கி ஆய்வு பண்றார் ஓய்...

''சமீபத்துல, மதுரை ஸ்டேஷன்ல, டிரைவர்கள், கார்டுகள் ஓய்வறைக்கு போய், அங்கே இரவு சாப்பாடு வாங்கி சாப்பிட்டிருக்கார்... அது தரம் இல்லாம இருந்தது ஓய்...

''உடனே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் போட்டு, சத்தம் போட்டிருக்கார்...

''அதே சமயம், சில அதிகாரிகள், வருமானம் பார்க்க முடியலையேன்னு, கேரள அதிகாரி மேல கடுப்புலயும் இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''பல்கலைக் கழகங்கள்லயும் அதிரடி நடவடிக்கையை ஆரம்பிச்சா நல்லாயிருக்கும்னு சொல்லுதாவ வே...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அண்ணாச்சி.

''விபரமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''கவர்னர் புரோஹித், கோவையில அரசு அதிகாரிகளோட ஆய்வு கூட்டம் நடத்துனது, சர்ச்சையை கிளப்புச்சே... அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்துலயும் ஆய்வு பண்ண போறாரு வே...

''அதே நேரம், தமிழகத்துல இருக்கிற பல்கலைக் கழகங்களுக்கு வேந்தரா இருக்கிறதும், கவர்னர் தான்... அங்க, ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துட்டு இருக்கு...

''துணைவேந்தர் நியமனங்களுக்கு, கோடிகள்லயும், பேராசிரியர்களுக்கு, லட்சங்கள்லயும் தான் பேரங்கள் நடக்கு... இதை எல்லாம், கவர்னர் கவனிச்சா நல்லாயிருக்கும்னு பல்கலை வட்டாரங்கள்ல இருக்கிற நேர்மையான அதிகாரிகள் சொல்லுதாவ வே...'' என, முடித்தார்அண்ணாச்சி.பெஞ்ச் அமைதியானது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement