Advertisement

அதிக குறைகளா...அல்லது நிறைகளா?

அமெரிக்க சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான, 'மூடிஸ்' இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை உயர்த்தி, கருத்து தெரிவித்திருக்கிறது. அதிகளவில், வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில், இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிக்கும் எந்த ஆய்வும், ஏற்கத்தக்கதா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அதுவும் முந்தைய காலத்தில், இதே நிறுவனம் நம்மை குறைத்து மதிப்பிட்டது போக, இன்று ஏன் இந்த மாற்று முடிவு என்ற கேள்வியும் எழுகிறது. மற்றொரு நிறுவனமான, 'மூர்' நம் தரத்தை அவ்வளவாக உயர்த்திப் பிடிக்கவில்லை. ஆனால், ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது. இம்மாதிரி விஷயத்தை வைத்து, பார்லிமென்டை முடக்க, காங்., முயன்றால், அது அக்கட்சி பங்கேற்கும் விவாதங்களில் தெரியும். ஏனெனில், செல்லாத கரன்சி அமலாக்க விவகாரத்தில் சரியாக அலசாத போக்கு, காஷ்மீருக்கு தன்னாட்சி என்ற, அக்கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்த கருத்தை ஏற்காமல், அவர்கள் சமாளித்த விதம் ஆகியவை, திட முடிவுகள் எடுக்காத போக்காகும். பொதுவாக, மனிதனின் உடல்நிலை குறித்து ஆராய, 'மாஸ்டர் செக் - அப்' போல, நிதி அம்சங்களை ஆய்வு செய்து இந்த, 'மூடிஸ்' அமைப்பு கருத்து கூறுவது வழக்கம். திரும்பத் திரும்ப, 'செல்லாத கரன்சி நடவடிக்கை' அல்லது ஒரே வரி என்ற, ஜி.எஸ்.டி., அமலாக்கம் ஆகியவை, நாட்டை அதலபாதாளத்தில் இட்டுச் சென்றதாக, ஒரு கருத்து விவாதிக்கப் படுகிறது.
அந்த காலத்தில், வங்கி தேசிய மயம் என்ற அதிரடியால், ஏதோ பெரிய மாற்றம் வரப்போவதாக மக்களிடம் கூறி, ஓட்டு வாங்கினார் இந்திரா. அப்போது, குஜராத்தைச் சேர்ந்த, மொரார்ஜி தேசாய், 'ஒரே தெருவில், 10 அஞ்சலகங்கள் இருந்தால் எப்படியோ, அதே கதி தான் இதற்கும்' என, வர்ணித்தார். அவர், பின்னாளில் பிரதமராக வந்தாலும், அன்றைய மாற்றத்தை சீர்திருத்தும் முன், உட்கட்சி குழப்பத்தில், தன் ஆட்சியை இழந்தார். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன், சமீபத்தில், 'வங்கிகளில் வாராக்கடனை கட்டுப்படுத்தவும், வங்கிகள் செயல்பாட்டில் ஒழுங்குமுறையை கொண்டு வரவும், சில முயற்சிகள் இந்த அரசால் மேற்கொள்ளப்பட்டது உண்மை. அதற்கு ஆதார் அட்டை, மற்ற சில நடைமுறைகளும் சேர்ந்து உதவியுள்ளன' என்கிறார். அன்னியச் செலாவணி சந்தையில், ஐந்து ஆண்டுகளாக, ரூபாய் மதிப்பு, மதிக்கப்படாத நிலை, உலகச் சந்தையில் மாறி இருக்கிறது. பணவீக்கம் வரம்பிற்குள் இருப்பது, பட்ஜெட் கடன் வரம்பு அதிகரிக்காத அபாயம் ஆகியவை, பொருளாதாரத்தின் மிகப்பெரும் அம்சங்கள். இவை, தடம் புரளாத அறிகுறிகளை காட்டுகின்றன. தேர்தல் நேர அவசரங்களை கருதி, விவசாயி களுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் இலவசம் தருவது, பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்களை அனுமதித்து மவுனம் காத்தது ஆகியவை, வளர்ச்சி அல்ல என்பதன் அடையாளமாக, மத்தியில், காங்., ஆட்சியை இழந்தது.
இன்றும் இந்த, 'மூடிஸ்' கருத்தை வைத்து, மத்திய அரசை, மக்கள் எடை போடப் போவது இல்லை. பொருளாதாரத்தில் சந்தை ஆதிக்கம் அதிகம் இருப்பதால், உலகளாவிய பல்வேறு தாக்கம் அடிக்கடி ஏற்படுவதால், நாம் ஸ்திரமாக சமாளிக்க முடியுமா என்பது கேள்வியாகிறது.
வர்த்தக தடைகள் குறையும், தொழில்களில் மூலதன முதலீடு அதிகரிக்கும் என்கிற உலக அளவிலான மதிப்பீடு, எதிர்கால இந்தியாவுக்கு நல்லது அல்லவா? அது வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும். அதிலும், இந்த பொருளாதார சீராய்வு மதிப்பீடுகளில், சீனாவுக்கு சற்று பின்னடைவு என்பதை இணைத்து பார்க்க வேண்டும். கார் தயாரிப்பு முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, 'போக்ஸ்வாகன்' நிறுவனம், தன் டீசல் கார் தயாரிப்பில், அதன் நச்சு வாயு வெளியேற்ற குறியீடுகளில், போலியான தகவல் தந்து மாட்டிக் கொண்டது. இது, ஒரு வகை லஞ்சமாக கருதப்பட்டது. ஆனால், அக்கம்பெனி தற்போது, அக்குறையை நிவர்த்தி செய்ய முன்வந்ததும், முன்னணி நாடான, ஜெர்மனியின் அந்தஸ்து உயர வாய்ப்பாகி விட்டது என்பதை காண வேண்டும். அதனால், இந்தியாவின் பொருளாதார அம்சங்கள் சீர்திருத்தத்தை நோக்கி பயணிக்கிறது என்பதை, உலக வங்கி ஆய்வோ அல்லது இந்த, 'மூடிஸ்' அமைப்பு கூறுவதையோ ஏற்காமல் பேசுவது, அவரவர் மனோபாவம் என்றே கருதலாம்.
இன்றைய நிலையில், அதிகளவில் ஊழல் சக்தி கள் ஒடுங்கி வாழும் சூழ்நிலை காணப்படுவது நல்ல அறிகுறி. அதற்கு, கவர்ச்சி அறிவிப்புகளில் இருந்து சற்று மாறி சிந்திக்கும் போக்கு, மத்திய பட்ஜெட்டில் பிரதிபலிக்கலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்

    நமது மக்களும் ,,மீடியா ,,ஊடகங்கள் பட்ஜெட்டில் என்ன என்ன ,,,,சலுகை ,,என்ன இலவசம் ,, இதைத்தான் இன்றும் எதிர்பார்க்கின்றனர் ,,,அதுவும் இந்த ஊடகங்கள் இலவசம் ,,சலுகை இல்லாத பட்ஜெட் ஏழை ,எளியோரை அரசு கண்டுகொள்ளவில்லை என பொத்தாம் போக்கில் எழுத ,பேச ,செய்கின்றன ,,பிறகு மாற்றம் ,,அதை விழிப்புணர்வோடு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய மீடியாக்கள் ,,திருந்த வேண்டும் ,,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement