Advertisement

சொல்கிறார்கள்

கூட்டத்தை பார்த்ததும் கண்கள் கலங்கின!


சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த, 46வது தேசிய அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், இரண்டாம் இடத்தை பிடித்த பரிமளா தேவி: இன்று, தெற்காசியாவில் பலரால் விரும்பி விளையாடப்படும் ஆட்டங்களில் ஒன்று, கேரம். ஆட்டப் பலகையில் உள்ள காய்களை, ஆட்ட விதிகளுக்கு ஏற்றபடி, குறி வைத்து சுண்டி வீழ்த்துவதே, இந்த ஆட்டத்தின் அடிப்படை.என் தந்தை, கால்பந்து வீரர்; பி.எஸ்.என்.எல்.,லில் வேலை செய்து வந்தார். அவர் விளையாடும் போது கால் மூட்டில் அடிபட்டு, மூட்டு ஆப்பரேஷன் செய்தார். அப்புறம், கால்பந்து விளையாடுவதை கைவிட்டு, கேரம் விளையாடினார். பெரும்பாலும், நான் அவருடன் தான், கேரம் பயிற்சி செய்வேன்.நான் பங்கேற்ற முதல் போட்டி, 7ம் வகுப்பு படிக்கும் போது சேலத்தில் நடந்தது. சப் - ஜூனியர் பிரிவில் விளையாடி, மூன்றாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. 2012ல், ஸ்ரீலங்காவில், உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அதில் விளையாடி, உலக கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றேன்.அதன்பின், 2016ல், இங்கிலாந்தின், பர்மிங்ஹாம் என்ற இடத்தில் நடந்தது. அதிலும், அப்போது உலக கேரம் சாம்பியனாக இருந்த ரேஷ்மா குமாரியை தோற்கடித்து, இரண்டாவது முறையாக வெற்றி பெற்றேன்.வெற்றி பெற்று, தாயகம் திரும்பிய போது, எங்களை வரவேற்க, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த கூட்டத்தை பார்த்ததும், கண்கள் கலங்கி விட்டன. ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், அங்கீகாரம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைத்தது இந்நாள்.கடந்த, 2009ல், தமிழக அரசு, கேரம் விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு, அவார்டு மற்றும் பணப்பரிசு கொடுப்பதாகவும், உலகச் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு, 20 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும் அறிவித்தனர்.
ஆனால், இதுவரை வெற்றி பெற்ற எந்த வீரருக்கும் ஒன்றுமே செய்யவில்லை என்பது தான், எங்கள் ஆதங்கம்.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், 'ஸ்பான்சர்' செய்து, 2011ல் இருந்து விளையாடினேன். என் திறமையை பார்த்து, 2015ல் அதே கம்பெனியில் வேலை கிடைத்தது.கேரம் விளையாட்டை நேசித்ததால், ஆசைப்பட்டதை படிக்க முடியாமலும், அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதை செய்ய முடியாமலும், பலவற்றை இழந்து தான், இந்த நிலைக்கு வந்தேன். அதற்கு பலனாக தான், இப்போதும் வெற்றிகளை தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். கேரம் விளையாட்டில் என்னை ஊக்குவிக்க, பக்கபலமாக என் கணவர் இருக்கிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement