Advertisement

டீ கடை பெஞ்ச்

துணை முதல்வருக்கே, 'அல்வா' கொடுத்த அதிகாரி!



''கொறடா பதவியை காப்பாத்திக்க, முகாம் மாறிட்டாங்க வே...'' என, அரட்டைக்கு
பிள்ளையார் சுழி போட்டார் அண்ணாச்சி.''அ.தி.மு.க., விவகாரமாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''ஆமாம்...
தினகரன் அணியில இருந்த விஜிலா உட்பட மூணு, எம்.பி.,க்கள், பழனிசாமி அணிக்கு தாவிட்டாங்கல்லா... இதுல, விஜிலா, அ.தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி.,க்கள் குழுவுக்கு கொறடாவா
இருக்காங்க வே...
''இவங்க பதவியை பறிக்க ஏற்பாடு நடந்துட்டு இருந்தது... இப்ப, இரட்டை இலை சின்னமும் பழனிசாமி அணிக்கு வந்துட்டதால, 'இனி, தினகரனை நம்புறதுல புண்ணியமில்லை'ன்னு, அணி மாறிட்டாங்க வே...
''இதே மாதிரி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலரான பாப்புலர் முத்தையா, தினகரன் அணியில இருக்காரு...
''அதனால, மாநகர் செயலர் பதவிக்கு, பழனிசாமி அணியில இருக்கிற ராஜ்யசபா, எம்.பி., முத்துக்கருப்பன் முட்டி மோதிட்டு இருக்காரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''தென் மாவட்டங்கள்ல, வரிசையா, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாக்கள் நடந்துட்டு இருக்கோல்லியோ...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''இதுக்கு போற முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம், மதுரைக்கு விமானத்துல வந்து, அங்க இருந்து, கார்கள்ல போறா ஓய்...
''ஒவ்வொரு முறையும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், ஏர்போர்ட் போய், பூங்கொத்தோட முதல்வருக்கு மரியாதை செய்றா...''அதோட, அவா எல்லாம், மதுரையில சில மணி நேரங்கள் தங்கி, 'ரிலாக்ஸ்' பண்ணிண்டு போறதுக்காக, நட்சத்திர ஓட்டல்கள்ல அறைகள், 'புக்' பண்றது, சாப்பாடுன்னு, மாவட்ட நிர்வாகத்துக்கு பல லட்சம் ரூபாய் செலவாறது ஓய்...
''இதனால, அதிகாரிகள், ஓட்டல் நிர்வாகங்களிடம், கொஞ்சம், கொஞ்சமா பணத்தை செட்டில் பண்றதா, கெஞ்சி கூத்தாடிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''துணை முதல்வருக்கே, 'அல்வா' தந்த அதிகாரி ஒருத்தர் இருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''யாருப்பா அந்த கில்லாடி...'' என்றார் அன்வர்பாய்.''சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வுக்கு, துணை முதல்வர், பன்னீர் தான் தலைவர்... சமீபத்துல, நிர்வாகக் கூட்டத்தை பன்னீர் கூட்டியிருக்காருங்க...
''நிர்வாக பிரிவுல, ரெண்டு அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு, விதிகளை தளர்த்துறது பத்தி, தீர்மானம் கொண்டு வந்தாங்க...
''அப்ப, நிர்வாகப் பிரிவு உயரதிகாரி
ஒருத்தர், தகுதியுள்ள அதிகாரியை ஓரம் கட்டிட்டு, தகுதி இல்லாத இன்னொருத்தருக்கு, 'சப்போர்ட்' பண்ணியிருக்காருங்க...
''அதாவது, அஞ்சு வருஷம் சர்வீஸ் இருக்கிற அதிகாரி, 'ரிடையர்' ஆக போறார்னு பொய் சொல்லி, தீர்மானத்தை நிறைவேத்திட்டாருங்க... பன்னீர்
முன்னாடியே இது நடந்ததால, மத்த அதிகாரிகள் யாரும் வாய் திறக்கலைங்க...''இதே மாதிரி, நிர்வாகப் பிரிவுல ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்குது... எல்லாத்தையும் தோண்டி, துருவினா, நிறைய முறைகேடுகள் அம்பலத்துக்கு வருமுங்க...'' என்ற அந்தோணிசாமி, ''வாங்க வரதராஜன்... உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்...'' என, எதிரில் வந்த நண்பருடன் பேசியபடியே கிளம்ப, மற்றவர்கள் அரட்டை தொடர்ந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement