Advertisement

இது உங்கள் இடம்

இரட்டை கொள்கையாக இருக்க கூடாது!ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: பிளாஸ்டிக் ஷீட்டுகளால் தயாரிக்கப்படும் பைகளை, உபயோகித்த பின், துாக்கி எறிவதால், அவை பன்னெடுங்காலம் மக்காமல் பூமியில் புதையுண்டு விடுகின்றன. மழை நீர் போன்ற நீர் சேமிப்பு ஆதாரங்களை,
பூமிக்குள் நுழைய விடாமல், இவை தடுத்து விடுகின்றன.சுற்றுச்சூழல் மாசுபட பிரதான காரணமாக உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், பிளாஸ்டிக் கவர்களை உபயோகிக்க, அரசு தடை விதித்துள்ளது. மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, பல வகையிலும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.தனியார் தொண்டு நிறுவன அமைப்புகளும், இதற்காக பாடுபட்டு வருகின்றன. இப்படிப்பட்ட பல்வேறு முயற்சிகள் ஒருபுறமிருக்க, அரசியல் மற்றும் தனியார் விசேஷ வைபவங்களுக்கும், விளம்பரப் பலகையாகவும், அதிகளவில் பிளக்ஸ் போர்டுகள் உபயோகிக்கப்படுகின்றன.
இதன் வாயிலாக, இரண்டொரு நாட்கள் உபயோகிக்கப்பட்ட பின், போர்டுகளின் மீதான பிளாஸ்டிக் ஷீட்டுகள் கிழித்தெரியப்பட்டு, குப்பையில் கொட்டப்படுகின்றன.இதனால், மக்காத குப்பையாக இவை சமீப காலமாக, டன் கணக்கில் ஒவ்வொரு ஊரிலும், பெரு நகரங்களிலும் சேர துவங்கியுள்ளன.பிளாஸ்டிக் ஷீட், பைகள் உபயோகத்தை தடை செய்தது போல், அனைத்து விதமான பிளாஸ்டிக் ஷீட் பிளக்ஸ் போர்டுகளையும், ஒட்டுமொத்தமாக அரசு தடை செய்ய வேண்டும். இதன் மூலம் இயற்கை வளம் பெருக உதவியாக
இருக்கும்.இவ்விஷயத்தில், அரசின் அணுகுமுறை இரட்டைக் கொள்கையாக இருக்கக் கூடாது!


மோசமாகசித்தரிக்காமல்இருங்களேன்!


எல்.விஜயராகவன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சினிமாவில் தோன்றும் கதாநாயகனை, பொறுக்கியாகவோ, தாதாவாகவோ, திருடனாகவோ, வேலை வெட்டியில்லாத, படிக்காத ஊர் சுற்றியாகவோ காட்டுவர்.காதலியை ஏற்க வைப்பது போல் நாயகன் நடிப்பான்; இப்படி தான் பல படங்களில் காட்சிகள் காட்டப்படுகின்றன!அதைப் பார்த்து, எதிர்மறை தகுதி மட்டுமே உள்ள இளைஞர்கள், அப்பாவி பெண்களை ஒருதலையாக காதலிக்க துவங்குகின்றனர்.தன் காதலை ஏதோ ஒரு காரணத்துக்காக ஏற்காவிட்டால், அரிவாள் வெட்டோ, கத்திக்குத்தோ, அப்பெண்ணுக்கு விழுகிறது. சில நேரங்களில், காதலை ஏற்க மறுக்கும் பெண், கொலையும்
செய்யப்படுகிறாள்.அதற்கு உதாரணம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டாள்.சமீபத்தில், தன்னைக் காதலிக்க மறுத்த, இந்துஜா என்ற பெண்ணை, அவருடன் பழகியவன், ஈவு இரக்கமின்றி, தீ வைத்துக் கொளுத்திக் கொலை செய்து
இருக்கிறான்.காதலிக்க மறுக்கும் பெண்களைக் கொல்லும் பழக்கம், வேகமாக அதிகரித்து வருகிறது.கொலைகாரன் மீது நடவடிக்கை எடுக்க துவங் கினால், ஜாதி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மனித உரிமைக்காரர்களும் உடனே வரிந்து கட்டி வருகின்றனர்.கொலையாளிக்குக் கிடைக்கும் மனித உரிமை, ஒன்றும் அறியாத பெண்ணுக்கு மறுக்கப்படுகிறதே என்ற அடிப்படை கூட, அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவில்லை.
கொலையாளியின் செயலை நியாயப்படுத்த, அவர்கள் விதவிதமாக விவாதங்கள் நடத்துவர்; அறிக்கைகள் விடுவர்; பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் விடுவர்!குற்றவாளி சிக்காமல் பாதுகாக்க, சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன. வழக்கு, விசாரணை, தீர்ப்பு, அப்பீல் என, ஆண்டுக் கணக்கில் விவகாரம் நீண்டு போவதால், இப்படிப்பட்ட ஆண்கள், கொலை செய்ய அஞ்சுவதே இல்லை.பெண்கள் மீது இப்படி வன்கொடுமை புரிவோரை, விசாரித்து தீர்ப்பளிக்க தனி நீதிமன்றங்கள் தேவை. திரைப்படங்களும், பெண்களை இன்னும் மோசமாக சித்தரிக்காமல் இருந்தால் சாலச்சிறந்தது!

திராவிட கலாசாரம்துளிர் விடுகிறதா?


எஸ்.காதர்பாட்ஷா, பேகம்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: வட மாநில அரசியல் தலைவர்கள், கருத்தால் வேறுபட்டிருந்தாலும், பொது இடங்களில் கட்டித் தழுவி நட்பு பாராட்டுவர்.அங்கு, தற்போது அநாகரிக அரசியல் தலைதுாக்கத் துவங்கி உள்ளது.தமிழகத்தில், 1967ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இரட்டை அர்த்தத்தில், சிலேடை வசனங்கள் பரவலாயின.ஆபாச வார்த்தைகளுக்கு, மசால் தடவி பேசுவதில், கழக பேச்சாளர்கள் கில்லாடிகளாக வளர்ந்தனர். ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., செயல்பட்ட போது, அரசியல் நாகரிகம் அறவே இல்லாமல் போனது!அதே நிலை இன்று, வடமாநிலங்களுக்கு தொற்றியுள்ளது.பினாமி சொத்து தொடர்பாக, பீஹார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி, ரப்ரி தேவி, அவர்களது மகன், தேஜஸ்வி யாதவ் மற்றும் குடும்பத்தினரிடம், மத்திய அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்கு ஆஜராகும்படி, ரப்ரி தேவிக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ரப்ரிதேவி, பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.'பிரதமரை யாராவது கை நீட்டி விமர்சனம் செய்தால், பா.ஜ., தொண்டர்கள் அவர்களது விரல்களை முறிக்க வேண்டும்; கைகளை வெட்ட வேண்டும்' என, அம்மாநில, பா.ஜ., தலைவர் ஆவேசமாக பேசினார்.இதற்கு, ராஷ்ட்ரீய ஜனதா தள தேசிய செயற்குழுவில் பதில் அளித்த, ரப்ரி தேவி, 'தைரியம் இருந்தால் பீஹார் மக்களின் கைகளை வெட்டிப் பாருங்கள். அவர்கள் மோடியின் கழுத்தை அறுப்பர்; கைகளையும் வெட்டுவர்' என, பேசியுள்ளார்.பா.ஜ., தலைவர் பேசியது தவறு; அதை விட அநாகரிகம், காட்டுமிராண்டித்தனம், ரப்ரிதேவி பேச்சு.ஒட்டு மொத்த பீஹார் மக்கள் என்ன, ரப்ரி தேவியின் அடியாட்களா... அராஜக ஆட்சி நடத்தியதால் தானே, லாலுவையும், ரப்ரி தேவியையும் பீஹார் மக்கள் வீட்டுக்கு அனுப்பினர்!
பா.ஜ.,வினரும், பதவி இறுமாப்பில் பேசக் கூடாது; பதவி பறி போன ஆத்திரத்தில், ரப்ரி தேவியும் வன்முறையை துாண்டும் விதத்தில் பேசக் கூடாது.இவர்கள் பேச்சால், திராவிட கலாசாரம், கொஞ்சம் கொஞ்சமாக, வடமாநிலங்களிலும் துளிர்விட துவங்கியுள்ளதோ என, எண்ணத் தோன்றுகிறது!lll

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement