Advertisement

அக்கம் பக்கம்

அடுத்த முதல்வர்?


'அடடா, அரசியல்வாதி மனைவிக்கு இவ்வளவு திறமையா...' என, மஹாராஷ்டிர முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, தேவேந்திர பட்னவிசின் மனைவி, அம்ருதாவை, ஆச்சரியமாக பார்க்கின்றனர், சக அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பத்தினரும்.
அம்ருதா, முறைப்படி சங்கீதம் கற்றவர். முக்கிய நிகழ்ச்சிகளில் கணவருடன் பங்கேற்கும் போதெல்லாம், 'இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில், அம்ருதாவை பாட அழைக்கிறோம்' என, தொகுப்பாளர்கள் அறிவிப்பது வழக்கம்.அம்ருதாவும், பந்தா எதுவும் காட்டாமல், மேடைக்குச் சென்று, அழகாக, ஒரு பாடலை பாடி, கைதட்டல் வாங்கி, விறுவிறுவென இறங்கிச் சென்று விடுவார்.சமீபத்தில், மும்பையில் நடந்த விழாவில், பிரபல நடிகர்கள், வி.வி.ஐ.பி.,க்கள் பங்கேற்றனர். கணவருடன் சென்றிருந்த அம்ருதா, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார்.விழா தொகுப்பாளர், திடீரென அம்ருதாவை மேடைக்கு அழைத்து, 'நம் முதல்வரின் மனைவிக்கு பாட மட்டுமல்ல; ஆடவும் தெரியும்; இப்போது கலக்கலாக ஒரு குத்தாட்டம் போடுவார்' என, அதிரடியாக அறிவித்தார்.இதை கேட்டு திகைத்துப் போனார், அம்ருதா. ஆனாலும், அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல், மேடைக்கு சென்ற அவர், அசத்தலாக ஓர் ஆட்டம் போட்டார். பார்வையாளர்கள் வரிசையில், கைதட்டல் காதை பிளந்தது.இதை பார்த்த, காங்கிரசார் சிலர், 'பட்னவிசை விட, அவரது மனைவிக்கு தான், மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளது. பேசாமல், பட்னவிசுக்கு பதிலாக, அவரது மனைவியை முதல்வராக்கி விடலாம் போலிருக்கிறது' என, கிண்டலடிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement