Advertisement

டீ கடை பெஞ்ச்

கால்நடை டாக்டர்கள் இடமாறுதலுக்கு, 'கறவை'


''குஜராத் பிரசாரத்துக்கு, 50 பேர் பட்டியல் தயாராயிட்டு இருக்கு பா...'' என, இஞ்சி டீயை ருசித்தபடியே, பேச ஆரம்பித்தார் அன்வர்பாய்.''நம்ம ஊர்ல இருந்து, எந்த கட்சியினர் போகப் போறாங்க...'' என, கேட்டார் அந்தோணிசாமி.
''குஜராத்துல, சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடிச்சிடுச்சு... அங்கே, தமிழர்கள் நிறைய பேர் குடியிருக்காங்க... அந்த பகுதியில, காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்றதுக்காக, தமிழக காங்கிரஸ்ல இருந்து, ௫௦ பேர் பட்டியல் தயாராயிட்டு இருக்கு பா...
''இவங்க, டிசம்பர் 8ம் தேதி, விமானத்துல ஆமதாபாத் போறாங்க... அங்க, மூணு நாள் தங்கி, தமிழர்கள் வசிக்குற ஏரியாவுல, கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்ய போறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
''ஒரு பதவிக்கு, அஞ்சு பேரு முட்டி, மோதுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''கிருஷ்ணகிரி, எஸ்.பி.,யாக இருக்குறவர் மகேஷ்குமார்... இவரை மாத்த போறதா, போலீஸ் வட்டாரங்கள்ல தகவல் உலா வருது... தமிழக - கர்நாடகா எல்லையில இருக்கிற இந்த பகுதியில, 'வரும்படி'க்கு பஞ்சம் இருக்காது வே...
''இந்த ஊர், எஸ்.பி., பதவியை பிடிக்க நிறைய பேர் போட்டி போடுதாவ... நாமக்கல் மாவட்ட, எஸ்.பி., அருள் அரசு, கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவருங்கிறதால, செங்கோட்டையன் மூலமா, முதல்வரையே பார்த்துட்டாரு வே...
''அதே மாதிரி, தர்மபுரி, எஸ்.பி., பண்டி கங்காதர், தன் குழந்தைக்கு, பெங்களூருல, 'ட்ரீட்மென்ட்' எடுக்குறதால, கிருஷ்ணகிரி, எஸ்.பி., பதவியை விரும்புதாரு...
''சேலம் மாநகர சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனர் சுப்புலட்சுமியும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் மூலமா, முயற்சி பண்ணுறாங்க...
''இது போக, சென்னையில இருக்கிற ரெண்டு அதிகாரிகள்னு, அஞ்சு பேர், ஒரு பதவிக்கு போட்டி போடுதாவ... இதுல, நாமக்கல், எஸ்.பி.,க்கு வாய்ப்பு அதிகம்னு சொல்லுதாவ வே...'' என, முடித்தார்
அண்ணாச்சி.''இடமாற்றத்துக்கு, அஞ்சுல இருந்து, ஒன்பது லட்சம் ரூபாய் வரை கறந்துடுறாங்க...'' என, கடைசி தகவலை கையில் எடுத்தார் அந்தோணிசாமி.
''எந்த துறையில ஓய்...'' என விசாரித்தார் குப்பண்ணா.
''கால்நடை துறையில தான்... திருவள்ளூர் மாவட்டத்துல வேலை பார்க்குற கால்நடை டாக்டர்கள் சிலர், சொந்த மாவட்டத்துக்கு மாறுதல் கேட்டு, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசோட போறாங்க பா...
''இதுக்கு, ஏரியாவை பொறுத்து, அஞ்சுல இருந்து, ஒன்பது லட்சம் ரூபாய் வரைக்கும் கைமாறுது... இதுல, துறையின் மேலிடத்துக்கு பாதியும், பரிந்துரை செய்றவங்களுக்கு பாதியுமா, பங்கு பிரிச்சிக்குறாங்க பா...'' என, முடித்தார்
அந்தோணிசாமி.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச்காலியானது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement