Advertisement

இது உங்கள் இடம்

சமச்சீர் கல்வி திட்டம் தோல்வி ஏன்?


ஆர்.கே.செந்தில்குமார், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை ஆய்விற்கு எடுக்கும் முன், சமச்சீர் கல்வி திட்டத்தின் தோல்வி குறித்து, ஆய்வு எடுத்தல் நல்லது!'சிங்கப்பூர், அமெரிக்கா, பின்லாந்து போன்ற நாடுகளின் பாடத் திட்டத்தை ஆராய்ந்து, புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என, திட்டக் குழு தலைவர், அனந்தகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.இந்த கல்விமுறை வெற்றி பெற வேண்டுமென்றால், பொறியியல் கல்விக்கும், இனிமேல் நுழைவுத் தேர்வு என, சட்டம் வர வேண்டும். அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்விமுறை அதிகரிக்கப்பட வேண்டும்.பாடங்கள் அனைத்தும், 'ஸ்மார்ட்' கிளாஸ்' எனப்படும், கணினி வழி முறையில் நடத்தப்பட வேண்டும். பாடத் திட்டத்தின் நோக்கு அறிந்து, மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பாடங்களை கற்பிக்க வேண்டும்.முக்கியமாக, இப்பாடத் திட்டத்தின் நோக்கம், 'நீட்' தேர்வின் மூலம், மருத்துவ கல்வி பெறுவதோ அல்லது பொறியியல் கல்லுாரிகளில் இடம் பெறுவதோ அல்ல!ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள், பிளஸ் 2 வகுப்பை முடித்து வெளி வருகின்றனர். அவர்களில், 3,000 மாணவர்கள் மட்டுமே மருத்துவம் சேர முடியும்.மாணவர்கள் அனைவரும், பல்வேறு துறைகளிலும் சாதிக்க, புதிய பாடத்திட்டம் அமைய வேண்டும். முக்கியமாக, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், பங்களிப்பும் மிக முக்கியம்!தி.மு.க., ஆட்சி காலத்தில், தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்ட பாடத் திட்டம், அதன் சிறப்பம்சம்.கண்ணைக் கவரும் வண்ண படங்களுடன், விளக்கமான பாடங்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் கலந்தாய்வு மற்றும் செய்முறை வைக்கப்பட்டன.மனப்பாட கல்வி முறையை ஒழிக்க, 60 சதவீதம் புத்தக கல்விக்கும், 40 சதவீதம் செயல்வழி கல்விக்கும் மதிப்பெண் தரப்பட்டது. இதனால் தான், இத்திட்டம் தோல்வியை தழுவ ஆரம்பித்தது.துவக்கத்தில் ஆர்வத்துடன் பாடம் நடத்த ஆரம்பித்த ஆசிரியர்கள், பின், செயல்முறை பாடத் திட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். அனைத்து மாணவர்களும், செயல்முறை கல்வி செய்கின்றனரோ, இல்லையோ முழுமையாக, ௪௦ சதவீத மதிப்பெண் வழங்கப்பட்டது.அதன் விளைவாக அனைவரும் தேர்ச்சி பெற்று, 490 மதிப்பெண்களை கூட சர்வசாதாரணமாக எடுத்தனர். இவர்கள் கல்லுாரிகளில் மிகவும் தடுமாறுகின்றனர்.மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு, மதிப்பெண் அடிப்படையிலே நுழைவுத் தேர்வு நடந்ததால், செயல்வழி கல்வி முறையை பள்ளிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டன.'நீட்' நுழைவு தேர்வு கட்டாயம் என்ற சட்டம் வந்தவுடன் தான், அரசு கண் விழித்து, சுறுசுறுப்பாய் கல்வித் துறையை மீண்டும் சீரமைக்க நினைக்கிறது. அதற்கு, 'சபாஷ்' போடலாம்!

ரசிகர்கள் தலையில்மிளகாய் அரைக்கபார்க்கின்றனர்!


ஆர்.சந்தானம், போஸ்ட் மாஸ்டர் (பணி நிறைவு), கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தின் முன்னணி சினிமா நடிகர்களான ரஜினி, கமல்ஹாசன், விஜய் ஆகியோருக்கென்று, தனித் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அவர்களின் பலத்தை நம்பித் தான், அவர்களுக்கும் தமிழக அரசியலில் சங்கமம் ஆகும் எண்ணம், சமீபத்தில் தலையெடுக்க துவங்கியுள்ளது.நடிகர்களின் ஆசை நியாயமானது தான்; ஆனாலும், சினிமாவால் மட்டும் கிடைத்த புகழையும், அவரவர்களுக்கென கிடைத்த ரசிகர்களின் பலத்தையும் பயன்படுத்தி, எக்காலத்திலும் அவர்களில் யாருமே, அரசியலில் மிளிர முடியாது.அரசியலுக்கென்று அனுபவ முத்திரைகள், அவர்களில் யாருக்குமே கிடையாது. மக்களின் பலம், பலவீனம் அறிந்து, அரசியலில் ஈடுபட வேண்டும்.இன்றைய கலாசார அரசியலுக்கு கோடிக்கணக்கான முதலீடு தேவை. அப்படி முதலீடு செய்ய, மேற்சொன்ன நடிகர்களிடம் பொருளாதாரம் இருந்தாலும் கூட, எங்கே நம் பொருளாதாரம், அரசியலால் பறிபோய் விடுமோ என்ற பயம், அவர்களிடம் நிறையவே
பதிந்துள்ளது.'நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம்' என்ற பழமொழிக்கேற்ப, ரசிகர் பட்டாளத்தின் தலையில், பொருளாதாரத்தை சுமத்த, புத்திசாலித்தனமாக யோசிக்கின்றனர்.தமிழக அரசியலில் ஒருமுறை தோற்றாலும், மறுமுறை வென்று காட்ட, தி.மு.க.,விடம் இருந்த பொருளாதாரம் தான், அவர்களுக்கு கை
கொடுத்தது.போதுமான பொருளாதாரம் இல்லாமையால் தான், அரசியல் அனுபவம் பல பெற்றும், பலராலும் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை!

வாய்க்காலைமறித்தால் இனிவாழ முடியாது!


புலவர் சுப்பு லட்சுமணன், மாவட்ட கல்வி அலுவலர் (பணி நிறைவு), பீர்க்கன்காரணை, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னையில், 2015 நவ., 4ல் பெய்த கனமழையின் போது, மேற்கு தாம்பரம் பகுதி நீரில் மூழ்கியது.படகு, மரப்பலகை மிதவை மூலம் பலரை காப்பாற்றினர், சமூக ஆர்வலர்கள். நீர்வழித் தடம், கால்வாய்கள் சரிவர அமைக்கப்படாததால், பெருவெள்ளம் ஏற்பட்டது.கால்வாய், பெருநீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியதால், தாம்பரம் மழை வெள்ளத்திற்கு தாக்குப்பிடிக்கவில்லை.முடிச்சூர் சாலை, பாரதி நகரில் உள்ள, 20 அடி கால்வாய் வழியே தான் இப்பகுதி மழை நீர் சென்று, அனகாபுத்துார் அருகே அடையாற்றில் கலக்க வேண்டும்.
கால்வாய் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு, 3 அடி கால்வாயாக மாறியது. இதில், 31 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அப்போதைய, கலெக்டர் சுந்தரவல்லி, ஆக்கிரமிப்புகளை எல்லாம் துணிச்சலாக அகற்றி, கால்வாயை மீட்டு தந்தார்.ஓராண்டிற்குள், மீண்டும் ஆக்கிரமிப்பால், கால்வாய் சுருங்கியது. 2016ல் எந்தப் பணியையும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.தடுப்பணை கால்வாய்கள் சீரமைப்பு என்ற பெயரில், நீர்நிலைகள் அனைத்தும் சீரழிக்கப்பட்டு விட்டன. 2017, அக்., 30ல் பெய்த ஒரு நாள் மழைக்கே இப்பகுதிகள் எல்லாம் நீரில் மூழ்கிவிட்டன.
'பழைய குருடி, கதவைத் திறடி' என்ற கதை தான் நினைவுக்கு வருகிறது!கடந்த, 2016ல் ஒதுக்கப்பட்ட வெள்ள நிதி, 2017 மழையில் கரைந்து விட்டது. இனி, 2018ல் ஒதுக்கப்பட உள்ள நிதி, 2019 லோக்சபா தேர்தலில் கரைந்து விடும்... ஆக வெள்ள இடர்பாடுகள் தொடர்கதை தான்!

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • kalidass - Chennai ,இந்தியா

  போ.காளிதாஸ். கே.கே. நகர் சென்னையிலிருந்து எழுதுகின்றேன் தலைப்பு ,,"ரஜினி காந்த் அரசியல் கவருமா...மக்களை...? தற்போதைய அரசியல் அதிரடி மாற்றம் மத்தியில் ரஜினி காந்த் அவர்களின் வியூகம் தற்போது பரபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில் சூப்பர் ஸ்டார் அவர்கள் சில. விளக்கங்கள் தந்தால் மக்கள் மத்தியில் அவர் மீது அதீத மிதப்பு ஏற்பட கூடுதல் வாய்பாகும். அரசியல் சிஸ்டமும்,ஜனநாயகம் கெட்டுவிட்டாதாய் கூறுகீறீர்கள்.உண்மையானது. ஆனால் நீங்கள் ஆரம்பிக்கும் கட்சியில் இதையெல்லாம் எப்படி ஒழிப்பீர்கள். முதலில் மக்கள் மத்தியில் லஞ்சத்தை ஒழிக்க உங்கள் ஆட்சியால் எந்தமதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்.என்பதை கட்சியின் பெயர் அறிவிக்கும்போதே தெரிவிக்க முடியுமா...? உங்கள் கட்சியில் படித்த இளைஞர்களுக்கும், ரசிகர் மன்றம் சாராத ஆட்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பீர்களா...இல்லை வேறு கட்சியிலிருந்து தங்களது கட்சியில் இணையும் பழைய அரசியல்வாதிகளுக்கு இடமளிப்பீரா..? மேலும் உங்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜயகாந்த் கட்சி அரங்கேறிய அசிங்கத்தை இவர்களும் செய்ய மாட்டார்கள் என்பதை உறுதிசெய்வீர்களா.? தற்போதைய அரசியலில் பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் அரசியல் அடாவடி ஆட்களை தேர்தல் களத்தில் எப்படி சமாளிப்பீர்கள்.அவர்களது மீது உங்களது நடவடிக்கை எவ்வாறு இருக்கும். உங்கள் கட்சி வேட்பாளர் தற்போது இருக்கும் பண முதலைகளின் தூண்டும் பணத்தாசைக்கு மயங்கி தங்களை அவதூறாக பேசும் வாய்ப்பு ஏற்பட்டால் இதற்கு தங்களின் பதில் என்னவாக இருக்கும் ஏனென்றால் தற்போதய தமிழகத்தில் சரியான. மாற்று தலைவரும் சரியான கட்சி இல்லாததால் மக்கள் ராமன் ஆண்டாள் என்ன? இராவணண் ஆண்டாள் என்ன? என்ற. முடிவில் கண்டவர்களிடம் கையேந்தி இன்று ஜனநாயகத்தை கொன்று யாரை நம்புவதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.தமிழகத்திற்கு மாற்று சக்தியாக நீங்கள் வர எண்ணுவதால் ..."உன்னை தூய்மை கொள்..உலகம் உன்னால் தூய்மையாகும்..."என்ற வள்ளலாரின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடுக்கு மாற்று சக்தியாகவும் தமிழகத்தின் சரித்திரம் படைக்கும் தலைவனாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நிலை நிறுத்திக்கொள்ள முயலுவாரா....? -- போ.காளிதாஸ் 21,சேக்கீழார் 2வது தெரு எம்.ஜி.ஆர். நகர் சென்னை..600078 Mobile :8438366458 ,

 • Udhaikumar - Chennai,இந்தியா

  இது உங்கள் இடம் பகுதிக்கு.. தாம்பரத்திலிருந்து உதயகுமார். தமிழகத்தில் உள்ள அனைத்து மணல்குவாரிகளையும் இன்னும் ஆறே மாதத்தில் இழுத்துமூட மதுரை உயர்நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்துள்ளது. சபாஷ், சரியான தீர்ப்பு. எத்தனை ஆயிரம் டன் மணல் வேண்டுமானாலும் இனி வெளிநாட்டில் இருந்து முறையாக இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என பச்சைக்கொடி காட்டியுள்ளது. நல்ல ஆரோக்கியமான விஷயம். எதிர்கால சந்ததியினரைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பினால் பலவருடங் களாக ஒரு ஆற்றைக்கூட விடாமல் மணைலைச்சுரண்டிக் கொழுத்த அரசியல்வாதிகளுக்கும், மணல் மாஃபியா கும்பலுக்கும் இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் கிரானைட் வெட்டி எடுப்பதையும் 6 மாதத்தில் நிறுத்திவிட வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தஞ்சையில் நடைபெற்றுவரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மணல்குவாரிகளை மூடிவிட்டால் தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். இந்த அதிரடி தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசோ, மணல் மாஃபியா கும்பலோ மேல்முறையீடு செய்தால் அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும். கோடிக்கணக்கில் சுருட்டி ருசி கண்ட அரசியல் வாதிகள், மணல் மாஃபியா கும்பல்கள் எப்படியாவது மீண்டும் ஆறுகளில் மணலை எடுக்க நீதிமன்றத்தில் போராடுவார்கள். நீதிமன்றங்கள் பல வழக்குகளில் நல்ல தீர்ப்பினை வழங்கினாலும் அரசாங்கங்கள், மற்றும் அரசியல்வாதிகளின் பண பலம் அதிகார பலம் ஆகியவைகளினால் தீர்ப்புகள் மாற்றியமைக்கப் படுவது வேதனையான விஷயம். இந்த வழக்கிலாவது நீதிபதிகள், நீதிமன்றங்கள், மணல் மாஃபியா கும்பல், அல்லது தமிழக அரசின் சார்பில் செய்யப்படும் மேல்முறையீட்டின் போது மதுரைக்கிளையின் தீர்ப்பே இறுதியானது என்பதை உறுதிசெய்யவேண்டும்.. செய்தால் வருங்கால சந்ததியினருக்கு நல்லது.. இப்படியே போய்க்கொண்டிருந்தால் நாட்டில் அடுத்த சந்ததியினர் வாழவே தகுதியில்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்துவிடும்..

 • C Selvaraj - Madurai,இந்தியா

  அண்மையில் மதுரையில் துப்புரவூ பணியாளர்கள் யாரும் சரிவர குப்பைகளை அகற்றுவதில்லை..எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவித்த வண்ணம் உள்ளன.இதனை சரி செய்ய வேண்டுமாயின் ,குப்பைகளை நேரடியாக தொட்டியில் கொட்டாமல் அதனை ஒரு காகித பையில் வைத்து பின் அதனை தொட்டியில் போடலாம். இதனால் குப்பைகள் சிதறுவதை தவிர்க்கலாம். இதனை தவிர்க்கும் பொருட்டு ஒரு பணியாளரை ஒரு வார காலத்திற்கு தொட்டியின் அருகில் நின்று குடியிருப்போருக்கு அறிவூறுத்தலாம். மக்கள் புரிந்து கொள்வார்கள்.அனைவரும் சற்று யோசிக்கலாமே...

 • Udhaikumar - Chennai,இந்தியா

  வாய்க்காலை மறித்தால் இனி வாழ முடியாது எனும் தலைப்பில் உங்கள் இடம் பகுதியில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி எழுதியதில், கடந்த மழை வெள்ளத்தின்போது முடிச்சூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றியது அப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கெஜலட்சுமி அவர்கள். சுந்தரவல்லி அல்ல..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement