Advertisement

காந்திமதி என்கின்ற மதுரை அன்னபூரணி.


காந்திமதி என்கின்ற மதுரை அன்னபூரணி.

பசியால் பஞ்சடைந்த கண்கள் என்ற வார்த்தைக்கு உருவம் கொடுக்கும் வகையில் ஐம்பது பேர் அங்கே திரண்டு இருந்தனர்.

எண்ணெய் காணாத தலையும் எப்போதே வெள்ளையாய் இருந்த வேட்டியும்,கிழிசல் சட்டையுமே அவர்களது எழ்மையையும் இயலாமையையும் வெளிச்சம் போட்டு காட்டியது.

இவர்கள் கூடியிருந்த இடம் மதுரை கீழமாசி வீதி டெலிபோன் எக்சேஞ்ச் நிலையம் அருகில் உள்ள நடைபாதையில், நேரம் பகல் 10 மணி.

அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த மூன்று சக்கரை சைக்கிளும் வந்தது .சாப்பாடு சுமந்து வந்த அந்த சைக்கிள் ஒரு வயதான மூதாட்டியையும் சுமந்துவந்தது.

அந்த மூதாட்டிதான் இந்த கட்டுரையின் நாயகி காந்திமதி

சாதம், சாம்பார், வெண்டைக்காய் கூட்டு, காரபூந்தி, மோர் எல்லாம் அதனதன் இடத்தில் இறக்கிவைக்கப்பட்டதும், 'எல்லோரும் அமைதியா உட்காருங்க' என்கிறார் காந்திமதி.அவரது வார்த்தைக்காக காத்திருந்தது போல சிதிலமடைந்த அந்த பிளாட்பாரத்தில் இடம் பிடித்து இரண்டு வரிசைகளில் உட்காருகின்றனர்.

அனைவருக்கும் வாழை இலை போடப்பட்டு அதில் சாப்பாடு பரிமாறப்படுகிறது.'சாப்பிடுறதுக்கு முன்னாடி எல்லோரும் நம் வள்ளலார் சாமிய கும்பிட்டுக்குங்க' என்கிறார்,'இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் உணவு கிடைக்கவேண்டும் எல்லோரும் பகிர்ந்துண்டு நலமாய் வாழ திருவருளும் குருவருளும் துணை நிற்கவேண்டும்' என்ற வார்த்தையோடு பிரார்த்தனையை முடிக்கிறார்.

கும்பிட்டு முடிந்ததும் சாப்பிட ஆரம்பிக்கின்றனர்.சாதம், சாம்பார், கூட்டு எல்லாம் வரிசைகட்டி செல்கிறது.காசு இருப்பவருக்கு பசி இருக்காது பசி இருப்பவரிடம் காசு இருக்காது என்பார்கள் அங்கே அமர்ந்திருந்தவர்கள் அனைவருமே பசியோடு இருந்தனர் என்பது சாப்பாடை சாப்பிடும் விதத்திலேயே தெரிந்தது,அவர்களில் பலருக்கு ஒரு நாளைக்கு இந்த ஒரு வேளைதான் உணவு போலும்.

இலை நிறைய சாப்பாடை வாங்கி அதில் குளம்கட்டி சாம்பாரை ஊற்றச்சொல்லி ஒரு பருக்கை விடாமல் அவர்கள் சாப்பிடுவதை ரசித்து பார்க்கும் காந்திமதி கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவர்கள் போதும் என்கிறவரை சாப்பாடு போடுகிறார்.வயிறார சாப்பிட்டுவிட்டு நன்றியை கைகளாலும், கண்களாலும் காந்திமதியிடம் காட்டிவிட்டு செல்கின்றனர்.

அடுத்த பந்தி ஆரம்பிப்பதற்குள் யார் இந்த காந்திமதி என்பதை பார்த்துவிடலாம்.

மதுரை செல்லுரைச் சேர்ந்தவர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் இரண்டாவது வரை மட்டுமே படித்தவர். திருப்பாச்சேத்தி கிராமத்திற்கு வாக்கப்பட்டு சென்றவருக்கு கணவரால் கொடுக்க முடிந்தது நான்கு குழந்தைகளை மட்டுமே.

மதுரைக்கு இடம் பெயர்ந்தவர் வீட்டு வேலை உள்ளீட்ட எந்த வேலை கிடைத்தாலும் பார்த்தார் பிள்ளைகளை வளர்த்தார் தன் சக்திக்கு ஏற்ப அனைவருக்கும் திருமணம் முடித்து வாழ வழிகாட்டிவிட்டார்.

வயதான காலத்தில் வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க இயக்கம் இவருக்கு ஆறுதல் தர அடிக்கடி அங்கே செல்ல ஆரம்பித்தார்.

அங்கே அறிமுகமானவர்தான் அன்பானந்தம்.அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்திலேயே தர்மசாலை வைத்து நடத்தியவர்.நாள்தவறாமல் நன்கொடையாளர்கள் சில பேரை பார்த்து அரிசி பருப்பு வாங்கி வந்து சமைத்து பலருக்கும் சாப்பாடு போட்டுக்கொண்டு இருந்தார்.

இவரிடம் சம்பளம் விரும்பாத சமையல் தொழிலாளியாக சேர்ந்தார், பசிப்பிணி தீர்க்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.

நான்கு வருடத்திற்கு முன்பாக அன்பானந்தம் இறந்துவிட்டார், அவர் ஆரம்பித்த அன்னதான இயக்கத்தை யார் எடுத்து நடத்துவது என்ற கேள்வி வந்த போது யாரும் முன்வராத நிலையில் வள்ளலார் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையுடன் காந்திமதி தானே நடத்துவது என முடிவு செய்தார்.

தன் வழிகாட்டி அன்பானந்தம் போலவே அன்னதானத்திற்கு அரிசி பருப்பு காய்கறி தானமாக கேட்டு செல்வார், முதல் நாள் மாலை என்ன கிடைக்கிறதோ அதை வைத்து மறுநாள் சமைத்து போட ஆரம்பித்தார்.

ஊனமுற்றோர், உழைத்து பிழைக்க முடியாதோர், மன நோயாளிகள், பிச்சை கிடைக்காதோர் போன்றவர்கள் வயிறார ஒரு வேளை சாப்பாடு சாப்பிடட்டும் என்றுதான் ஆரம்பித்தார் ஆனால் இவரது சாப்பாட்டின் ருசியும், பசியும் இந்த பகுதியில் உள்ள மூடை துாக்கும் தொழிலாளர்களையும் ஈர்க்க இருபது பேர் முப்பது பேர் என்று கூடிக்கொண்டே போய் இன்றைய தேதிக்கு தினமும் எழுபது பேர் வரை சாப்பிடுகின்றனர்.

அதிகாலை எழுந்து முதல் நாள் கிடைத்த அரிசி பருப்பு காய்கறி போன்றவைகளை வைத்து ஒரு தவம் போல சாப்பாடு தயார் செய்து இங்கே கொண்டு வந்து போடுவதை பார்த்த பலரும் இப்போது காந்திமதி கேட்காமலே 'இந்த தாயி இந்த மாதம் என் பங்குக்கு இரண்டு மூட்டை அரிசி' என்ற ரீதியில் நன்கொடையாக கொடுத்து வருகின்றனர்.

மேலும் தங்கள் பிறந்த நாள், திருமண நாளன்று அன்றைய அன்னதான செலவை ஏற்றுக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட நாட்களில் அப்பளம் வடை பாயசம் என்றெல்லாம் அன்னதானத்தில் துாள் பறக்கும். சில நாள் எதுவும் கிடைக்காத போது அரிசி காய்கறிகளை கலந்து கலவை சாதமாக போட்டுவிடுவார், எப்படியும் தன்னை நம்பி வந்தவர்களை பட்டினி மட்டும் போடமாட்டார்.

அன்பானந்தம் அய்யா இருக்கிற வரைக்கும் அவருக்குப் பிறகு இதை நான் எடுத்துச் செய்வேன்னு நினைச்சுக் கூட பாத்ததில்லை. அந்த அருட்பெருஞ்சோதி என்னை இந்த வேலையில இறக்கி விட்டுட்டாரு. எனக்கு எழுபது வயசாகப்போகுது, வயசுக்கு ஏத்தமாதிரி கால் வலியில இருந்து தோள் வலி வரை எல்லா பிரச்னையும் இருக்குது ஆனால் 'சாப்பிட மக்கள் வந்துருவேங்களே' என்ற நினைப்பு எல்லா வலிகளையும் மறக்கடித்து என்னை அதி காலையில் எழுப்பிவிட்டுரும் அதற்கு பிறகு எல்லாம் வழக்கம் போலத்தான்,எனக்குப் பிறகு யாரு இதைச் செய்றதுன்னு வள்ளலார் சாமி தீர்மானிச்சு வச்சிருப்பாங்க. பசியோட இந்த இடத்திற்கு ஒரு ஜீவன் வரும்வரை கண்டிப்பா இது தலை தலைமுறைக்கும் தொடருணும் என்கிறார்.

அவரிடம் பேசுவதற்கான எண்:9442024423.(பேசுவதற்கு முன் படிப்பறிவு இல்லாத வெள்ளந்தியான ஒரு மூதாட்டியிடம் பேசுகிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம், பெரும்பாலும் மாலை 6 மணியில் இருந்து 8 மணிவரை அவருடன் பேசுவதற்கு உகந்த நேரம்,நன்றி!)

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement