Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை


'கோர்ட் உத்தரவுன்னு ஒண்ணு இருக்கே... மறந்துட்டீங்களா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி:
அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்த மறுநாளே, ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில், பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இது குறித்து ஒவ்வொருவரும், பல்வேறு யூகங்களை கூறி வருகின்றனர். இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க முடியவில்லை. வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவது அங்கீகரிக்கப்படாத ஒன்றாகி விட்டது. பொதுத் தேர்தலிலும் கூட, இது தொடர்கிறது; இந்நிலை மிகவும் வெட்கக்கேடானது.


நடிகர் விஷால் பேட்டி: இனி வரும் காலங்களில், கேபிள் ஒளிபரப்பாளர்களுக்கும், புதிய படங்களின் பாடல் வெளியீடு, திரைப்பட முன்னோட்டம் உள்ளிட்டவற்றை வெளியிடும் உரிமையை குறைந்த கட்டணத்தில் வழங்குவது, 'டிவி' உரிமம் பெறாத, சிறிய படங்களை குறிப்பிட்ட பகுதிகளில் திரையரங்கில் வெளியிடுவது, கேபிளில் ஒளிபரப்பு செய்ய விரும்புவோருக்கு தனியாக உரிமம் வழங்குவது குறித்து, ஆலோசித்து வருகிறோம். புதிய படங்கள், அனுமதியின்றி, கேபிள் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு:
பாகிஸ்தானில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த, லஷ்கர் - ஏ - தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் விடுவிக்கப்பட்டிருப்பது, கவலை அளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு இந்தியா நெருக்கடி அளித்து வருகிறது. இருதரப்பு ரீதியாக மட்டுமின்றி, சர்வதேச ரீதியாகவும் பாகிஸ்தானுக்கு, இந்தியா நெருக்கடி தருகிறது. பயங்கரவாத விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.




பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்ய, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள,3465 கணினி இயக்குபவர்களையும் கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.



தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அறிக்கை:
மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்ததோடு, ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றில் ஈடுபட்டோம். இதுவரை எப்படி ஈடுபட்டமோ, அதே போல் இனி வரும் காலங்களிலும் மக்கள் பணி, இயக்க பணி ஆகியவற்றில், த.மா.கா.,வின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். காமராஜர் ஆட்சியை, தமிழகத்தில் மீண்டும் அமைக்கவும், மூப்பனாரின் வளமான தமிழகம், வலிமையான பாரதம் படைக்கவும் வெற்றிப்பயணமாக அமையும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement