Advertisement

இது உங்கள் இடம்

கடனை அடைக்க சுலப வழிகள் இருக்கு!


அ.சரவணன், பெங்களூரிலிருந்து எழுதுகிறார்: போயஸ் கார்டனில் உள்ள, ஜெ., வீட்டு, 'ஏசி' அறையில் அமர்ந்து, அரசியலில் எந்த பதவியும் வகிக்காமலேயே சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எக்கச்சக்க சொத்துகளை சம்பாதித்து விட்டனர்.பாவம்... சசிகலா குடும்பத்திற்காக உயிரை விட்டார், ஜெயலலிதா.இதுவரை, சசிகலா குடும்ப உறவுகள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினரால் நடத்தப்பட்ட சோதனைகளில், 1,500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு சொத்து எப்படி வந்தது என, அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல்களில், 'சீட்' பெற, கட்சிக்காரர்கள் கொடுத்த வகையிலும், திரைமறைவில் இருந்து அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் திரட்டிய கமிஷன் வகையிலும் சேர்த்த சொத்துகளே இவை என, சாதாரண மக்களும் அறிவர்.அவற்றை பறிமுதல் செய்து, அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். அதை தடுப்பணை கட்ட அல்லது நதிநீர் இணைப்பிற்கு பயன்படுத்தலாம்.அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களின் வீடுகளில், கட்சி பாகுபாடின்றி, 'ரெய்டு' நடத்தினால், தமிழக அரசின் கடனை சுலபமாக அடைத்து விடலாம்!


சங்கத்தினரால் தான்கெட்ட பெயர்!

எஸ்.குமாரராஜா, சென்னையிலிருந்து எழுதுகிறார்: அரசு ஊழியர்களை விமர்சிப்பது தொடர் கதையாகி விட்டது.
அன்று, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களை, ஜெயலலிதா சிறையில் தள்ளினார்; இன்று, அரசு ஊழியர்கள் என்றால்,
மற்றவர்களுக்கு இளக்காரமாக தெரிகின்றனர்.
அரசு ஊழியர்களை குறை கூறுவோருக்கு, சில விளக்கங்களை தர விரும்புகிறேன்...
* அரசு ஊழியர்கள் ஒழுங்காக வரி செலுத்துபவர்கள். அவர்கள் சம்பளத்தின் தொகையை மறைக்க முடியாது
* ஓராண்டில் மொத்த வேலை நாட்கள் குறைவாக இருந்தாலும், அவரவர்களுக்கு, உரிய வேலையை, அவர்கள் தான் முடிக்க வேண்டும்; மற்றவர்கள் யாரும் முடிக்க முடியாது
* 'லஞ்சமே கொடுக்காமல், என் வேலையை உரிய வழியில் நானே முடித்துக் கொள்வேன்' என, உறுதியோடு கூறுவோரை அடையாளம் காட்ட முடியுமா...
' எப்படியாவது சீக்கிரம் வேலையானால் போதும்' என, குறுக்கு வழியில் செல்வோர் முதலில் திருந்தட்டும்
* குளம் துார்வாரவில்லை; சாலைகள் செப்பனிடப்படவில்லை; சாக்கடை சுத்தம் செய்யவில்லை என்பதற்கு காரணம், அரசு ஊழியர்கள் இல்லை. அந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள் தான்.எல்லா பிரச்னைகளையுமே, கவுன்சிலரிடமோ அல்லது எம்.எல்.ஏ.,க்களிடமோ சொல்லி, போராடி வெற்றி பெற வேண்டும். அதை இறுதியில் முடித்துத் தருவோர், அரசு ஊழியர்கள் தான்

* அரசு துறையில், 12 மணி நேரம் வேலை செய்யும், அரசு ஊழியர்களும் உள்ளனர்
* போனஸ் கொடுப்பது நியாயமில்லை என்றால், பொதுமக்களுக்கு இலவசம் கொடுப்பதும் நியாயம் இல்லை
* அரசு அலுவலகங்களில், மக்களை யாரும் கேவலமாக நடத்துவது கிடையாது. எங்கோ யாரோ ஒருவர் செய்யும் தவறுக்காக, ஒட்டுமொத்த அரசு ஊழியர்களையும் குறை சொல்வது சரியல்ல
* சங்கத் தலைவர்கள் வேலை செய்வது இல்லை; அவர்களை வேலை வாங்க தயக்கம் காட்டும் அதிகாரிகளால் தான் கெட்ட பெயர் கிடைக்கிறது.
வேலை செய்யும் அரசு ஊழியரிடத்தில் தான், எல்லா வேலைகளையும் வாங்குவர், அரசு அதிகாரிகள்.
வேலை செய்யாதவனிடம், 'அவனிடத்தில் கொடுத்தால், அவன் சரியாக முடிக்க மாட்டான்' எனக் கூறி, வேலை வாங்க மாட்டார்கள். இந்நிலை அதிகாரிகள் மட்டத்தில் மாற வேண்டும்!

ஜெ., வீட்டில்சோதனை:தப்பே இல்லை!


இ.கவிதா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை நுழைந்ததும், 'அது புனிதமான இடம். கோவில் போன்றது. அங்கே எப்படி வருமான வரித்துறையினர் நுழையலாம்' என, சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.போயஸ் கார்டன் வீட்டில், ஜெயலலிதா மட்டுமா வாழ்ந்தார்; அவரின் நிழலில் பதுங்கி, கண்ணில் படும் அடுக்குமாடி கட்டடங்களை எல்லாம் வாங்கி குவித்த, மெகா குடும்பமே வாழ்ந்தது.அப்படி இருக்க, ஜெயலலிதா வீட்டில், வருமான வரித் துறை சோதனை நடத்தியதில் தவறு ஒன்றும் இல்லை!சசிகலா இருந்த, வாழ்ந்த இடத்தில் தான் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா, இன்று உயிருடன் இல்லை.வெறும் கட்டடத்தை வைத்து கோவில் என, யாரும் கூறுவதில்லை. சிலையை வைத்து தான், அது புனிதமாக
வணங்கப்படுகிறது.வருமான வரித் துறைக்கு எழுந்த சந்தேகத்தால், சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் எல்லாம் சோதனை நடத்தப்பட்டது. இதில், சசிகலா வசித்த இடம் மட்டும் தான் பாக்கி இருந்திருக்கிறது.அப்படி இருக்க, ௩௦ ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பதுங்கி இருந்த வீட்டில் தான் சோதனை நடத்தப்பட்டுள்ளதில் என்ன தவறு?பஞ்சாபில் பொற்கோவிலுக்குள், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போதைய பிரதமர், இந்திரா உத்தரவால், கோவிலுக்குள் அதிரடியாக ராணுவம் நுழைந்து, அவர்களை வேட்டையாடியது.ஏமாற்றுக்காரர்களையும், மோசடி காரர்களையும் பிடிக்க, ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்துவதில், தப்பு ஒன்றும் இல்லை.'ஜெயலலிதா தான், ஏ ஒன் குற்றவாளி; சசிகலாவை காப்பாற்றாமல் தனி மரமாக விட்டு சென்று விட்டார்' என, சிலர் சேற்றை வாரி இறைக்கின்றனர்.ஜெயலலிதாவை, குற்றவாளி என நீதிமன்றம் சொன்னாலும், அவரால் கோடிகளிலும், பில்லியன்களிலும் புரண்டு கொண்டிருக்கும் சசி சொந்தங்கள், இப்படி சொல்வதற்கு நாகூச வேண்டும்.அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், ஜெயலலிதா தான் காரணம் என்பதை, நன்றி மறந்து பேசுகின்றனர்.'எதற்கெடுத்தாலும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது, சும்மா விடாது' என வசனம் பேசுகின்றனர்; கேட்கவே நாராசமாக உள்ளது!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement