Advertisement

இழுபறி முடிந்ததுஅடுத்தது என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னும், பல விதமான கருத்துகள் அலசப்பட்ட சூழ்நிலையிலும், 'இரட்டை இலை' சின்னம், மீண்டும் உயிர்பெற்று எழுந்திருக்கிறது. தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்த சேர்க்கை, பலன் தந்திருக்கிறது. இவர்கள் மனமொன்றி இணைந்தனரா, இல்லையா என்பதை அக்கட்சியில் உள்ள, பண்ருட்டி ராமச்சந்திரன், மதுசூதனன், செங்கோட்டையன் போன்றவர்கள் இன்றைய நிலையில் விளக்கினால், பல புதிர்கள் விலகும். ஒரு சாதகமான முடிவு வந்தது, இந்த அணிக்கு, இயற்கையாகக் கிடைத்த வரமாகும். இதில் மக்கள் ஆதரவு பெறும் தலைவர்கள் எவர் என்பதை, கட்சியின் பொதுக்குழு கூடி, நிர்வாக அமைப்புகள் மீண்டும் உருவாக்கப்பட்டால், தெரியும்.
ஏனெனில், அ.தி.மு.க., கட்சி உருவாக்கம் முற்றிலும், தனிநபர் முடிவுகளின் அடிப்படையில் எழுப்பப்பட்டது. புதிதாக கட்சியில் உழைத்து, செல்வாக்கு பெறுபவர்கள் என்ற அடிப்படையை வளர்க்கும் போக்கு குறைவாக இருந்தது. தொடர்ந்து தேர்தல் வெற்றியைப் பெற்ற ஜெயலலிதா எதை முடிவு செய்கிறாரோ, அதே நிரந்தரமாக இருக்கும். அதில், தோழி சசிகலா செல்வாக்கும் இருந்தது என்பதை, இப்போது ெவளியாகும் பூசல்கள் காட்டுகின்றன.
மெல்ல அரசியலில், 'காலில் விழும் கலாசாரம்' உருவானது. தி.மு.க.,வில் சட்ட திட்டங்கள் இருந்த போதும், குடும்ப வட்டத்தை தாண்டி, தலைமைப் பதவி கிடைப்பது குதிரைக் கொம்பு. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணமுல், எல்லாமே தனித்துவத் தலைவரை நம்பி இயங்குகின்றன. இப்போது, தேர்தல் கமிஷன் அளித்த தீர்ப்பில் சசிகலா கோஷ்டியின் தினகரன் அளித்த ஆவணங்கள் அல்லது மற்ற ஆவணங்களை சரிபார்த்து, யாரிடம் உண்மையான கட்சித் தொண்டர்கள் இருக்கின்றனர் என்பதை எளிதில் முடிவு செய்ய முடியாது என, கமிஷன் குறிப்பிட்டிருக்கிறது. பீஹார் நிதிஷ் குமாருக்கு, ஐக்கிய ஜனதா சின்னம், 'அம்பு' கிடைத்தது, உ.பி.,யில் அகிலேஷுக்கு, 'சைக்கிள்' சின்னம் கிடைத்தது போல, 'இரட்டை இலை' முடங்காமல் தப்பியது. இவ்வழக்கில், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் வாதாட, 80 வழக்கறிஞர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்கு செலவழிக்கப்பட்ட தொகை குறித்து, இதில் சம்பந்தப்பட்ட, தீபா அணி உட்பட எல்லாக் அணியினரும் ெவளிப்படையாக தெரிவித்தால் நல்லது.
இப்போது ஆட்சிக்கட்டிலில் இருக்கும் பழனிசாமி அணிக்கு, தமிழகத்தில், எம்.எல்.ஏ.,க்கள், ௧௧௧ பேரின் ஆதரவு இருக்கிறது என்பதும், சட்டசபையில், தனி மெஜாரிட்டி பலம் இல்லை என்பதும் வெட்டவெளிச்சம். சபையில் ஓட்டெடுப்பு நடத்தி, ஆட்சியை அகற்ற, தி.மு.க., முயற்சி செய்வது, அக்கட்சி எடுக்கும் அடுத்த உத்திகளைப் பொறுத்து அமையும்.
மன்னர் போல கட்டளையிட்டு, நினைத்ததை நிறைவேற்றும் தலைமை இன்று, அ.தி.மு.க.,வில் இல்லை. அத்துடன், அ.தி.மு.க., தொண்டர்கள் கட்சியின் வெற்றிக்கு, எந்த அளவு பணியாற்றுவர் என்ற கேள்வி, இனி அவர்களுக்குள் எழும்.
பழனிசாமி அணிக்கு, பார்லிமென்டில், 40 எம்.பி.,க்கள் பலம் உள்ளது. அவர்கள் மத்திய ஆட்சியுடன் இணைந்து செயல்பட்டு, தங்கள் அணியை வலுவாக்கிப் பாதுகாக்க வேண்டும். முந்தைய ஆட்சியில், மந்திரி பதவிக்கு, தி.மு.க., பேரம் பேசியது போன்ற வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், பா.ஜ., அதிக, எம்.பி.,க்களை பார்லிமென்டில் கொண்டிருக்கும் பெரிய கட்சியாகும்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தேதி அறிவிப்பு, மக்கள் செல்வாக்கு யாருக்கு என்பதை அளக்க உதவும் அளவுகோலாகும். ஏனெனில் இன்றைய நிலையில், சிறை செல்லும் அளவிற்கு வழக்குச் சிக்கல் ஏதாவது வராதவரை, தினகரனே, 'தொப்பி' சின்னத்துடன் போட்டியிடலாம்.
அப்போது அவரை தற்போது ஆதரிக்கும், 18 எம்.எல்.ஏ.,க்கள் ஒரு சேர அணிவகுப்பரா... வழக்கறிஞரும், எம்.பி.,யுமான நவநீத கிருஷ்ணன் போன்ற ஆதரவு, எம்.பி.,க்கள் எந்த அளவுக்கு முன்னிற்பர் என்று உறுதி கூற முடியாது.
தி.மு.க., அதன் தோழமைக்கட்சியான காங்கிரசுடன், வெற்றி வேட்பாளராக மருது கணேஷை களமிறக்கினாலும், அ.தி.மு.க.,வில் எந்த அணியை அதிகமாக அவர்கள் குறை கூறப் போகின்றனர்; எந்த அணியின் தொண்டர்களை மறைமுகமாக தேர்தல் காலத்தில் கவருவர் என்பதை, இனி காணலாம். இத்தேர்தலில் கெடுபிடிகள் அதிகரிப்பால் ஒவ்வொரு சாவடியும், இதற்கு முன் கண்டிராத கட்சி அரசியல் போக்கைத் தாண்டி, மக்கள் மனதில் நின்று, யார் அதிக ஓட்டுக்களைப் பெறப் போகின்றனர் என்பதற்கான ஆய்வு களமாக அமையப் போகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement