Advertisement

பத்மாவதி திரைப்படம்அதிக எதிர்ப்பு ஏன்?

மூன்றுக்கும் மேற்பட்ட மாநில முதல்வர்கள் திரையிட மறுத்த, பத்மாவதி ஏற்படுத்திய பரபரப்பு மிகவும் அதிகம். ஹிந்தி சினிமாவில் பிரமாண்ட காட்சிகள் அடங்கிய இப்படம், வரலாற்றை அடிப்படையாக கொண்டதா, ஆவணங்களை உள்ளடக்கியதா, கற்பனைக் கதாபாத்திரங்களை கொண்டதா என்பது, இன்னமும் முடிவாகவில்லை. திரைப்படத் தணிக்கைக்கு முன், எப்படி இது பல்வேறு ஊடகங்களில் ஆரவாரத்துடன் ெவளிவந்தது என்பது வேறு விஷயம்.
'பாலிவுட்' அல்லது, 'கோலிவுட்' என எங்கானாலும், கூடுதல் பட்ஜெட் உடைய சினிமாப் படங்களைத் திரையிடும் முன், அதில் சில பகுதிகளாகக் காட்டி, அதிக லாபம் ஈட்டுவதற்கு வழி செய்து கொள்வது வழக்கம். கருத்துரிமை, திரைப்பட உருவாக்கத்தில் சுதந்திரம் என்பதற்கு, அளவு கடந்த எல்லை இருக்கிறதா என்பதை, யார் முடிவு செய்வது?
நல்ல வேளையாக, இப்படத்தின் சர்ச்சைகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆராய முயலவில்லை. தணிக்கையாகாத விஷயத்தில் முன்னதாக எதற்கு கருத்து சொல்ல வேண்டும் என தெரிவித்து, நாசுக்காக இந்த மனுவை முடித்து விட்டார். எதற்கெடுத்தாலும் மத்திய அரசு பதில் கூற வேண்டியதில்லை. திரைப்படம் என்பதில் எதையும் திரிக்கலாம்; அது மக்கள் விரும்பும் கருத்தாக அமையலாம். மேலும், திரைப்படத் தயாரிப்பில், 'அனிமேஷன்' என்ற அற்புதம் அதிகரித்தபின், சாதாரண மனிதன் கண் பார்வையில் உண்மையை உணர முடியாத, 'அதிவேக 27 ஷாட்' என்ற மாயை உத்தி, பலரைக் கட்டிப் போடுகிறது.
இது விஞ்ஞான யுகம் என்றாலும், வரலாற்றை திரிக்கும் போது அல்லது நடந்த சம்பவங்களை காட்சிகளாக்கும் போது, தங்கள் மன ஓட்டப்படி வடிவு கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு, கடிவாளம் தேவை. அமெரிக்காவில் ஜனநாயகம், அடிப்படைக் கருத்தாகும். அதை எதிர்த்த ஹாலிவுட் படம் வராது. சீனாவில் அதிபர் ஜி வந்த பின், அங்கு இயேசு பிரான் படம் குறைந்து வரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சிறுவர்களை சீரழித்த பிரிட்டன் பாதிரியார்கள் செயலை, போப்பாண்டவர் கடுமையாக சாடி, தண்டித்தது உண்டு. அதற்காக இஸ்லாமிய நாடுகளில் என்ன நடக்கிறது என்ற கேள்வி தேவையற்றது. ஏனெனில், கருத்து சுதந்திரம் என்பதை ஆதரிக்கும் பலரும், பத்மாவதி என்ற பெயருடன் கதைப்போக்கு இருந்திருந்தால் வருந்தியிருக்க மாட்டார்கள். நம் நாட்டை, 700 ஆண்டுகள் ஆட்சி புரிந்த முகலாய மன்னர்களில் ஒருவரான அலாவுதீன் கில்ஜியை, உச்சத்தில் வைப்பது மட்டும் அல்ல; பத்மாவதியை அவரது காதலுக்கு ஏங்குபவராக இயக்கியது, வரலாற்று திரிபு ஆகும். சித்துார் கோட்டை, சுற்றுப்புறங்கள், காட்சிகள் ஆகியவற்றுடன் இப்படப் புனைவு இருப்பதால், இதை திரையிடுவதில் தயக்கம் காட்டுகிறார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா. மேவார் குடும்பத்தைச் சேர்ந்த சித்துார் ராணி பத்மினி யின், 78வது வாரிசான மகாரணா அரவிந்த் மஹார் கொந்தளிப்புடன் இருப்பதை, சற்று ஜனநாயக உணர்வுடன் வசுந்தரா பிரதிபலிக்கிறார். அதே போல, ம.பி., காங்கிரஸ் தலைவர்களில் ஜோதிர் ஆதித்யா, திக்விஜய் சிங் போன்றோர் மட்டும் அல்ல; பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும் இந்த கருத்து சுதந்திரத்தை ஏற்கவில்லை. இவர்களுக்கு இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் நன்கு தெரியும். உ.பி., முதல்வர், அடிப்படையில் ஹிந்து தலைவர் என்பதால், அரசியல் கலையை அதிகம் கற்றவர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தன்னை அடைய முயன்ற கில்ஜி செயலை வெறுத்து ஒதுக்கிய சித்துார் ராணி, கடைசியில், கண்ணாடி மூலம் தன் முகத்தை மட்டும் காட்ட முன்வந்தார். அதையும் தாண்டி வெற்றிக்களிப்பில் கில்ஜி, அவரை அடைய முயன்ற நடவடிக்கையை தடுக்க, நுாற்றுக்கணக்கான பெண்களுடன் தீக்குளித்தவர் பத்மினி. ஆசைப்படும் கதாநாயகியாக வர்ணிக்க, இன்று நடிகை தீபிகா படுகோனே உருவகம் பெற்றிருக்கிறார். அவருக்கு முழு வரலாறு தெரிய வாய்ப்பில்லை.
இயக்குனர் பன்சாலி தன் ஆரம்ப முயற்சிகளின் போது வரலாற்றையோ, இன்று வாழும் மன்னர் பரம்பரையினரையோ அணுகியிருக்கலாம். மாறாக, திரையிடுவதை ஒத்திப்போட்டு, தணிக்கைக்கு காத்திருப்பது, சுதந்திரத்தை பயன்படுத்தியதன் எதிரொலியாகும்.
அதற்காக நடிகையை அல்லது இயக்குனரைக் கொல்வதாக கூறி, அதற்கு பிணைத் தொகை வைக்கும் செயல் ஏற்கத்தக்கதல்ல. இருப்பினும், இன்றைய மாறுபட்ட அவசர சூழ்நிலையில், தங்கள் உணர்வை மதிக்கவில்லை என்றதும், சட்டத்தை கையில் எடுக்கும் ஆசை சிலருக்கு அதிகரித்திருக்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement