Advertisement

கேரள கூட்டணி அரசுக்குபுதிய சிக்கல் ஏன்?

நில ஆக்கிரமிப்பில் சிக்கிய கேரள அமைச்சர், தாமஸ் சாண்டியின் ராஜினாமா, அந்த அரசுக்கு பெரிய அவப்பெயரை தந்திருக்கிறது. சாண்டி, கேரளாவின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். இவர், அரசியல் பிரவேசம், கேரள மாணவர் யூனியன் தலைவராக இருந்ததில் இருந்து, பல கட்டங்களாக வளர்ந்தது. முன்னாள், காங்., முதல்வர், கருணாகரனுக்கு வலது கரமாக விளங்கியவர். அரசியலில் இருந்து ஒதுங்கி, மத்திய கிழக்கு நாடுகளில் காலுான்றி, 'குவைத் சாண்டி' என்ற பெயர் பெற்று, பெரும் கோடீஸ்வரர் ஆனவர்.
தேசியவாத காங்கிரஸ், எம்.எல்.ஏ., என்ற முறையில், மார்க்சிஸ்ட் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி அரசில், போக்குவரத்து துறை அமைச்சர் என்ற முறையில், அதிக செல்வாக்குடன் இருந்தவர். ஆலப்புழா பகுதியில் நில ஆக்கிரமிப்பு செய்த இவர் செயலை, கேரள உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. இவர் பதவி விலகுவதை, அமைச்சரவை கூட்டத்தில், இ.கம்யூ., அமைச்சர், சந்திர சேகரன், முதல்வர் பினராயி விஜயனிடம் வலியுறுத்தினார்.
தெளிவாக அவர், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க மறுத்தது, முதல்வருக்கு சிக்கலை அதிகமாக்கி, ஒரு வழியாக சாண்டி பதவியை ராஜினாமா செய்தார். பினராயி விஜயன், தற்போது இப்பொறுப்பை கூடுதலாக கவனிக்கிறார். இ.கம்யூ., பிரதிநிதியான, அமைச்சர் சந்திர சேகரன், நில ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொறுப்பில் இருப்பவரும் கூட. ஊழல் அழுக்கேறியவர் என்ற பொருளில், சாண்டியை இக்கட்சியினர், 'விழுப்பு பண்டம்' அதாவது, 'அழுக்கேறிய துணி' என, மலையாளத்தில் வர்ணிக்கின்றனர். பணக்காரர்களை ஆதரிக்கும் செயலில், இடதுசாரிகள் இருப்பதாக, இ.கம்யூ., தலைவர்கள், ஏற்கனவே பிரசாரம் செய்திருக்கின்றனர்.
இம்மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கட்சியினர், தங்களது கட்சியில், பிரகாஷ் கராத்திற்கு அதிக ஆதரவு காட்டி, பொதுச் செயலர், யெச்சூரியை இரண்டாவது இடத்தில், ஏற்கனவே வைத்தவர்கள்.
கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பது சாதாரணம் என்றாலும், கம்யூனிச கருத்துக்களை அடிப்படையாக கொண்டிருக்கும் மற்றொரு பிரிவான, இ.கம்யூ., கட்சி, இந்த விஷயத்தில் கடுமையான முடிவு எடுத்தது, பிரச்னைகளை உருவாக்கும். கூட்டணியில் உள்ள, தேசியவாத காங்கிரசின் மற்றொரு, எம்.எல்.ஏ., சசிதரன், ஏற்கனவே, பாலியல் புகாரில் பதவி விலகியவர். அவர் அமைச்சராகும் பட்சத்தில், கூட்டணிக்கு அவப்பெயர் அதிகரிக்கும்.
காங்., கூட்டணி ஆட்சி, ஊழல் மிக்கது எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அணி, இன்று, இச்சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. தனிப்பட்ட அளவில், முதல்வர் விஜயன் நல்லவர் என்ற பெயரை களங்கப்படுத்தும். இந்நிலையில், கேரளா வந்த முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் கூறிய தகவல், இடதுசாரி கூட்டணிக்கு ஆதரவாக இல்லை. அவர், 'மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது; பெண்களுக்கு பாதுகாப்பில்லை' எனக் கூறிய கருத்தை, கேரள அரசு கண்டு கொள்ளுமா அல்லது ஒதுக்கி விடுமா என்பது அடுத்த கேள்வி. அடிக்கடி அரசியல் கொலை தொடரும் ஒரு மாநிலமாக உள்ளது. இம்மாநில சட்டம் - ஒழுங்கை கண்டித்து, சமீபத்தில், பா.ஜ., தலைவர், அமித் ஷா தலைமையில், பாத யாத்திரை நடத்தப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட விஷயம், ஆர்.எஸ்.எஸ்., - மார்க்சிஸ்ட் மோதல் என்பதும், அதில், சங்கபரிவார் தலைவர்கள் கொல்லப்படுவதாகவும் புகார் கூறப்பட்டது. அது, முற்றிலும் வேறு விஷயம்.
'சட்டம் - ஒழுங்கு, மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆட்சியில் சரியில்லை' என, முன்னாள் பிரதமர், மன்மோகன் கூறியிருப்பது, தேசிய கட்சிகள் இம்மாநிலத்தை பார்க்கும் பார்வையின் அடையாளமாக கொள்ளலாம். இடதுசாரிகள், நீண்ட காலமாக காங்கிரசை ஆதரித்தவர்கள். தற்போது, தனித்துவம் கொண்ட கட்சியாக செயல்பட வேண்டுமா அல்லது கூட்டணி என்ற அடிப்படையில் செயல்படுவதா என, சிந்திக்க துவங்கி உள்ளனர். வட மாநிலங்களில் தேர்தல் நடந்தாலும், காலுான்ற முடியாத நிலையில் உள்ள இக்கட்சி, கேரளாவிலும் அதிக சிக்கலை சந்திப்பது, அக்கட்சிக்கு சாதகமான சூழ்நிலையல்ல. இப்போதைக்கு, தேர்தல் வரும் சூழ்நிலை இங்கு இல்லை என்றாலும், காங்கிரசும், இந்திய கம்யூனிஸ்டுகளும், அடுத்தடுத்த சிறு தொந்தரவுகளை தரும் வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. பொதுவாக, கூட்டணி தர்மம் என்பதை காரணமாக்கி, சட்டம் - ஒழுங்கு பாதிப்பை அம்மாநிலம் சந்திக்கும் பட்சத்தில், அது, அக்கூட்டணி ஆட்சியின் நிர்வாகத்திற்கு, அதிக இடைஞ்சல்களை தரலாம்.
நீண்ட கால அரசியல் தலைவரான பினராயி விஜயனுக்கு, அரசியல் சவால்கள் ஏராளமாக காத்திருக்கின்றன.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement