Advertisement

அதிக முக்கியத்துவம் பெற்ற கவர்னர் புரோஹித்!

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், திடீரென அதிக முக்கியத்துவம் பெற்று விட்டார். இதற்கு முன் மஹாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் இருந்தவரை, அவரையும் பல கோணங்களில் விமர்சித்தது உண்டு. ஆனால், சிறிய கட்சி முதல், பெரிய கட்சி தலைவர்கள் அனைவரையும், இப்போது நிரந்தர கவர்னராக செயல்படும் புரோஹித் சந்தித்திருக்கிறார்.
கவர்னர் பதவி என்பது ஜனாதிபதியின் அங்கமாக, இந்திய இறையாண்மையைக் காக்க உருவாக்கப்பட்டது. இதில் மிகப்பெரும் கவுரவம் காத்த பலரும், அப்பதவியை அலங்கரித்தது வரலாறு. ஆனால், அதிக அளவில், 60க்கும் மேற்பட்ட முறை, மாநில ஆட்சிகளை, அரசமைப்பு சட்டவிதி, 356 மூலம் கலைத்த பெருமை, காங்கிரஸ் ஆட்சியின் ஒரு அம்சமாகும். அதில் கவர்னர், கே.கே.ஷா அப்போது, தி.மு.க., ஆட்சியை கலைத்ததும் அடக்கம்.
கர்நாடக முதல்வராக இருந்த பொம்மை, கவர்னரின் அறிக்கை அடிப்படையில், மத்திய அரசு சிபாரிசுடன், தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளை கலைக்கும் முடிவை, வழக்காக்கி வென்றார். அதற்கு பின் ஆட்சிக் கலைப்பு என்ற நிலை மாறி, மத்திய உள்துறைக்கு சில குறைகளை சுட்டிக்காட்டும் அதிகாரம் மட்டும், கவர்னர்களிடம் இருக்கிறது. அதையும் இப்போது அதிகம் பயன்படுத்துவது இல்லை. இதுவரை நீண்ட நாட்களாக, தமிழகத்தில் கவர்னராக இருந்த ரோசய்யா, பிரிவுபடாத ஆந்திர மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியில் பெரிய தலைவராக இருந்தவர், நிதியமைச்சராக இருந்தவர். அங்கு அடுத்த தலைமை மாற்றம் தேவை என்று கருதி, அவருக்கு கவர்னர் பதவி தரப்பட்டது. அவர் பதவி வகித்த போது சர்ச்சைக்குரிய கிரானைட் ஊழல் உட்பட பல விஷயங்கள், தமிழகத்தில் வெளிச்சத்திற்கு வந்தன; பல்கலைக்கழக முறைகேடுகளும் பேசப்பட்டன. ஆனால், அவற்றை அவர் கையாளவில்லையா அல்லது அன்றைய முதல்வருடன் ஆலோசனை நடத்தினரா என்பது இன்றைய விவாதம் அல்ல.
முதல்வர் ஜெயலலிதா மறைந்ததும், அக்கட்சியின் நான்காண்டு ஆட்சி என்னவாகும் என்பதை மாற்றி, சட்ட அடிப்படையில் புதிய முதல்வர் தேர்வு, கவர்னர் உரையுடன் சபை நடப்பதற்கு உரிய நடைமுறைகள் மேற்கொண்டதில், முந்தைய கவர்னர் வித்யாசாகர் ராவ் பணியாற்றியது சிறப்பாகும். அதற்காக, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்ததின் விளைவு என்ற அர்த்தமல்ல.
மிகப்பெரும் சட்டசபை பிரதிநிதித்துவம் உடைய கட்சி, சபையில் இடம் பெறாத கட்சியை தன்னுடன் அணி சேர்க்க அதிகம் சிந்திக்கும். குஜராத் சட்டசபைத் தேர்தலில் பலவீனமாக உள்ள காங்கிரஸ் கட்சி, இன்று, உ.பி.,யின் அகிலேஷ் கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு, ஐந்து இடங்களே ஒதுக்கியிருக்கிறது. பகுஜன் கட்சியின் மாயாவதி கேட்ட, 15 தொகுதிகள் தர மறுத்ததால், அக்கட்சி அங்கு போட்டியிடவில்லை.
தவிரவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனி மெஜாரிட்டி இன்றி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் ஆட்சி நடத்திய போதும், அக்கட்சிக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் தரவில்லை. அது, கூட்டணி தர்மத்தில் அடங்கும்.
கவர்னர் புரோஹித், முதலில் காங்கிரசில், எம்.பி.,யாக இருந்தவர். அரசமைப்பு சட்டம் தெரிந்தவர் என்பதுடன், பத்திரிகையாளரும் ஆவார். மாநிலத்தின் பல பகுதிகளில் சமூக அக்கறை கொண்ட விஷயங்கள் தொடர்பாக சுற்றுப்பயணம் செய்ய, அரசு முன் அனுமதி பெற வேண்டியதில்லை.
கோவையில் அவர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தியதால், அரசுக்கு ஆபத்து என்பது சரியான வாதமல்ல. அத்துடன், தமிழக கவர்னர் அதிகாரத்தையும், புதுச்சேரி துணை நிலை ஆளுனர் பொறுப்புகளையும் ஒப்பிடுவது, மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். மாநில அரசின் உரிமைகள் சட்ட அடிப்படையில் அதிகமாக உள்ளன.
தமிழகத்தில் சமீப காலமாக, 'மாநில சுயாட்சி' என்ற கருத்தை, தி.மு.க., உட்பட பல கட்சிகள் கூறுகின்றன. 'கூட்டுறவு பெடரலிசம்' என்ற தத்துவத்தில், மத்திய அரசு நிதிக்கமிஷன் பங்கீடு உட்பட பல விஷயங்களில் முடிவு எடுக்கும் போது, இவர்கள் எங்கே வேறுபடுகின்றனர் என்பதை, இப்போது தெரிவித்தால் நல்லது.
ஏனெனில், வெளியுறவுக் கொள்கையின் முக்கிய முடிவுகள், சில பொருளாதார நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் அவ்வப்போது ஜனாதிபதியை சந்தித்து பேசுவது மரபு. அதே போல கவர்னரை, முதல்வர் உரிய நேரங்களில் சந்திப்பதும் நடைமுறையே.
அப்படியிருக்கும் போது, பொறுப்புள்ள பதவி வகிப்பவர், தனி அதிகார மையமாக செயல்பட வேண்டிய அவசியம் எழாது என்பதை உணர வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement