Advertisement

'வழுவழு' சாலைகள் நமக்கு எப்போது?

தமிழகத்தில் இத்தடவை, வட கிழக்கு பருவ மழை கடலோர மாவட்டங்களிலும், சென்னை, அதை ஒட்டிய காஞ்சி, திருவள்ளூரிலும் கணிசமாக பெய்திருக்கிறது.
காற்று இல்லாத மழையாக இருந்ததால், அதிக சேதாரம் இல்லை. அதே சமயம், மழை என்பதை கண்டறியாத, மாவட்டங்களும் உண்டு. ஆனால், குடிமராமத்து திட்டம் மூலம் ஏரிகள் பராமரிப்பு, மக்களை மழைநீர் மூழ்கடிக்காமல், சென்னை போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் ஆகியவை, இத்தடவை சற்று வேகமெடுத்திருக்கின்றன. இதற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒரு காரணமாக அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களும், மக்கள் குறைகளை கண்டறிந்து நிவாரணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், உள்ளாட்சி தேர்தல் வராத சூழ்நிலையில், அதிகாரிகள் மட்டும் இயக்குவதால், இம்மழையால் ஏற்படும் பாதிப்புகளை கையாள வேண்டிய அவசியம், அரசுக்கு அதிகம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை திட்டம் என்பது தனி விஷயம். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர், நிதின் கட்கரி கருத்துப்படி, 'சாலைகள் அதிகரிக்கின்றன; கூடவே, சாலை விபத்துகளும் அதிகரிப்பது கவலை தருகிறது' என்கிறார்.
அதே சமயம், நம் கட்டமைப்பு வசதி அதிகரிக்க, பொருளாதார வசதி மேம்பட, சாலைகள் தரமாக, சீராக, எரிபொருளை நாசமாக்காத வகையில் இருப்பது அவசியம். பிரதமர் கிராம வளர்ச்சி திட்டத்தின்படி, 2017 - 18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், மத்திய அரசு, 19 ஆயிரம் கோடி ரூபாயும், மாநில அரசு, 10 ஆயிரம் கோடி ரூபாயும் செலவழிக்க முற்பட்டிருக்கின்றன.
கிராமப்புற சாலைகள் மேம்பாடு அதிகரிப்பதில், அக்கறை காட்டப்படுகிறது. அதன் அடையாளமாக, அடுத்த ஆண்டில், நாள் ஒன்றுக்கு, 100 கி.மீ., சாலை அமைய, மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், சாலை வளர்ச்சி திட்டத்திற்கு, லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க, முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சாலை அமைப்பு பணிகளுக்கு, 'டெண்டர்' விடுவதில் புதிய நடைமுறைகள், இப்பணியில் சிறந்த, 10க்கும் மேற்பட்ட மிகப்பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அப்பணிகளை ஒதுக்குதல் ஆகியவை, அரசின் திட்டத்தில் அடக்கம். திட்டமிட்ட காலத்தில், சிறப்பாக பணிகளை முடிக்கும் நிறுவனங்களுக்கு, தனியாக, 10 சதவீத போனஸ் தர, மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
இவற்றை பார்க்கும் போது, பெங்களூரில் அதிக மழை காரணமாக, தெருவில் ஏற்பட்ட சாக்கடை பள்ளத்தில் பலர் விழுந்தது செய்தியானது. தமிழகத்தில், சென்னையின் சில இடங்களில் சாலை, குண்டும், குழியுமாக இருக்கும் புகார் ஏராளம். திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில், அதிக வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால், மழைநீர் வடிகால்கள், மற்ற வசதி குறைவு. இப்போதுள்ள நிலையில், அலங்கோலமாக உள்ள சாலைகளை கண்டறிந்து, புதிதாக போட வேண்டிய அவசியம் வந்துள்ளது. இதை உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள் கவனித்து, சீர்திருத்தியாக வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த ஒட்டுமொத்த தகவல், ஆவணப்படுத்தப்படும் போது, தமிழக அரசின் கீழ் உள்ள சாலைகள் குறித்த ஒட்டுமொத்த பார்வையும் தேவை.
முந்தைய கால டெண்டர் அணுகுமுறை, 'பிட்டுமென்' மூலம் அமையும் தார்ச்சாலைகளை மழைக் காலத்திற்கு முன் போடுவது, அது கரைந்து காணாமல் போவது அல்லது அதிக வாகன போக்குவரத்து உள்ள இடங்களில், தரம் குறைந்த சாலைகள் என்ற நிலை மாற வேண்டும்.
சென்னை போன்ற பெரிய நகரங்களில், சாலை உருவாக்கிய பின், பாதாள சாக்கடை அல்லது மின் பராமரிப்பு பணி, புதிதாக மழைநீர் கால்வாய் பணி என, துவங்குவது போன்ற அவலங்கள் குறைய வேண்டும். ஏனெனில், போக்குவரத்து சாதனங்கள் பயன் அதிகரிக்காதபட்சத்தில், பொருளாதார வளர்ச்சி இருக்காது. வளர்ந்த மாநிலம் என்ற பெயர் எடுத்த போதும், இத்துறையில் உள்ள குளறுபடிகள், தமிழகத்தில் தொடரத் தான் செய்கின்றன. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், பீஹாரில், 'என் ஆட்சி நிரந்தரமாக இருந்தால், தலைநகர் பாட்னா சாலை, நடிகை ஹேமாமாலினி கன்னத்தை விட வழுவழுப்பாக இருக்கும்' என்றார், லாலு பிரசாத். இப்போது, ம.பி., முதல்வர், தம் மாநில தலைநகர் போபால் சாலைகள், அமெரிக்க சாலைகளை விட, அருமையாக உள்ளதாக கூறுகிறார். தமிழகத்தில், 'சிங்கார சென்னை' எப்படி உள்ளது? ஆகவே, மாவட்டங்களில், பேரூராட்சி களிலும் சாலைகள் பராமரிப்பு மற்றும் புதிய சாலைகள் குறித்த தன் நிலையை, அரசு அடுத்த பட்ஜெட்டில் உணர்த்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement